ஒடிசா மாநிலம், புவனேஸ்வரைச் சேர்ந்த ராகேஷ் சாஹு என்ற பேஸ்ட்ரி கலைஞரும் அவரது குழுவினரும் சேர்ந்து இந்திய அணி மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்தும் வகையில் சாக்லேட்டால் ஆன கிரிக்கெட் உலகக் கோப்பை மாதிரியை வடிவமைத்துள்ளனர்.
இது குறித்து பேசிய ராகேஷ், "தற்போது நடந்து வரும் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில், இந்திய அணி தொடர் வெற்றிகள் மூலம் உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. எனவே, இந்திய அணியை உற்சாகப்படுத்துவதற்காக இந்த உலகக் கோப்பையின் சாக்லேட் மாதிரியை நாங்கள் வடிவமைத்துள்ளோம். இந்த உலகக் கோப்பை மாதிரியை எட்டு பேர் சேர்ந்து மேலிருந்து கீழாக செய்து முடிக்க மொத்தம் மூன்று நாட்கள் ஆனது." என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "இந்த கோப்பையை முழுக்க முழுக்க சுமார் 10 கிலோ சாக்லேட்டுகளால் செய்யப்பட்டுள்ளது. மேலும் கோப்பையின் மூன்று தூண்களில் மேல் பகுதியில் உள்ள பந்தைத் தயாரிப்பது மிகவும் கடினம் மற்றும் சாக்லேட்டை உருகாமல் வெப்ப நிலையை பராமரிப்பது மிகவும் சவாலாக இருந்தது. இருப்பினும் எனது குழுவினரின் முழு பங்களிப்பால் இதனை என்னால் செய்து முடிக்க முடிந்தது. மேலும் நாங்கள் அனைவரும் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்வார்கள் என்று நம்புகிறோம்" என்று ராகேஷ் கூறினார்.
இதற்கு முன்னர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராகேஷ் 100 கிலோ எடையுள்ள சாக்லேட் விநாயகர் சிலை மற்றும் 8 கிலோ சாக்லேட்டைப் பயன்படுத்தி ஹாக்கி உலகக் கோப்பையின் மாதிரியையும் வடிவமைத்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.
- மு.குபேரன்.