நெட்டிசன்கள் வைத்த பெயர் சீம்ஸ் என்றாலும் இதன் நிஜப்பெயர் பால்ட்ஸ் (Balltze). இது ஷிபா- இனு என்னும் ரகத்தைச் சேர்ந்தது. இது சீனாவின் ஹாங்காங் நகரைச் சேர்ந்த கேத்தி என்ற பெண்மணியின் வளர்ப்பு நாய். பால்ட்ஸ்சின் உரிமையாளர் எதேச்சையாக அதன் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட ஓவர்நைட்டில் உலகப்புகழ் அடைந்தது பால்ட்ஸ்.
2017 முதல் சீம்ஸ் மீம்கள் பிரபலமாக இருந்தாலும் கொரோனா காலக்கட்டத்தில் இது உலகப் புகழ் அடைந்தது. பால்ட்ஸ் வெளிப்படுத்திய வித்தியாசமான முகபாவங்கள் ஒவ்வொன்றும் சமூக வலைத்தள மீம் கிரியேட்டர்களுக்கு அமுத சுரபியானது.
உடல்மொழி எப்படி உலக மக்கள் எல்லோராலும் புரிந்துகொள்ள கூடிய ஒன்றாக இருக்கிறதோ அதைப்போலவே சீம்ஸ் மீம்களும் மொழி, இனம், தேசம் கடந்து உலக மக்கள் எல்லோரும் புரிந்து ரசிக்கும் வகையில் இருக்கும்.
கடந்த சில நாட்களாகவே புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை மேற்கொண்டு வந்திருந்த நிலையில் நேற்று (Aug 19) நண்பகல் 17 வயதான பால்ட்ஸ் மரணத்தை தழுவி இருக்கிறது.
இதுகுறித்து அதன் உரிமையாளர் கேத்தி, "பால் ஆகஸ்ட் 18 அன்று உயிரிழந்து விட்டான். கடைசியாக அவனுக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின் அவனுக்கு அடுத்த கட்ட கீமோதெரபி செய்ய ஏற்பாடு செய்தோம். ஆனால் காலம் கடந்துவிட்டது. நீங்கள் யாரும் வருத்தப்பட வேண்டாம், பால்ட்ஸ் இந்த உலகத்திற்கு அளித்த மகிழ்ச்சியான தருணங்களை நினைவில் கொள்ளுங்கள்.
உங்களையும் என்னையும் இணைத்த சிரித்த முகத்துடன் கூடிய ஷீம்ஸ் இப்போது இல்லை. அவன் பேரிடர் காலத்தில் உலகின் பெரும்பாலான மக்களை மகிழ்வித்தான். அவனுடைய பணி முடிந்துவிட்டது. அவன் இந்நேரம் விண்ணுலகில் தனது புதிய நண்பர்களுடன் புதிய உணவுகளை ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருப்பான் என நான் நம்புகிறேன். அவன் எப்போதும் என் இதயத்தில் இருப்பான். அவன் இனிமேலும் இணையத்தில் தொடர்ந்து மக்களை மகிழ்விப்பான் என நம்புகிறேன். அதுவே எனது வேண்டுகோளாகவும் இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
- ர. மனோஜ் குமார்.