தமிழர்கள் நிலங்கள வகைப்படுத்துன மாதிரி கிரிக்கெட்ல, "சச்சரவுகளும் சச்சரவுகள் சார்ந்த இடங்களும்"னு வரிசைப்படுத்துனா அங்க ஆஸ்திரேலிய அணி தவறாம ஏதோ ஒரு அணியோட மல்லுக்கட்டிட்டு நிற்கும். அதுலயும் இந்தியா - ஆஸ்திரேலியா நேருக்கு நேராக சந்திச்ச டெஸ்ட் போட்டிகள் எல்லாமே சண்டையும் சச்சரவுமா, ஸ்லெட்ஜிங்கும் மைண்ட் கேமுமா பார்க்குற ரசிகர்களுக்கு குதூகலத்தைத் தந்து ஒட்டுமொத்தமா பைசா வசூல் பண்ற போட்டிகளாகவே இருந்திருக்கு.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்போட இறுதிப் போட்டியில இந்த இரு அணிகளும் மோதிக்கப் போற ஹை வோல்டேஜ் கேம் நடக்க இருக்கற சமயத்துல கவாஸ்கர் காலந்தொட்டு ரிசப் பண்ட் பீரியட் வரைனு இவங்களுக்குள்ள அடிச்சுக்கிட்ட தருணங்கள மறுபடி ஓட்டிப் பார்ப்போமா?
வேகத்துக்கு மட்டுமில்ல வார்த்தைகளாலே பேட்ஸ்மேன்களை வம்பிழுத்து வலைவிரிக்கறதுக்கும் டென்னிஸ் லில்லி ஃபேமஸ்தான். ஒருதடவ கவாஸ்கரை இவர் ஆட்டமிழக்க வச்ச பிறகு, தேவையில்லாத வார்த்தைகள டென்னிஸ் பயன்படுத்த கடுப்பான கவாஸ்கர் இன்னொரு பேட்ஸ்மேனான சேத்தன் சௌகானையும் கூப்பிட்டுக் கொண்டு வெளியேற, இந்திய டீம் மேனேஜர் குறுக்கிட்டு மத்தியஸ்தம் பண்ணி சேட்டனை மறுபடி பேட்டிங் பண்ண அனுப்பினாரு.
பொதுவா களத்துல இந்த மாதிரி விஷயத்துல எல்லாம் கவனத்த சிதற விடாதவரான கவாஸ்கரே கோபப்படனும்னா டென்னிஸ் எப்படி எரிச்சல் ஊட்டியிருப்பார்னு புரிஞ்சுக்கலாம்.
கவாஸ்கர் மாதிரியே எப்போதும் அமைதியைக் கடைபிடிக்குற ராகுல் டிராவிட் கூட ஒருமுறை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடுப்பக் காட்டி இருந்தாரு. 2001-ல மைக்கேல் ஸ்லேட்டர் டிராவிட் அடிச்ச ஒரு பந்தைக் கேட்ச் பிடிச்சுட்டு அப்பீல் பண்ண, அது நிராகரிக்கப்பட, ஆத்திரமடைஞ்ச ஸ்லேட்டர் டிராவிட் கிட்ட தன்னோட கோபத்தைக் கொட்டித் தீர்க்க எட்டாவது அதிசயமாக டிராவிட்டும் சில வார்த்தைகளப் பரிமாற்றம் செஞ்சாரு.
ஆஸ்திரேலிய அணியை புரட்டிப் போட்டவங்கன்ற பட்டியல உலகளவுல ரெடி பண்ணாலும் அதுல டாப் 3-ல கோலியும் ரிசப் பண்டும் வந்துடுவாங்க. 2014-ல கோலிக்கும் மிட்செல் ஜான்சனுக்குமான உரசல்களும் அவர்கள் மாத்தி மாத்தி கணக்கை நேர் செய்ய செஞ்ச முயற்சிகளும் போட்டி உண்டாக்குன சுவாரஸ்யத்தையே மிஞ்சி நின்னுச்சு.
ரிசப் பண்ட் - டிம் பெய்ன் இருவரணி மேடையேத்துன "Baby Sitter" டிராமா பல வருஷங்கள் கடந்தும் இரு நாடுகளிலும் குடும்பங்கள் போற்றும் வெற்றியா முடிஞ்சது.
சச்சினோட Shoulder Before Wicket சர்ச்சை, ஹர்பஜன் சிங் சைமண்ட்ஸை இனரீதியான கேலிக்கு பண்ணதாக எழுந்த Monkeygate சச்சரவு, 2008-ல காம்பீர் - வாட்சன் மோதல், கங்குலி ஆட்டமிழந்ததாக பாண்டிங் சைகையால காட்டியதற்குக் கிளம்பிய எதிர்ப்பு, கோலி - ஸ்மித் எபிசோடுகள், 2017-ல டிஆர்எஸ் எடுக்கறதுக்கு பெவிலியன்ல இருந்த தன்னோட அணிகிட்ட ஸ்மித் கருத்துக் கேட்ட பிரச்சனை, 2020-ல இனத்தின் பேரால் சிராஜ், பும்ரா மேல ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் வாரி இறைத்த வார்த்தைகள் இப்படி வெப் சீரீஸ்கள்ல பல சீசன்களுக்கான கண்டெண்டை இந்திய ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்கள் கடந்த காலத்துல கொடுத்துருக்கு.
சாதாரண நாட்கள்லயே இப்படின்னா, கடலுக்கு ராஜா யார்னு சுறாவும், திமிங்கலமும் மோதிப் பார்க்கப் போற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்போட செறிவு எந்தளவு இருக்கும்ன்றதுல ஏதாச்சும் சந்தேகம் இருக்கா என்ன? ரணகளம் ஆகவும் ரத்தக் களறியாகவும் காட்சிகள் தீட்டப்படப் போறது உறுதி.