"கரடியைக் கட்டிப்பிடிக்க ஆட்கள் தேவை" -இது அமெரிக்க வனவிலங்கு மையத்தின் திகில் அறிவிப்பு.
அமெரிக்காவின் மெக்சிகோ மாகாணத்திலுள்ள, வனவிலங்குகள் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பானது இணையத்தில் வைரலாகி வருகிறது. எத்தனையோ பணி அறிவிப்பைப் பார்த்திருப்போம். ஆனால், "இது புதுசாவும்,தினுசாவும் இருக்கு "என்று வியக்கும் வகையில் கரடியைக் கட்டிப்பிடிக்க ஆட்கள் தேவை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது முரட்டு சிங்கிள்களுக்கு அல்வா போன்றது என நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர். அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தின் தேசிய விலங்காக கருப்புக் கரடிகள் உள்ளன. இங்குள்ள வனவிலங்குகள் பாதுகாப்பு மையத்தில் சுமார் 6000-க்கும் மேற்பட்ட கருப்பு கரடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பனிப் பிரதேச சூழலில் வாழக்கூடிய இக்கரடிகளை கட்டிப்பிடித்துப் பராமரிக்க ஆட்கள் தேவை என்ற அறிவிப்பு ஒன்றை இந்த மையம் வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் இந்த பணிக்கு விண்ணப்பபிக்கும் நபர்கள் வனஉயிரியல் சார்ந்த படிப்புகளில் கல்வித்தேர்ச்சியும்,அனுபவமும் பெற்றிருக்க வேண்டும் என்றும், கடினமான சூழ்நிலைகளைக் கையாளும் திறன் பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும்,கரடிக் குட்டிகளை கட்டிப்பிடித்தபடி குகைக்குள் ஊர்ந்து செல்லக்கூடிய தைரியம் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
-ர. பிரேம்குமார்