அதுவரைக்கும் ஜம்மு காஷ்மீரை தவிர, இந்தியாவில இருக்கற எந்த மாநிலமும் லாக்டவுனை பெரிய அளவில பாத்ததே இல்ல. அதனால எல்லாருக்குமே லாக்டவுன் ஒரு திரில்லிங்கான அனுபவம் தான். லாக்டவுன் தொடங்கின உடனே வீட்டுல தினமும் புதுப்புது ரெசிபி தான். அதை சாப்பிட்டு செப் தாமுவாகவும், செப் வெங்கடேஷ் பட்டாகவும் மாறி கமென்ட்ஸ் எல்லாம் அனலா பறந்துச்சு. இதோட மட்டும் முடிஞ்சுதா? அந்த ரெசிபி மேல கொஞ்ச கொத்தமல்லி இலைய தூவி விட்டு, ரெண்டு சைட்லயும் ஒரு எலுமிச்சை பழத்தை வெட்டி வெச்சு போட்டோ எடுத்து "டுடே'ஸ் ரெசிபி" என்று ஸ்டேட்டஸ் போட்டு அடுத்தவங்க வயிறு எரிய வெக்கறது. இத வயிறு எரிய வைக்கறது-ன்னு சொல்றதவிட நம்ம ஸ்டேட்டஸ் பாக்கற அடுத்தவங்கள அந்த ரெசிபி செய்ய தூண்டறதுன்னு சொல்லலாம்.
இந்த மாதிரி பரவுன ஒண்ணுதான் "டல்கோனா காபி". லாக்டவுன் போடற முன்னாடி நாள் கூட பட்டாணி சாப்பிட்டு இருந்தவன்லாம் 'டல்கோனா காபி சேலஞ்ச்' செஞ்சது காலக் கொடுமை கதிரவா ரகம். இந்த லாக்டவுன்ல தினமும் ரெண்டு வேல வர்க் அவுட் செஞ்சு உடம்ப குறைக்கணும்-னு ரிசல்யூசன் எடுத்தவனுக்கெல்லாம் நல்லா பஜ்ஜியையும்,மிக்சரையும் சாப்பிட்டு ரெண்டு சுத்து உடம்பு ஏறுனது ஒரு "சொல்ல மறந்த கதை"யாவே இருந்துட்டு வருது.
எங்க காலத்துல என்னென்னலாம் விளையாடினோம் தெரியுமா?-ன்னு 60'ஸ், 70'ஸ், 80'ஸ், ஏர்லி 90'ஸ் கிட்ஸ் சொல்லிட்டு இருந்த பல்லாங்குழி, பரமபதம், தாயம், நொண்டி மாதிரி விளையாட்டேல்லாம் இந்த லாக்டவுல லேட் 90'ஸ் மற்றும் 2கே கிட்ஸோட ஒலிம்பிக்ஸ் விளையாட்டாவே மாறிடுச்சுன்னு சொல்லலாம். அடுத்ததா தமிழ் படத்தை தவிர, நம்ம பிரதர் மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் படத்தை கூடாத பாக்காதவங்க 'Money Heist' பத்தியும், 'Squid Game' பத்தியும் பேசுனது அல்டி ரகம்.
ரெண்டு நாளுக்கு ஒருதடவ குளிக்கவே கஷ்டப்படற பலர், இந்த லாக்டவுன்ல மாஸ்க், சானிடைசர் பயன்படுத்துனது எட்டாவது அதிசயத்துக்கே tough கொடுக்கற ஒரு அதிசயமுங்க. எல்லா அலப்பறைய விட பெருசு 'Work from Home' அலப்பறை தான். ஆன்லைன் மீட்டிங்கில டீசன்டா பார்மல் சர்ட் போட்டுட்டு கீழ ஷார்ட்ஸ் போட்டது, நெட்வர்க் பிரச்னைன்னு உருட்டுனதுலாம் "அது ஒரு அழகிய நிலாக் காலம்". இதுமட்டுமில்லாம லாக்டவுன்ல நிறைய யூடியூப் சேனல்களும், புதுப்புது வாட்ஸ்ஆப் குரூப்களும் உருவானது தனிக்கதை.
லாக்டவுன் முன்னாடி வரைக்கும் பேஸ்புக் பிரண்ட்சும், இன்ஸ்டாகிராம் பாலோவர்ஸ்களும் பெருசா இருந்த நமக்கு பக்கத்து வீட்டுல யாரு இருக்காங்கன்னு கூட தெரியாது. ஆனா இந்த லாக்டவுன் அவங்க என்ன ராசி, என்ன நட்சத்திரம்ன்னு கூட தெரிய வெச்சது. இது ஒரு புரட்சின்னே சொல்லலாம். அதனால கருத்து வாட் ஐ ஆம் சேயிங் இஸ் "இந்த கொரோனா எல்லாத்தையும் விட மனுசங்களும், அவங்களோட உயிரும் ரொம்ப முக்கியம்"-ங்கறத ரொம்ப அருமையா புரிய வெச்சுது. இப்படி லாக்டவுனும், கொரோனாவும் நமக்கு பலப்பல விசயங்களை கத்துக்கொடுத்துச்சு.
கொரோனா லாக்டவுன்ல எத்தனை பேரோட வாழ்வாதாரம் போச்சு? எத்தனை உயிர்கள் போச்சு? எத்தனை பேர் உறவுகளை இழந்தாங்க? இது உங்களுக்கு காமெடியா?-ங்கற உங்க மைன்ட் வாய்ஸ் இங்க வரைக்கும் கேக்குது. அதனால கடைசியா "இது வெறும் நகைச்சுவைக்கு மட்டுமே; யாரையும் புண்படுத்த அல்ல"-ங்கற பொறுப்பு துறப்பு கார்டை போட்டுக்குறோம் மக்களே!
--நா.நிவேதா