அண்ணாமலை என்ற மனிதர் தமிழகத்தில் அறிமுகமானபோது 'அதிரடி ஐ.பி.எஸ் அதிகாரி', 'கர்நாடக சிங்கம்' என்று ஏகப்பட்ட பில்டப்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் அவர் தமிழக பா.ஜ.க தலைவரானதில் இருந்தே எதையாவது உளறி ஏகப்பட்ட பல்புகள் வாங்கிவருகிறார். கட்சியில் சேர்ந்த முதல்நாளே 'பாரதிய ஜனதா கட்சி'யை 'பாரதிராஜா கட்சி' என்று தவறாக உச்சரித்து தமாஷ் செய்தார். அதுமுதல் நாள்தோறும் அண்ணாமலை பல பல்புகள் வாங்கினாலும் அதில் டாப் 10 பல்புகளை மட்டும் பார்ப்போம்.
1. 'வல்வில் ஓரி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்' என்று அண்ணாமலை உளறும்போதுதான் 'உண்மையிலேயே இவர் ஐ.பி.எஸ் பாஸ் செய்தாரா?' என்ற டவுட் தமிழ்நாட்டுக்கே வந்தது. ஏனெனில் வல்வில் ஓரி சங்க காலத்தைச் சேர்ந்த கடையேழு வள்ளல்களில் ஒருவர். அவருக்கும் சுதந்திரப் போராட்டத்துக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.
2. '1967ல் சத்ரபதி சிவாஜி சென்னை காளிகாம்பாள் கோயிலுக்கு வந்தார்' என்பது அண்ணாமலை போட்ட அடுத்த காமெடி அணுகுண்டு. சத்ரபதி சிவாஜி வாழ்ந்த காலம் 1630 - 1680.
3. 'ஆற்காடு வீராசாமி இறந்துவிட்டார்' என்று அண்ணாமலை பேச, 'என் அப்பா உயிரோடுதான் இருக்கிறார்' என்று கொதித்தெழுந்தார் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமி. உடனே மன்னிப்பு கேட்டார் அண்ணாமலை.
4. அரசியல்வாதியானபிறகு மட்டுமல்ல, ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்தபோதே அண்ணாமலை உளறல் மன்னன்தான் என்பதை நிரூபிக்கும் விதமாக வீடியோக்கள் வெளியாகின. அப்படி ஒரு வீடியோவில் 'காமராஜர் 13 ஆண்டுகள் தமிழக முதல்வராக ஆட்சி புரிந்தார். அவர் 1963 முதல் 1975 வரை முதல்வராக இருந்தார்' என்று சொல்லியிருந்தார். உண்மையில் காமராஜர் 9 ஆண்டுகள்தான் முதல்வராக இருந்தார். அவர் ஆட்சிக்காலம் 1954 - 63.
5. 'காமராஜர் காலத்தில் கக்கன் கல்வி அமைச்சராக இருந்தார்' என்று அண்ணாமலை உளறிவைத்தார். உண்மையில் கக்கன் பொதுப்பணித்துறை, ஆதிதிராவிடர் நல்வாழ்வு, பழங்குடியினர் நலத்துறை, விவசாய நலத்துறை, உள்துறை ஆகியவற்றில் அமைச்சர்களாக இருந்திருக்கிறாரே தவிர ஒருமுறைகூட அவர் கல்வி அமைச்சராக இருந்ததில்லை.