அதிமுக எனும் மகிழ்மதி பேரரசு - கட்டப்பா யார்? பாகுபலி யார்?

'சிவகாமியின் வார்த்தையே கட்டளை. கட்டளையே சாசனம் ' என்று அதிகாரத்தின் உச்சத்தில் வாழ்ந்த பெண்மணிதான் ஜெயலலிதா. 'மக்களால் நான் மக்களுக்காவே நான்' என்ற டயலாக்கை ரம்யா கிருஷ்ணன் மாடுலேஷனில் சொல்லுங்க.
அதிமுக எனும் மகிழ்மதி பேரரசு - கட்டப்பா யார்? பாகுபலி யார்?
 • அந்த பிரம்மாண்ட மகிழ்மதி பேரரசுதான் அ.தி.மு.க.

 • ஆட்சி அதிகாரத்துக்காக சண்டை போடும் ஓ.பி.எஸ்ஸும் ஈ.பி.எஸ்ஸும் தான் தற்போது பாகுபலி- பல்வாள் தேவன்.

 • 'சிவகாமியின் வார்த்தையே கட்டளை. கட்டளையே சாசனம் ' என்று அதிகாரத்தின் உச்சத்தில் வாழ்ந்த பெண்மணிதான் ஜெயலலிதா. கொஞ்சம், 'மக்களால் நான் மக்களுக்காவே நான்' என்ற டயலாக்கை ரம்யா கிருஷ்ணன் மாடுலேஷனில் சொல்லிப் பாருங்கள் புரியும்.

 • ஆம்பள சகுனியாக இருக்கும் பிங்கலத் தேவன் பாத்திரத்தில் ஒரு லேடியே இருந்ததாகவும் அவர் போயஸோ , கொடநாடோ, சிறுதாவூரோ, பையனூரோ இல்லை அப்போலோவோ கூடவே இருந்த ஒரு நபராகவும் வைத்துக் கொள்வோமா?

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
 • மேலே அதிகாரத்தில் இருக்கும்... யார் என்ன உத்தரவு போட்டாலும் விசுவாசம் என நம்பி அதை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொண்டு செயல்படுத்தும் கட்டப்பா என்ற கேரக்டரை அ.தி.மு.க-வின் உண்மைத் தொண்டன் என குறியீடாகப் பார்ப்போமா?ஏனென்றால் நடுமண்டையில் காலை வைத்தாலும் விசுவாசித்து இது தி.மு.க-வின் சதி என்று சொல்வது அவர்கள்தானே.

 • புஸ்பக விமானம், ராட்சஷ யானை சிலை... அதில் வழிந்தோடும் நீர்வீழ்ச்சி... மர்மம் சூழ்ந்த மகிழ்மதி மாளிகையை போயஸ் கார்டனுடன் முடிச்சுப் போட்டுக் கொள்ளுங்கள்.

 • மனிதர்கள் யாராலும் மேலே ஏறிச் செல்ல முடியாத மலைகளையும் இயற்கைப் பேரிடர்களையும் கடந்து, மலை உச்சிக்குச் செல்வது என்பது சிலரால் மட்டுமே முடியும். அப்படி மேலே போனால் கர்ணம் தப்பி எந்த நேரமும் கொட்டும் அருவிவழி கீழே விழும் பேராபத்து மகிழ்மதியிலும் போயஸ் கார்டன் மதில்களுக்குள்ளும் உண்டு!

 • தங்கத் தாரகை...ராஜமாதா சிவகாமி மனது வைத்தால் யார் வேண்டுமானாலும் மேலே வந்து ஆட்சிக் கட்டிலில் உட்காரலாம் என்பதை ராஜமௌலியைவிட ராஜமௌனிகளான தமிழக மக்கள் நன்கு உணர்வார்கள் தானே!

 • விசுவாசம் என்ற பெயரில் ராஜ மாதாவுக்கு அநியாயத்துக்கு உண்மையாக இருந்து கட்டப்பாக்களால் முதுகில் குத்து வாங்கி ஆட்சிக் கட்டிலில் இருந்து தூக்கி அடிக்கப்பட்ட ஓவர் பணிவுக்குப் பெயர்போன ஒருவரை உங்களுக்குத் தெரியும் தானே?

 • திடீர் திடீர் என நள்ளிரவில் வந்து, 'உர்ர தர்கிஸ்த...ரஹா மகஸ்த்கஸ்ட புர்ரஹஸ்த' என்று வினோத பாஷையில் மகிழ்மதி மக்களின் மகிழ்ச்சியைக் குலைக்கும் காளகேயர் தலைவனையும் திடீர் திடீரென டீமானெட்டைசேஷன் போன்ற அறிவிப்புகளால் திகில் கிளப்பும் மோடியின், 'ஹமாரா தேஷ் மே கி கிஸான் அந்தோலத்' வகை கிலி டயலாக்குகளையும் முடிச்சிட்டு முழி பிதுங்கிக் கொள்ளுங்கள் ஒறவுகளே! மொழி திணிப்பு என்றும் இதைப் புரிந்து கொள்ளலாம் தானே?

ஜெயலலிதா - சசிகலா
ஜெயலலிதா - சசிகலா
 • பாகுபலியையும் பல்வால் தேவனையும் விட அனுஷ்காவின் முறை மாமனாக வரும் கேரக்டர் திடீரென அனுஷ்காவை மண முடிக்க வீர தீர சாகசங்களைத் தான்
  செய்ததாய் நம்ப வைத்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றப் பார்க்கும். கடைசியில் பல்பும் வாங்கும். டி.டி.வி.தினகரன் கடந்த சில வாரங்களுக்கு முன் செய்யாத சாதனைகளா! தற்போது அவருக்கு நிகழாத சோதனைகளா வேதனைகளா!

 • பனைமரங்களை வளைத்து அதில் கயிறு கொண்டு களம் அமைத்துக் கோட்டைச்சுவரைத் தாண்டி உள்ளே செல்ல தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க வேண்டும். சில மாதங்களுக்கு முன் க்ரீம்ஸ் ரோடு அப்பல்லோவும் அப்படித்தானே இருந்தது மக்களே!

 • சபதம், தியானம், வீர விளையாட்டுக்காக புரட்சி என மெரினா கடற்கரை நிகழ்வுதான் ஒட்டுமொத்த பாகுபலி 1 &2 வின் கதை, திரைக்கதையின் உருவாக்கம் மக்களே! சந்தேகம் என்றால் பிரேக்கிங் நியூஸ்களின் மியூஸிக்கையும் பாகுபலியின் ஆக்‌ஷன் பி.ஜி.எம்மையும் கொஞ்சம் உன்னிப்பாகக் கேட்டுப் பாருங்கள்.

 • ஆட்சியில் யார் இருந்தாலும் கொடுத்த உத்தரவைக் காப்பாற்ற அப்பாவி மாணவர்களையும், அப்பாவிப் பெண்களையும், மக்களையும் கன்னத்தில் அறைந்து லத்தி சுழற்றி அடித்து விரட்டும் தமிழ்நாடு காவல்துறையும் மகிழ்மதியின் முப்படையும் சனாதான தர்மப்படி சமம் அன்றோ!

 • படத்தில் சீறிப்பாயும் அம்புகள் நிகழ்கால அறிக்கைகளையும் முன்னிரவு பிரஸ்மீட்களையும் நினைவுபடுத்தவில்லையா

 • பாகுபலி இரண்டு பாக சினிமாக்களின் பலமே அது இந்திப்படங்கள் தான் '100 க்ரோர் க்ளப்'பில் சேரும் என்ற கற்பிதங்களை பிரேக் செய்து ரெக்கார்டு பிரேக்கிங் படமாக நிற்பதுதான். தமிழ்நாடு தற்போது பல பிரேக்கிங் நியூஸ்கள் சூழ் மாநிலமாக அப்படி வரலாற்றில் பாகுபலியைப் போல இடம் பிடித்திருப்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

 • கி.மு- கி.பி போல ஜெ.மு- ஜெ.பி என ஜெயலலிதாவின் மரணத்துக்கு முன் மரணத்துக்குப் பின் என இரண்டு பாகங்களாக அ.தி.மு.க-வும் தமிழ்நாடு அரசியலும் இரண்டு பாகங்களாக பிரிந்து அந்தலை சிந்தலையாகக் கிடக்கிறது. அமரேந்திர பாகுபலியின் மரணமும், மகேந்திரபாகுபலியின் பழிவாங்கலுமாக இரண்டு பாகமாக படம் வெளியானதை பொருத்திப் பார்த்துக் கொள்வோமா?!

 • ஆனாலும் மக்களே கடைசியில், கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்ற கேள்விக்கு இரண்டாம் பாகத்தில் விடை கிடைத்துவிட்டது. ஆனால், ஜெயலலிதா எப்படி இறந்தார் என்ற கேள்விக்கு மட்டும் இன்னும் விடை கிடைக்கவில்லை. இந்த ஒரு கேள்வியால் மட்டும் பாகுபலியை மிஞ்சி நிற்கிறது நிகழ்கால தமிழக அரசியல்!

  - சினிமாக்காரன்

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com