பிரதமர் மோடியை திரும்பிப் பார்க்க வைப்பது எப்பது?

விவசாயிகளின் போராட்டத்தை எப்போதுமே கண்டுகொள்ளாமல் இருப்பது நம் பிரதமர் மோடியின் ஸ்டைல். பிரதமரின் கவனத்தை விவசாயிகள் பக்கம் திருப்ப எதிர்காலத்தில் என்னவெல்லாம் செய்யலாம் என யோசித்தோம்.
பிரதமர்
பிரதமர்டைம்பாஸ்
Published on

விவசாயிகளின் போராட்டத்தை எப்போதுமே கண்டுகொள்ளாமல் இருப்பது நம் பிரதமர் மோடியின் ஸ்டைல். பிரதமரின் கவனத்தை விவசாயிகள் பக்கம் திருப்ப எதிர்காலத்தில் என்னவெல்லாம் செய்யலாம் என யோசித்தோம்.


போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நம் ஊர் விவசாயிகள் `வறட்சி நிவாரணம் கொடு', `விளைபொருளுக்கு உரிய லாப விலை கொடு' என கோரிக்கைகளை உடலில் எழுதி போராடிவருகின்றனர். ஆனால், இப்படி தமிழில் எழுதியதற்கு பதிலாக நெடுஞ்சாலத்துறை செய்தது போல் அதை அழித்துவிட்டு இந்தியில் எழுதியிருந்தால் உடனே மோடி மகிழ்ச்சியாகி வந்து பாத்திருப்பார்.

`எலிக்கறியை கடித்து போராட்டம் செய்தது போல் மாட்டுக்கறி கடித்து போராட்டம் செய்யப்போகிறோம்' என ஒரே ஒரு அறிக்கை விட்டாலே போதும், மோடி மட்டுமல்ல ஒட்டுமொத்த பா.ஜ.க-வும் அங்கே `சடார்' என ஆஜராகிவிடும்.

நிர்வாணமாக போராடிய போது சிறிது சித்தநாதன் விபூதியை உடலில் பூசியிருந்தால், அகோரிகள் என ஆசிர்வாதம் வாங்க வந்திருப்பார் மோடி. இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. அங்கு நீளமாய் தாடி வைத்திருக்கும் விவசாயி ஒருவருக்கு சத்குரு கெட்-அப் போட்டுவிட்டால் போதும். கண்டிப்பாக கிளம்பிவந்து விடுவார் மோடி.

அட்லஸ் மேப்பிலேயே பூதக்கண்ணாடி வைத்து தேட வேண்டிய நாடுகளை எல்லாம் தேடிப்பிடித்து ரவுண்டு அடித்திருக்கிறார் மோடி. அவரிடம் ` மோடி ஐய்யா... இன்னும் உங்க பார்வையில் படாத நாடு ஒன்னு இருக்கு. அங்கே போக நாங்க வழி சொல்றோம். நேர்ல வாங்க' என விவசாயிகள் பிரதமர் அலுவலகத்திற்கு குறுஞ்செய்தி அனுப்பலாம். அந்த செய்தியை கண்டதும் மோடி உண்மையிலேயே செம குஷியாக விவசாயிகளை சந்திக்க வந்துவிடுவார். அந்த நாடு பெயர் தமிழ்நாடு.

கேமரா செல்ஃபி என்றால் மோடிக்கு மிகவும் பிடிக்கும். அதனால், `அந்நியன்' படத்தில் வரும் சண்டை காட்சியை படமாக்கியதை போல, போராட்டம் நடக்கும் இடத்தின் 360 டிகிரியிலும் கேமராக்களை ஃபிக்ஸ் செய்துப்பார்க்கலாம். மோடி வருகை தர வாய்ப்பிருக்கிறது.

டி.ராஜேந்தரை போலவே மோடிக்கும் டிரம்ஸ் என்றால் அவ்வளவு ப்ரியம். எனவே, மைக்கேல் ஜாக்சனின் `தே டோன்ட் ரியலி கேர் அபவுட் அஸ்' பாடலை போராட்டம் நடக்கும் இடத்தில் நம் இளைஞர்கள் டிரம்ஸ் வாசித்து பாடினால், அவர்களுடன் சேர்ந்து வாசிக்க எவ்வளவு வேலை இருந்தாலும் புறந்தள்ளிவிட்டு ஓடோடி வருவார்.

தமிழ் புத்தாண்டு வரவிருப்பதையொட்டி தமிழ் விவசாயிகள் சார்பில் பிரதமருக்கு 15 லட்சம் செலவில் புத்தம் புது ஆடை பரிசாக வழங்கிவிருப்பதாக கொளுத்திப்போட்டாலே போதும். கண்டிப்பாக, விவசாயிகளை பார்க்க கார் ஏறிவிடுவார் நம் பிரதமர்.

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com