'வாரிசு அரசியலை எதிர்க்க வேண்டும், குடும்ப அரசியலை ஒழிக்க வேண்டும்' என்று சமீபத்தில் மத்தியப்பிரதேசம் போபாலில் நடந்த கூட்டத்தில் முழங்கியிருக்கிறார் பிரதமர் மோடி. அமித்ஷா முதல் அண்ணாமலை வரை எதிர்க்கட்சிகளில் மட்டும்தான் குடும்ப அரசியல் இருப்பதாகச் சொல்லிவருகிறார்கள். உண்மையில் பா.ஜ.க.வில் வாரிசு அரசியலே இல்லையா என்று பார்ப்போம்.
* மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கின் மகன் பங்கஜ் சிங், உத்திரப்பிரதேச பாஜகவின் துணைத்தலைவராக இருக்கிறார்.
* வேத் பிரகாஷ் கோயல், சந்திரகாந்த கோயல் இருவரும் பாஜக நிர்வாகிகள். இந்த தம்பதியின் மகன் பியூஷ் கோயல்தான் மோடி அரசில் ரயில்வேதுறை அமைச்சர்.
* மகாராஷ்டிர எம்.எல்.ஏ கங்காதர் ஃபட்னாவிஸ் மகன் தேவேந்திர ஃபட்னாவிஸ் அம்மாநிலத்தின் துணை முதலமைச்சராக உள்ளார். முன்னதாக, பாஜக ஆட்சியில் முதலமைச்சராக பதவி வகித்தார்.
* மத்திய விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய மாதவராவ் சிந்தியாவின் தந்தை மாதவராவ் சிந்தியாவும் மத்திய அமைச்சராக இருந்தவரே,
* ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜி சிந்தியாவின் மகன் துஷ்யந்த் சிங் எம்.பி ஆக உள்ளார். வசுந்தரா ராஜி சிந்தியாவின் தாய் விஜய ராஜி சிந்தியா ஜன சங்கத்தை சேர்ந்தவர், பாஜகவை உருவாக்கிய உறுப்பினர்களில் ஒருவர்.
* பா.ஜ.க சட்டீஷ்கர் முன்னாள் முதல்வர் ராமன்சிங்கின் மகன் அபிஷேக் சிங், பாஜக எம்.பி
* கர்நாடக பா.ஜ.க முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் பி. வை.ராகவேந்திரா கர்நாடக பா.ஜ.க எம்.பி.,.
* பாஜக ஆட்சியில் வெளியுறவுத்துறை மற்றும் நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹாவின் மகன் ஜெயந்த் சின்ஹா எம்.பி ஆக உள்ளார். இவர் பாஜக அமைச்சரவையில் இணை அமைச்சராகவும் இருந்தவர்.
* வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த பிரமோத் மகாஜன் மகள் பூனம் மகாஜன் எம்பியாக உள்ளார்.
* டெல்லி சட்டமன்றத்தின் சபாநாயகராக இருந்த சார்த்தி லால் கோயல் மகன் விஜய் கோயல் 2017-2019 வரையில் மத்தியில் பாஜக அமைச்சரவையில் அங்கம் வகித்தார்.
* 5 முறை எம்.பி மற்றும் 2 முறை எம்.எல்.ஏவாக இருந்த விஜய் குமார் மல்கோத்ராவின் மகன் அஜய் குமார் மல்கோத்ரா 2013-ல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார்.
* முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மருமகன் அனூப் மிஸ்ரா எம்.பியாகவும், எம்.எல்.ஏவாகவும் இருந்தவர்.
* இமாச்சலப்பிரதேச முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமாலின் மகன்தான் இப்போதைய பா.ஜ.க மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர்.
* முன்னாள் கர்நாடக முதல்வர் எஸ்.ஆர்.பொம்மையின் மகன்தான் சமீபத்தில் கர்நாடக பா.ஜ.க முதல்வராக இருந்த பசவராஜ் பொம்மை.
* மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாதான் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர்.
எனவே எல்லாக்கட்சிகளிலும் குடும்ப அரசியலும் வாரிசு அரசியலும் இருப்பதைப்போல் பாரதிய ஜனதா கட்சியிலும் வாரிசு அரசியல் இருக்கிறது என்பதே உண்மை.