"நானும் ரவுடிதான்..." என்ற வடிவேலுவின் காமெடிக்கு நாம எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம்.
அதேபோல "நான் ரவுடி இல்லை...ஜோக்கர்தான்" என்று தானாக வந்து மீடியா வண்டியில் ஏறியுள்ள வரிச்சியூர் செல்வத்தின் செயலும் எல்லோரையும் சிரிக்க வைத்தாலும், விநோதமாக பார்க்கவும் வைத்துள்ளது.
சமீபகாலமாக மொபைல் ஜூவல்லர்ஸ் போல வலம் வந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் வேடிக்கை காட்டிக்கொண்டிருக்கிறார் வரிச்சியூர் செல்வம். சிறு வயதிலிருந்தே குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படும் வரிச்சியூர் செல்வம் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. சிறைக்கு செல்வதும் வருவதுமாக இருந்தவர் அரசியல்வாதிகளின் செல்வாக்கினால் தாதாவாக மதுரையில் வலம் வந்தார். மூன்று முறை என்கவுண்டரிலிருந்து தப்பியவர் என்ற பெருமைக்குரியவர்.
தான் திருந்தி வாழ்வதாக அவ்வப்போது அவரே போலீசுக்கு மனுப்போடுவார். சில நாட்களில் அந்த எண்ணத்தை ஓரமாக தூக்கிப் போடுவார்.
சில ஆண்டுகளுக்கு முன் பத்திரிகையாளார் அவதாரமெடுத்து தன் வாகனத்தில் அரிவாளில் ரத்தத்தை வழியவிட்டு அதன் கீழே பிரஸ் என்று பதிவிட்டு பதற வைத்தார். பிறகு மனித உரிமை அமைப்பில் நிர்வாகியாக பொறுப்பேற்று மனித உரிமைக்கே மாரடைப்பு வர வைத்தவர். தமிழ் திரையுலகம் வா வா வென்று அழைக்காமலே சினிமாவிலும் நடித்தார். நல்லவேளை அந்த படம் ஆரம்ப நிலையிலயே டிராப் ஆனது. இல்லையென்றால் படம் பார்த்து பலபேர் கிராக் ஆகியிருப்பார்கள்.
திடீரென்று ஆன்மிக அவதாரமெடுத்தவர். காஞ்சிபுரத்தில் நடந்த அத்திவரதர் தரிசன விழாவில் வி.ஐ.பி வரிசையில் சென்று வந்து தன் அரசியல் செல்வாக்கை இந்த உலகத்துக்கு எத்தி வைத்தார். இன்னும் அவர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறார் என்ற சந்தேகம் காவல்துறைக்கு இருந்து வந்தாலும், "நான் இப்ப தாதா இல்லை, தாத்தாவாகிவிட்டேன்" என்று கொடுமையான ரைமிங்கில் மறுத்தார்.
சமீபகாலமாக தெலுங்குப் பட வில்லன் போல உடல் முழுவதும் நகைகளை அணிந்துகொண்டு ஊர் ஊராக செல்வது, மாலிலும், ஹோட்டல், ரிசார்ட்டில் நின்றுகொண்டு தன் ஒவ்வொரு நடவடிக்கையையும் வீடியோ எடுத்து பி.ஜி.எம்.முடன் சமூக ஊடகங்களில் பதிவிடுவது என அட்ராசிட்டி செய்து வருகிறார்.
அவர் வெளியிடுவது வெறும் ரீல்தானா? இல்லை வேறு ஏதும் ரீல் விடுகிறாரா? என்று அன்றாட நடவடிக்கைகளை காவல்துறையினர் தொடர்ந்து கவனித்து வருகிறார்கள். அரசியல் கட்சியில் சேரப்போவதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் கடந்த வாரம் திடீரென்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசியவர், "என் அப்பாவின் சொத்தில் ஜாலியாக வாழ்கிறேன். நகைகள் எல்லாம் மகள் பெயரில் வாங்கியது. வருமானத்துக்கு வரி கட்டுகிறேன். நான் ரவுடி அல்ல. என்னை ஜோக்கர் என்று சொல்லுங்கள். தி.மு.க குடும்பத்தைச் சேர்ந்த நான் திமுகவில் இல்லை, பா.ஜ.கவில் சேரபோவதில்லை, நகை, பணம் இருப்பதால் நடிகைகள் என்னோடு ஒட்டிக்கொள்கிறார்கள். அதனால் ஜாலியாக இருப்பேன். காயத்ரி ரகுராமை நான் ஒருமுறைதான் பார்த்தேன். ஆனால், அதை திருச்சி சூர்யா தவறாக பதிவிட்டார். நான் கேட்டுக்கொண்டதும் மன்னிப்பு கேட்டு அதை நீக்கம் செய்துவிட்டார்" என்று கூறினார்.
இந்த நிலையில் நேற்று சென்னையிலும் பிரஸ் மீட் ஒன்றை ஏற்பாடு செய்து "என் மகன், பேரன் பேத்தி எல்லோரும் நல்லா படிச்சு வரணும், அவர்களை யாரும் ரவுடி மகன், ரவுடி பேத்தி என்று யாரும் அழைக்க கூடாது, என்னால் அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என்பதால்தான், நான் இப்ப தாதா இல்லை தாத்தா என்றும் ரவுடி இல்லை, ஜோக்கர் என்றும் சொல்லி வர்றேன். ஆனால் அதன் காரணம் புரியாம பத்திரிகைக்காரங்க ஜோக்கர்னு நக்கலா எழுதுறாங்க. அதைப்பத்தி கவலை இல்லை" என்று சொல்லி மீண்டும் தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார்.
இப்படி பம்மி பம்மி தன்னிலை விளக்கம் கொடுக்கும் வரிச்சியூராரின் அடுத்த நிகழ்ச்சி நிரல் என்னவென்றுதான் யாருக்கும் தெரியவில்லை.
- செ.சல்மான் பாரிஸ்.