அமெரிக்காவில் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினராக இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி ரோ கன்னா, ராகுல் காந்தி பதவி பறிப்பு விஷயத்தில் தனது அதிருப்தியை ட்வீட் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.
ரோ கன்னா தன் ட்வீட் பதிவில், 'ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது காந்திய தத்துவத்திற்கும் இந்தியாவின் மதிப்புகளுக்கும் செய்த ஆழமான துரோகம். எனது தாத்தா பல ஆண்டுகளாக சிறையில் தியாகம் செய்தது இதற்காக கிடையாது' என்று ட்வீட் செய்திருக்கிறார். இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க எம்.பியான ரொ கன்னா சிலிக்கான் வேலி சார்பாக அமெரிக்க பிரநிதிகள் சபையில் உறுப்பினராக உள்ளார்.
"தகுதி நீக்கத்தால் எனது குரலை ஒடுக்க முடியாது. அதானி பிரச்னையை திசைமாற்றுகிறார்கள். பிரதமர் மோடியே நோக்கி 3 கேள்விகளை முன்வைத்தேன். அதானி குழுமத்தில் 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்த நிறுவனங்கள் யாருடையது?அந்தப் பணம் யாருடையது? மோடி வெளிநாடு சென்றபோதொல்லாம் அதானி குழுமத்துக்கு தொழில் ஒப்பந்தங்கள் கிடைத்ததை புகைப்பட ஆதாரத்துடன் வெளியிட்டேன். அதானிக்காக விமான நிலையங்களின் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டன. அதானி குழும முறைகேடு விவகாரத்தில் சீனாவை சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு உள்ளது.
பிரதமருக்கும் அதானிக்குமான தொடர்பு குறித்து புதிய தகவலை பேசிவிடுவேன் என்பதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளேன். ஒருபோதும்வெளிநாடுகளை இந்திய ஜனநாயகத்தில் தலையிடும்படி நான் கேட்டதில்லை. அரசியல் நீதி என்பது எனது ரத்தத்தில் கலந்துள்ளது. எனது பேச்சு மோடிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டு மக்களின் ஜனநாயகத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறேன். நான் பாராளுமன்றத்துக்கு உள்ளே இருந்தாலும், வெளியே இருந்தாலும் என் பணியைச் செய்வேன். மன்னிப்பு கேட்க நான் சவார்க்கர் இல்லை!" என்று கூறியதோடு, குறுக்குக் கேள்விகள் கேட்ட சில மீடியாவைப் பார்த்து, 'பாஜக உறுப்பினர் அட்டையை மாட்டிவிட்டு இதையெல்லாம் கேட்கலாமே' என்று காட்டமாகவே பிரஸ்மீட்டில் பதில் சொன்னார் ராகுல் காந்தி.
பிரஸ்மீட் படத்தை தன் இன்ஸ்டா பதிவில் ஷேர் செய்து 'விக்ரம்' படத்தின் 'ஆரம்பிக்கலாங்களா?' பாடலை பின்னணியில் வைத்திருக்கிறார் ராகுல் காந்தி. அது ட்ரெண்டாகி வருகிறது.
- எஸ்.