நிதித்துறை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடும் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம்தான் இந்த ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி (Hindenburg Research). கணக்கியல் முறைகேடுகள், சட்டவிரோதமான நெறிமுறையற்ற செயற்பாடுகள், வெளியே தெரியாத முறைக்கேடுகள் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்கிறது.
'ஹிண்டன்பர்க்' ஆராய்ச்சி என்று பெயரிட காரணம்:
1937யில் ஜெர்மன் பயணிகள் விமானம் தீப்பிடித்து 35 பேர் இறந்த ஹிண்டன்பர்க் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நிறுவனத்திற்கு ஹிண்டன்பர்க் என்று பெயர் வைக்கப்பட்டது.
பங்குச்சந்தையில் தனி நபரால் உருவாக்கப்பட்ட தவறுகளை கண்டுபிடிப்பதும், அவற்றைச் சந்தேகத்திற்கு இடமின்றி பொதுமக்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டுவதையும் இந்த நிறுவனத்தின் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
ஹிண்டன்பர்க் உருவாகக் காரணம் :
ஹிண்டன்பர்க் நிறுவனம் 2017 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச வணிக மேலாண்மை மாணவர் நாதன் ஆண்டர்சன் என்பவரால் நிறுவப்பட்டது. அவர் அமெரிக்காவிற்கு திரும்புவதற்கு முன்பு ஜெருசலேமில் வசித்து வந்தார். அங்கு அவர் பல நிறுவனங்களில் தரகராக பணியாற்றினார்.
எந்தெந்த நிறுவனங்களைப் பற்றி ஹிண்டன்பர்க் எழுதியுள்ளது?
2020 ஆம் ஆண்டில், நிகோலா பற்றிய ஒரு அறிக்கையை வெளியிடுகிறது. நிகோலா என்பது அமெரிக்காவைச் சேர்ந்த மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாகும். இந்நிறுவனத்தில் நடந்த Short selling முறைகேடுகளையும் இதனால் முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் ஆய்வறிக்கையாக சமர்பித்தது.
2022 ஜூன் மாதம் WINS ஃபைனான்ஸ் எனும் சீன நிறுவனத்தின், துணை நிறுவனத்துக்கு சொந்தமான RMB 350 மில்லியன் சொத்துக்கள் சீனாவில் முடக்கப்பட்டது. ஆனால், அந்நிறுவனம் அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இது குறித்து ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியிட்ட போதுதான் அமெரிக்க முதலீட்டாளர்களுக்கே இந்த விவகாரம் தெரியவந்தது.
மேலும், Utilization, HF Foods மற்றும் Riot Blockchain போன்ற நிறுவனங்கள் பற்றிய ஆய்வு அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளது. இதுவரை 16 நிறுவனங்களைப் பற்றி ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
ஹிண்டன்பர்க்கின் ஆராய்ச்சி நிறுவனம் அதானி குழுமத்தைப் பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையானது இந்தியாவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகியுள்ளது.