Chittha Chittha
சினிமா

Chithha Review : சமூக கருத்தோடு ஒரு Thriller படம் - ரசிக்க வைத்ததா? சோதித்ததா?

டைம்பாஸ் அட்மின்

சித்தார்த், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் ஆகியோர் நடிப்பில், 'பண்ணையார் பத்மினி' புகழ் இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் வெளியாகியிருக்கிறது 'சித்தா' திரைப்படம்.

கதைச்சுறுக்கம்:

பழனியில் கணவனை இழந்த தன் அண்ணி, தன் அண்ணன் மகள் சிறுமி சுந்தரி ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார் சித்தார்த். தந்தையை இழந்த சுந்திரி மீது ஈஸ்வரனுக்கு எல்லையில்லா பாசம். சுந்தரிக்கும் தான் 'சித்தா' என்று அழைக்கும் தன் சித்தப்பா ஈஸ்வரன்தான் எல்லாம். பள்ளி முடித்து வீடு திரும்புகையில் சுந்திரி காணாமல் போகவே, காவல்துறையில் உள்ள தன் நண்பன் வடிவேலுவுடன் மகளைத் தேடி அழைகிறார் ஈஸ்வரன்.

இறுதியில், அச்சிறுமியைக் கண்டுப்பிடித்தார்களா, கடத்தியது யார், அச்சிறுமிக்கு என்ன நேர்ந்தது போன்ற கேள்விகளுக்கான பதிலைப் பேசுகிறது 'சித்தா'

ப்ளஸ் :

பிரதான கதாபாத்திரங்கள் தொடங்கி சிறிய கதாபாத்திரங்கள் வரைக்குமான நடிகர்கள் தேர்வும், அவர்களின் நடிப்பும் பக்கா. கதாநாயகன் சித்தார்த் பெரும் பலம். படம் மொத்தத்தையுமே தன் தோளில் தாங்கியிருக்கிறார். 'சூப்பர்' சித்தார்த்.

சில காட்சிகள் வந்தாலும் மிக அழுத்தமான கதாபாத்திரமாக பதிகிறது கதாநாயகி நிமிஷா சஜயனின் கதாபாத்திரம். தனக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமையை மனதிற்குள் மறைத்துக்கொண்டு நிமிஷா சஜயன் உடைந்து அழுகும் காட்சியில் கைதட்டலைப் பெறுகிறார். தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வர வாய்ப்பிருக்கிறது.

மொத்த தொழிற்நுட்ப குழுவும் கச்சிதமாக வேலை செய்திருக்கிறது என்றாலும், அதில் கூடுதல் சபாஷைப் பெறுபவர் பின்னணி இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர்தான். உணர்வுகளின் ஆழத்தையும், பரபரப்பையும் கச்சிதமாக காட்சியாக்க உதவியிருக்கிறது.

தொடக்கத்தில் காதல் பிரிவு, குடும்ப சோகம், நட்பு என நிறைய விஷயங்களை பேசினாலும், பின்கதைகள் மற்றும் கூடுதல் காட்சிகள் என இழுக்காமல் சில காட்சிகளிலேயே அழகாகவும், அழுத்தமாகவும் கதைக்களம் பதிகிறது.

காவல்துறையினர் விசாரணையில் ஈடுபடும் காட்சிகள் யதார்த்தமாகவும் அதேநேரம் பரபரப்பாகவும் நம்மை பதறவைக்கிறது.

லாஜிக் மீறள்களை எல்லாம் மீறி இரண்டாம் பாதி முழுவதும் ஒரு பரபரப்பையும், ஆர்வத்தையும் பார்வையாளர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது திரைப்படம்.

சித்தார்த்திற்கும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கும் இடையிலான உணர்வுப்பூர்வமான காட்சிகளும் ஒர்க் அவுட் ஆகி, படத்திற்கான உயிர்ப்பை வழங்கியிருக்கின்றன.

'குட் டச் - பேட் டச்' குறித்து எளிமையாக குழந்தைகளுக்கு விளக்கும் காட்சி.

மைனஸ் :

தொடக்கத்தில் யதார்த்தமாகவும் போலிதன்மை இன்றியும் பயணித்த திரைக்கதை, பரபரப்பிற்காக லாஜிக் ஓட்டைகளுக்குள் மாட்டிக்கொள்கிறது.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் வலியைக் கடத்தும் பொருட்டு, அப்பட்டமான நேரடியான காட்சிகளையும் வசனங்களையும் வைத்திருக்கிறார். ஒரு பொறுப்போடு நடந்துக்கொண்டு முதிர்ச்சியான திரைமொழியில் அக்காட்சியை எடுத்திருக்கலாம். பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு சிறுமியின் கண்ணியத்தையும் காக்க தவறியிருக்கிறார் இயக்குநர்.

படத்தின் இறுதியில் நாம் என்ன சொல்ல வருகிறோம் என இயக்குநருக்கே குழப்பம் இருப்பதாக தோன்ற வைக்கிறது. திடீரென்று 'குழந்தைகளிடம் மொபைல் போனைக் கொடுக்காதீர்கள்' என அறிவுரை வழங்குகிறார். எதற்கு என்றே தெரியவில்லை. அந்தச் சந்தேகங்களுக்கு வலுசேர்க்கும் விதமாக இறுதிக்காட்சியும், அதற்கு பிந்தைய காட்சியும் உள்ளது.

இதனால் எதை தீர்வாக இயக்குநர் முன்வைக்கிறார்?, இப்படத்தில் இருந்து பார்வையாளர்கள் எதை எடுத்துக்கொள்வது? போன்ற குழப்பங்கள் வருகிறது.

கதாநாயகி கதாபாத்திரம்:

தூய்மை பணியாளர்கள் இழிவுப்படுத்தப்படுத்தப்படும் போது, அதற்கு 'மாஸ்' ஆக பதிலடி கொடுக்கிறார் நிமிஷா சஜயன். பாலியல் சுரண்டல்கள் என்பது வல்லுறவு மட்டுமல்ல, அது பெண்களின் தினசரி வாழ்க்கையில் வெவ்வேறு வடிவங்களில் உள்ளது என்பதையும் தெளிவாக பேசுகிறது இக்கதாபாத்திரம். இறுதிக்காட்சியில், "அவளா உன்ன பழிவாங்க சொன்னா? இப்ப கூட அவ எப்படி மீண்டு வருவானு நீ யோசிக்கலல. போய் அவன கொல்லு போ" என நெற்றிப் பொட்டில் அடித்தார் போல கேட்கிறது இக்கதாபாத்திரம்.

வணக்கம் Timepassonline வாசகர்களே...
டைம்பாஸ் சானலின் லேட்டஸ்ட் சினிமா விமர்சனங்களைப் படிக்க Timepass whatsapp சேனலில் இணைந்திருங்கள்.

Please Click : https://bit.ly/3Plrlvr