'ஐம்பதில் வளையாதது ஐந்தில் மட்டும் எப்படி வளைந்திருக்கும்?' என்ற கிரேக்க பழமொழியை மையமாக (அல்லது மய்யமாக) வைத்து, ஒவ்வொரு பிரபலங்களின் பள்ளிக் காலமும் எப்படி இருக்கும் என்று கற்பனைக்குதிரையைக் கண்டபடி தெறிக்க ஓட விடுவதுதான் 'அது ஒரு டவுசர் காலம்' தொடர்.
இந்த வாரம், இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர் என பல முகங்களைக் கொண்ட மிஷ்கினின் பள்ளிக்காலத்தைதான் பார்க்கப் போகிறோம்.
மற்ற மாணவர்கள் மெட்ராஸ் ஐ சீசனில்தான் கருப்பு கூலிங் கிளாஸ் போடுவார்கள். ஆனால், மிஷ்கின் எல்லா நாளுமே கருப்பு கண்ணாடியில்தான் ஸ்கூலுக்கு வந்திருப்பார்.
நாலடியார், திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற பாடங்களை வாத்தியார் நடித்தினால், 'கரமசோவ் சகோதரர்கள்', 'குற்றம் மற்றும் தண்டனை', 'அன்னா கரினா', 'போர் மற்றும் அமைதி' மாதிரி ரஷ்ய இலக்கியங்கள் நடத்துங்க மிஸ் என கேட்டு அடம்பிடித்திருப்பார்.
மாறுவேட போட்டியில், மற்ற மாணவர்கள் பாரதியார், மகாத்மா காந்தி வேடம் போட்டால், இவர் மட்டும் அகிரா குரோசாவா, லியோ டால்ஸ்டாய், அலெக்ஸாண்டர் புஷ்கின், அன்டன் செகோவ் போன்ற வேடங்களில் வந்து, நடுவர்களையே குழப்பியிருப்பார்.
நடுராத்திரியில் பள்ளிக்கு வருவார். பேய், பிசாசுகளோடு ஹேண்ட் கிரிக்கெட், புக் கிரிக்கெட் விளையாடுவார்.
ஓய்வு நேரங்களில் 'செவன் சாமுராய்' படம் பார்ப்பார். முழு ஆண்டு பரிட்சை விடுமுறைகளில் பத்தாயிரம் தடவையாவது 'செவன் சாமுராய்' படம் பார்த்திருப்பார்.
'எங்க மாமா போலீஸ்டா, எங்க சித்தப்பா சிஎம்டா' என நண்பர்கள் பெருமை பேசினால், 'அகிரா குரோசாவா என் பெரியப்பாடா.. ஆமாடா' என கொதித்தெழுந்திருப்பார்.
மற்ற மாணவர்கள் கிரிக்கெட், சினிமா என கதை பேசிக்கொண்டால், இவர் மட்டும், 'அசடன் நாவல்ல தஸ்தாயெவ்ஸ்கி சொல்றான் மச்சான்.. மனித மனதின் மீட்சிய எடுத்து காட்றான் இந்தாடானு. வாழ்க்கைல கடுந்துயரம் வரும்போது ஒருத்தன் அன்புன்ற ஆதி மழைய..' என பேசி, மற்ற மாணவர்களைப் பைத்தியம் பிடிக்க வைத்திருப்பார்.
தீபாவளி, பொங்கல் என்றால் மிஸ்ஸுகளுக்கு மஞ்சள் புடவையை பரிசாக வழங்கியிருப்பார்.
கோபமான மிஸ்ஸுகள் அடிக்க வந்தால், 'நீ படிச்சுருப்பீயா டேவிட் மேமட் பத்தி? நீ படிச்சுருப்பீயா ஜோசப் கேம்பெல் பத்தி? நீ படிச்சுருப்பீயா கரமசோவ் ப்ரெதர்ஸ?' என பட்டியலாகப் போட்டு பதறவிட்டிருப்பார்.
பள்ளி விழாக்களைப் புகைப்படம் எடுக்கச் சொன்னால், எல்லோர் கால்களையும் மட்டும் புகைப்படம் எடுத்து எல்லோரையும் கலங்கடிக்க வைத்திருப்பார்.