மாரி
மாரி டைம்பாஸ்
சினிமா

'மாரிசெல்வராஜ் தாமிரபரணியை வேறமாதிரி பார்க்க வெச்சான்' - இயக்குநர் ராம்

Saran R

தாமிரபரணி...
வண்ணதாசன், வண்ண நிலவன், கலாப்ரியா, சுகாவின் எழுத்துக்களால் கொண்டாடப்படும் 'இலக்கிய அந்தஸ்து உள்ள' ஆறு.
இயக்குநர் ராம் இதே ஜில்லாவை பூர்வீகமாக் கொண்டவர். ஆனால், ஊருக்கும் தனக்குமான உறவு முந்தைய தலைமுறையோடு அறுந்து போன வாழ்வைக் கொண்டவர். சென்னை தான் அவர் ஊர். பிறப்பாலும் வளர்ப்பாலும் சென்னைவாசி. தன் சீடர், தன் மனசுக்கு நெருக்கமானவர், உதவி இயக்குநர்...தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநராய் தடம் பதித்திருக்கும் மாரி செல்வராஜ் பற்றியும் தாமிரபரணி பற்றியும் பத்து வருடங்களுக்கு முன் அதாவது  2012-ல் அவர் பகிர்ந்து கொண்டது இது...

"2007 -ல் 'கற்றது தமிழ்' படப்பிடிப்பிற்காய் திருநெல்வேலி நான் வந்ததே கிட்டத்தட்ட முதல்முறை. புனித சேவியர் கல்லூரியில் படப்பிடிப்பு. செல்வம் என்ற மாரி செல்வராஜ்,  ஜார்ஜ் ஆக நடித்த நாளின் மாலை. செல்வத்திடம் நான் ஸ்ரீவைகுண்டம் போய் பார்க்க வேண்டும் என்று சொன்னேன். அவன், 'சரி' என்று விருப்பமில்லாமல் சொன்னதுபோல் இருந்தது. அவன் ஏன் அப்படி விருப்பமில்லாமல் சொன்னான் என்பது அவனது 'தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்' தொகுப்பிலிருந்த கதைகளை படித்தபோதுதான் தெரிந்தது.

அடுத்த நாள். அவன் ஊரான புளியங்குளத்தையும் என் அப்பாவின் ஊரான ஸ்ரீவைகுண்டத்தையும் பிரித்திருந்தது தாமிரபரணி ஆறு. அப்பாவின் கதைகளில் நிறைந்திருந்த அந்த பாலத்தைத் தாண்டி ஊருக்குள் சென்றோம். யாரிடம் கேட்டு பூர்வீக வீட்டை கண்டுபிடிப்பது என்று தெரியவில்லை.

"என்னடா உங்க ஊருக்குப் பக்கத்தில் இருக்குற ஊரு, உனக்கு ஒருத்தரைக்கூடவா தெரியாது!'' என்பதற்கு சிரித்தான்.

" இந்த ஊருல உள்ளவங்க எங்ககூட பழக மாட்டாங்க சார், நாங்க தனியா இந்த ஊருக்கு வர மாட்டோம். " என்றான். என் அப்பா படித்த குமரகுருபரர் கலைக் கல்லூரிக்கு போக வேண்டும் என்றேன்.

"அரசாங்க நிதியுதவிக் கல்லூரி. இந்தக் கல்லூரிக்கு எங்க ஊர் பசங்க யாரும் வரமாட்டாங்க சார், ஏன் ஸ்ரீவைகுண்டத்தைத் தாண்டி வரணும், மீறி வந்தா ஏதாவது பிரச்சனை ஆயிடும் அதான்!" என்றான்.

திரும்ப இரவானது. தாமிரபரணி சலசலக்க அதன் கரையில் அமர்ந்திருந்தோம். நிலவு பெருத்துக் கொட்டியும் இருள் மிச்சமிருந்தது. செல்வத்தின் பல கதைகள்...நிஜ சம்பவங்கள்...எல்லாவற்றையும் அந்த இரவில் பகிர்ந்து கொண்டான். அவனது கதைகளின் வழியேயும் அவன் சொன்னதன் மூலமும் எனக்கு கிராமங்கள் மேல் இதுவரை கட்டப்பட்டிருக்கும் புனிதப் பிம்பம் உடைந்தது. அது எல்லாவற்றையும் கேள்வி கேட்கத் துவங்கியது.

நகரம் கேவலம் கிராமம் புனிதம் என்று பொதுபுத்தியில் கட்டப்பட்டிருக்கும் சித்திரம் எத்தனை அபத்தமானது என்று அவன் கதைகள் நிறுவுகிறது.

நகரங்களில் வாழ்ந்த எனக்கு கிராமத்தின் விதிகள் அகப்படுவதாய் இல்லை. நான் வாழ்ந்த நகரங்களில் நீ என்ன சாதி என்று நேரடியாய் யாரும் கேட்டது இல்லை. யோசித்துப் பார்க்கையில் நகரம் கிராமங்களைவிட பத்திரமானது என்று தோன்றியது. சென்னையில் யாரும் எங்கும் செல்லலாம்.

யாரும் யாருக்காகவும் பயப்பட வேண்டியதில்லை. கூவம் அழுக்காய் மலமாய் நாற்றத்தோடு ஓடினாலும் தாமிரபரணியைக் காட்டிலும் புனிதமானது என்று ஏனோ தோன்றுகிறது!"

( தூசு தட்டுவோம்..!)