'ஐம்பதில் வளையாதது ஐந்தில் மட்டும் எப்படி வளைந்திருக்கும்?' என்ற கிரேக்க பழமொழியை மையமாக (அல்லது மய்யமாக) வைத்து, ஒவ்வொரு பிரபலங்களின் பள்ளிக் காலமும் எப்படி இருக்கும் என்று கற்பனைக்குதிரையைக் கண்டபடி தெறிக்க ஓட விடுவதுதான் 'அது ஒரு டவுசர் காலம்' தொடர்.
இந்த வாரம், பிரமாண்டங்களுக்கு பெயர் போன இயக்குனர் ஷங்கரின் பள்ளிக்காலத்தைதான் பார்க்கப் போகிறோம்.
'அரசு பள்ளியோ, தனியார் பள்ளியோ ஆனால், அதுக்கு பெர்மனென்ட் கட்டடம் இருக்க கூடாது. தோட்டா தரணிய வச்சு செட்தான் போட்ருக்கணும். அப்பதான் ஸ்கூல் போவேன்' என்று அடம்பிடித்திருப்பார்.
டீச்சர்கள் மட்டுமல்ல, மணி அடிக்கும் வாட்ச் மேனும் ரோபோட்ஸாகதான் இருக்க வேண்டும் என்று கன்டிஷன் போட்டிருப்பார்.
'ஸ்போர்ட்ஸ் டேவுக்கு பிரேசிலில் ப்ளே கிரண்ட் செட் போடுங்கள். ஆன்வல் டேவுக்கு டிஸ்னி லேண்டில் ஸ்டேஜ் போடுங்கள்' என ஐடியாக்களைக் கொடுத்து பள்ளி நிர்வாகத்தை அலறவிட்டிருப்பார்.
பள்ளி சுற்றுலாவுக்கு எங்கே போகலாம் என டீச்சர் கேட்டால், மற்ற மாணவர்கள் குற்றாலம், ராமேஸ்வரம் என சொல்லும்போது இவர் மட்டும், "செவ்வாய் கிரகத்துக்கு மூனு நாளு, புதன் கிரகத்துக்கு நாலு நாளு, திரும்பி வரப்ப, நாசாலருக்க நர்மதா சித்தி வீட்டுக்கு ரெண்டு நாளு..' என பட்டியல் போட்டு, எல்லோர் வாயையும் பிளக்க வைத்திருப்பார்.
ஓவிய போட்டி என்றால் குஷி ஆகியிருப்பார். இரண்டு லாரி பெயிண்ட்டை வாங்கி, வகுப்பு சுவர் மட்டுமில்லாமல், வாத்தியார்களின் வயிறையும் சேர்த்து வண்ணம் தீட்டியிருப்பார்.
நாமம் போட்டு குடுமி வைத்த பையன்கள் மட்டும்தான் நல்லாப் படிப்பார்கள், நல்லவர்கள் என்ற மூட நம்பிக்கையிலேயே வாழ்ந்திருப்பார்.
எல்லோரும் காந்தி ஜெயந்தி கொண்டாடினால், இவர் மட்டும் 'இந்தியன் தாத்தா' ஜெயந்தி கொண்டாடியிருப்பார்.
பக்கத்தில் அமர்ந்திருக்கும் மாணவர்கள் இவரிடம் சாக்பீஸ், பல்பத்தைத் திருடினால், 'கருட புராணத்தின் படி, உனக்கு கும்பிபாகம்தான்' என கூறி, உட்காரும் போது அடியில் காம்பஸை வைத்து குத்தியிருப்பார்.
ஹெட்மாஸ்டர் பிரம்பால் அடித்தால், 'உங்களுக்கும் கருட புராணத்தின்படி தண்டனை உண்டு, அந்தகூபம், அக்னிகுண்டம், வஜ்ரகண்டகம், கிருமிபோஜனம்...' என வாய்பாடு போல ஒப்பித்திருப்பார்.