'ஐம்பதில் வளையாதது ஐந்தில் மட்டும் எப்படி வளைந்திருக்கும்?' என்ற கிரேக்க பழமொழியை மையமாக (அல்லது மய்யமாக) வைத்து, ஒவ்வொரு பிரபலங்களின் பள்ளிக் காலமும் எப்படி இருக்கும் என்று கற்பனைக்குதிரையைக் கண்டபடி தெறிக்க ஓட விடுவதுதான் 'அது ஒரு டவுசர் காலம் தொடர்.
இந்த வாரம், இயக்குனர் நெல்சன் திலீப் குமாரின் Darkக்கான பள்ளிக்காலத்தைதான் ஹைஜாக் செய்து பார்க்கப் போகிறோம்.
ஓணான், நட்டுவாக்காலி, தட்டான் போன்றவற்றை திறமையாக வேட்டையாடுவதால், தன் தெரு நண்பர்களிடம் இருந்து 'வேட்டை மன்னன்' என்ற பட்டப்பெயரைப் பெற்றிருப்பார்.
போதைப் பொருள் கடத்தல், உடல் உறுப்பு கடத்தல், Mall கடத்தல் போன்ற கடத்தல் செய்திகளை விரும்பி வாசிக்கும் நெல்சன், 'கடத்தல் கண்ணியம் கட்டுப்பாடு' என தலைப்பில் பள்ளி ஆண்டு விழா பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு பரிசு கிடைக்காமல் கோப்பையைக் கடத்தியிருப்பார்.
கோகிலா என்று பெயர் வைத்த டீச்சர்களை இவருக்கு மிகவும் பிடித்திருக்கும். 'பப்ளிக் எக்ஸாம் எழுதுற வயசுதான் வந்துருச்சு மிஸ்... டியூஷன் வரவா? ஸ்பெஷல் க்ளாஸ் வரவா?' என்று பின்னாலேயே போய் பாட்டு பாடி டீச்சர்களிடம் தர்ம அடி வாங்கியிருப்பார்.
மற்ற மாணவர்கள் தங்கள் பள்ளி காதலிக்கு ரோஸ், கிரீட்டிங் கார்ட் கொடுக்கும்போது, நெல்சன் மட்டும் அரை கிலோ கோல மாவும், '100 வகையான ரங்கோலி கோலங்கள்' புத்தகமும் கொடுத்து புரபோஸ் செய்திருப்பார்.
தன்னை விஜய் ஃபேன் என்று வகுப்பறையில் சொல்லிக்கொண்டாலும், நெல்சனின் செயல்கள் அஜித் ஃபேன்களையே குஷி படுத்தியிருக்கும். 'உண்மைலயே நீ விஜய் ஃபேன்தானாடா?" என்று நெல்சனை சக விஜய் ரசிகர்கள் சந்தேகப்பட்டிருப்பார்கள்.
வீட்டுப் பாடத்தை கும்மிருட்டில் உட்கார்ந்துதான் எழுதியிருப்பார். அம்மா கேட்டால், 'இதுதான் Dark Homework' என்று விளக்கம் கொடுத்திருப்பார். இதேபோல, Dark Monthly Test, Dark Annual Day எல்லாம் ட்ரை செய்து ஹெட் மாஸ்டரிடம் பிரம்படி வாங்கியிருப்பார்.
ரெடின் கிங்ஸ்லி, மாகாளி, கிளி ஆகியோர் அவரின் தெரு நண்பர்களாக இருந்திருப்பார்கள். அவர்கள் வேறு பள்ளியில் படித்துக்கொண்டிருப்பவர்களாக இருந்தாலும், தன்னோடு தன் பள்ளிக்குத்தான் வர வேண்டும் என்று அடம்பிடித்து இழுத்து வந்து, தன் வகுப்பில் உட்கார வைத்து அழகு பார்த்திருப்பார்.
பள்ளிக்கு கிளம்பும்போது சைக்கிள் பஞ்சரானால், "எனக்கு Dassault Rafaleதான் வேணும். அதுலதான் போவேன்" என்று ஒவ்வொரு முறையும் மோடிக்கே கடிதம் எழுதியிருப்பார்.
எந்த மாஸ் ஹீரோ படம் நன்றாக ஓடினாலும், வகுப்பில் உள்ள சக விஜய் ரசிகர்கள் Beast Modeக்கு மாறி, நெல்சனையே போட்டு அடித்திருப்பார்கள்.