விஜய் டிவியில் வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கவிருக்கிறது பிக் பாஸ் 7வது சீசன். இந்த நிகழ்ச்சியின் ப்ரொமோ ஷூட்டிங் கடந்த சில தினங்களூக்கு முன் நடந்த நிலையில் நேற்று ப்ரொமோ வெளியாகியிருக்கிறது.
ப்ரொமோ தொடங்கியதும் நமக்கு முதுகைக் காட்டியபடி நடுக்கடலில் நிற்கிறார் கமல். அவருக்கு எதிரே சூரியன். அது உதிக்கிற சூரியனா அல்லது மாலையில் மறைகிற சூரியனா என்பது தெளிவாகப் புரிபடவில்லை. கடலுக்கு அமைத்திருக்கும் பாதையானது பார்ப்பதற்கு எண் 7 வடிவில் தெரிகிறது. 7வது சீசனைக் குறிக்க அப்படி அமைக்கப் பட்டிருக்கலாமென்கின்றனர்.
இருபதே செகன்டுகள் ஓடக்கூடிய இந்தப் ப்ரொமோவில் அதற்குள் விதவிதமான குறியீடுகளைக் கண்டுபிடித்து விட்டது சோஷியல் மீடியா ப்ளஸ் கமலுடைய ரசிகர்கள் மற்றும் ஆன்டி கமலியன்ஸ். ஒவ்வொன்றாகப் பார்க்கலாமா?
'ஏங்க, பளிச்னு தெரியலையா, அது உதயசூரியன்ங்க. நாடாளுமன்றத் தேர்தல் வருதில்லையா, அதுல திமுகவுடன் கூட்டணிங்கிறார்' என்கின்றனர் சில 'மய்ய'த் தொண்டர்கள்.
இவர்களின் இந்தக் கூற்று சரியென ஆமோதிப்பவர்களை ட்ரோல் செய்கிற எதிர்க் கூட்டம், 'ஆல்ரெடி அங்கதான அவர் இருக்கிறார். இப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிற டிவியை டார்ச்சைக் கொண்டு எறிந்ததெல்லாம் பழைய கதை. அசெம்ப்ளி எலக்ஷன்ல என்னைக்குத் தோத்தாரோ அன்னைக்கே சூரியனைத் தேடிப் போயிட்டாரே! இதுல சூரியனைக் காட்டிப் புதுசாச் சொல்லனுமாக்கும்' என்கிறது.
'என்ன பாஸ் சொல்றீக, அது ரைசிங் சன் இல்ல. செட் ஆகுகிற சன். வரப்போகிற நாடாளுமன்றத் தேர்தலுடன் சூரியனுக்கும் சரி, அதன் கூடச் சேரப்போகிற மய்யத்துக்க்கும் சரி, அஸ்தமனம்தான்' என்கிறார்கள் சமூக வலைதளங்களில் வலம் வரும் அதிமுகவினர். கூடுதலாக இவர்கள் கண்டுபிடித்துச் சொல்லும் இன்னொரு குறியீடு 'எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா' என வியக்க (?) வைக்கிறது. அது, 'நல்லா கவனிச்சீங்களா, அவரு ரெண்டு விரலைக் காட்டுறார் பாருங்க. அது எங்க சின்னம்ங்க. அதுக்காகவே மனுஷனுக்கு ஒரு வாழ்த்துச் சொல்லலாம்' எனக் கிறுகிறுக்க வைக்கிறார்கள் இவர்கள்.
சிரியல்களை டீடெய்லாக அலசும் shitty tamil serial details என்கிற முகநூல் பக்கத்தில் 'நடுக்கடலுக்கு பாதை போட்டுப் போய் அங்க நிற்கிறாரே, இது எதையோ ஞாபகப்படுத்தற மாதிரி இல்ல' எனக் கேட்டிருக்கிறார்கள் சில நெட்டிசன்கள், கலைஞருக்கு கடலில் பேனா வைக்கிற விஷயத்தைத் தொடர்பு படுத்துகிறார்களாம்.
சீரியசாக பிக் பாஸ் நிகழ்ச்சியை முதல் சீசனிலிருந்து பார்த்து வருகிறவர்களோ, 'அட வரப்போகிற சீசனின் ஒரு வீட்டுக்குப் பதில் இரண்டு வீடுகள்ங்கிற பேச்சு அடிபடுது. அதைக் குறிக்கத்தான் அந்த இரட்டை விரல். அவரு என்னைக்குங்க ரெட்டை இலை பக்கம் நின்னுருக்கார்' எனச் சொல்கின்றனர்.
எதிலும் சேராத சில பிக் பாஸ் ரசிகர்களோ, 'அட நீங்க வேற. இந்த ப்ரொமோவே நல்லா இல்லைங்க. தெலுங்குல கூட வெளியிட்டிருக்கிறாங்க. நாகார்ஜுனா வர்ற அந்த ப்ரொமோ பார்க்கிற மாதிரி இருக்கு. சொல்லப் போனா, இவரு நடிச்ச புன்னமை மன்னன் சீன் போல ஒரு சீனை வச்சு அதைப் பார்க்கிற மாதிரி எடுத்திருக்காங்க. ஆனா இங்க அரசியல் பேசுறேன், அதைப் பேசறேன்னு மனசுல ஒட்டலை' என்கின்றனர்.
'எது எப்படியோ, வரப்போகிற பிக் பாஸ் சீசனில் அரசியல் நிறைய இருக்கும்னு மட்டும் தெரியுது. ஏன்னா, அடுத்த வருஷம் நடக்க இருக்கிற நாடாளுமன்றத் தேர்தல்ல நிச்சயம் கமல் போட்டியிடுவார்னு எங்களுக்குத் தோணுது. சட்டசபைத் தேர்தல்ல எந்த கோயம்புத்தூர்ல தோத்தாரோ, அதே தொகுதியில திமுக கூட்டணியில நின்னு ஜெயிச்சு பாராளுமன்றத்துக்கப் போவார்னு நாங்க நம்பறோம். அந்தத் தேர்தல்ல தனக்கு இந்த பிக் பாஸ் மேடை உதவும்னு அவர் நினைக்கலாம். அதனால அரசியல் நிச்சயம் பேசுவார். அதுலயும் மத்திய அரசை தீவிரமா எதிர்க்கிற இடத்துல அவர் இருக்கிறார். அதனால காரசாரமாகவே அரசியல் பேசலாம்' என்கின்றனர், கமலின் ரசிகர்கள்.
கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது என்பது புதிதான விஷயமல்ல. 'மக்கள் நீதி மய்யம்' என்கிற கட்சியையே பிக் பாஸ் மேடைகளுக்கு மத்தியில்தான் அவர் தோற்றுவித்தார். தொடர்ந்து அரசியல் கருத்துகளை அனல் தெறிக்கப் பேசினார். சசிகலா பெங்களூரு ஜெயிலில் இருந்த போது அவருக்கு அங்கு சில சலுகைகள் கிடைத்ததை பிக் பாஸ் வீட்டில் சிறை அமைக்கப்பட்ட பொது கலாய்த்தார். கடந்த சட்டசபைத் தேர்தலின் போது பிக் பாச் மேடையைப் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தினார்.
எல்லாம் ஓ.கே.தான். ஆனால் பிக் பாஸ் மேடை அவருக்குக் கைகொடுத்ததா என்றால் அதுதான் கேள்விக்குறியாகவே நிற்கிறது. சரி, 'கை'யோடு கை கோர்க்கத் தயாராகி விட்டவருக்கு வரும் சீசனாவது கை கொடுக்கிறதா பார்ப்போம். .
அடுத்த வாரம் பார்க்கலாம்.