Bruce Lee
Bruce Lee timepass
சினிமா

Bruce Lee : 'யாரு சார் இந்த புரூஸ் லீ?' - இறந்த பின்பு அகில உலக சூப்பர் ஸ்டார் ஆன கதை !

டைம்பாஸ் அட்மின்

இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கிய முதல் படத்தில் நாயகனுக்கு 'அகில உலக சூப்பர் ஸ்டார்' என்று காமெடியாகப் பட்டம் கொடுத்திருப்பார். ஆனால், உண்மையில் அகில உலக சூப்பர் ஸ்டாராக எந்த நடிகராவது இருந்திருக்க முடியுமா? என்று கேட்டால், "ஆம், இருந்திருக்கிறார்" என்றே காலம் பதிலளிக்கிறது.

அதுவும் அந்த நடிகர் இறந்த பிறகு அவருக்கு அவ்வளவு பெரிய புகழ் கிடைத்தது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? அந்த நடிகர் வேறு யாருமில்லை. உலகம் முழுவதும் இருந்த சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சாகச நாயகன் புரூஸ்லி.

'Enter The Dragon' படத்தின் மூலம்தான் புரூஸ் லீ உலகப்புகழ் பெற்றார். அதற்கு முன் அவர் ஹாலிவுட்டில் பத்தோடு பதினொன்றாக கருதப்பட்ட ஒரு சாதாரண நடிகர். சீனாவில் அவரது படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தபோதும் ஹாலிவுட்டில் அவரை யாருக்குமே தெரியவில்லை.

இந்நிலையில் தன்னுடைய 32 ஆவது வயதில் திடீரென்று மரணம் அடைந்தார் புரூஸ்லீ. அவர் மறைந்து சில நாட்களுக்குப் பின் 'Enter The Dragon' வெளியாகி பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. 8.5 லட்சம் டாலர் செலவில் எடுக்கப்பட்ட படம் பாக்ஸ் ஆபிஸில் 20 கோடி டாலர் வசூல் செய்தது.

"யாரு சார் இந்த புரூஸ் லீ? எனக்கே அவர பாக்கணும்போல இருக்கு!" என்று ஹாலிவுட் அதிர்ந்து போய் அவரது கால்ஷீட்டுக்கு அலைந்தபோதுதான் அவர் இறந்துவிட்ட செய்தி தெரிந்தது. அதன்பின் அவரது பழைய சீனப் படங்களை வாங்கி "Return of the Dragon, Fist of Fury" என டப்பிங் செய்து ஆங்கிலத்தில் வெளியிட்டார்கள். அனைத்து படங்களும் உலகம் முழுவதும் வேற லெவல் ஹிட்.

தான் இவ்வளவு பெரிய அகில உலக சூப்பர் ஸ்டார் ஆனது தெரியாமல் நிம்மதியாக மண்ணுக்கடியில் உறங்கிக் கொண்டிருந்தார் புரூஸ் லீ.

ஹாலிவுட்டில் ஆசிய மக்களின் மீதான இனவெறியையும் எதிர்மறைக் கற்பிதங்களுக்கும் எதிராகக் குரலெழுப்பினார் புரூஸ் லீ.

- மனோஜ்குமார் ர.