இத்தனை வருடத் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட டெம்ப்ளேட் காட்சிகள் பார்த்திருப்போம். சில காட்சிகளைப் பார்த்தவுடனே அடுத்து என்ன நடக்கப்போகுதுனு ரசிகர்கள் கரெக்ட்டா சொல்லிடுவாங்க. அந்த மாதிரி சில காட்சிகளைக் கொஞ்சம் கொசுவத்தி கொளுத்திவெச்சுப் பார்க்கலாமா?
படத்துல பல்லி, கரப்பான்பூச்சி, பாம்பு இதையெல்லாம் க்ளோஸ்-அப்ல காட்டுனாங்கனா, ஹீரோயின், ஹீரோவைக் கட்டிப்பிடிக்கப் போறாங்க, அப்புறம் பாட்டு வரும்னு அர்த்தம். வாயில்லா ஜீவனை ஏன்யா வதைக்கிறீங்க?
படத்துல ஹீரோ, வில்லன்கிட்ட நிறைய அடி வாங்கியும் திருப்பி அடிக்காம அமைதியா இருக்கார்னா, அம்மாகிட்டவோ அப்பாகிட்டவோ சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கார்னு அர்த்தம். இதுக்குப் பேர்தான் சத்திய சோதனை!
படத்துல வில்லன், ஹீரோயினையோ, ஹீரோவோட தங்கச்சியையோ குறுகுறுன்னு பார்த்தா, கண்டிப்பா ரேப் பண்ண ட்ரை பண்ணப்போறார்னு அர்த்தம். உடனே ஒரு புலி பொம்மையையும் ஆடு பொம்மையையும் செட் பிராப்பர்ட்டியா ரெடி பண்ணிடுவாங்க. ஏழைக்கேத்த எள்ளுருண்டை மாதிரி எய்ட்டீஸ்க்கு ஏற்ற குறியீடு!
வில்லன்கிட்ட மாட்டிக்கிட்ட ஹீரோவுக்கு வேண்டப்பட்டவங்க யாராவது திடீர்னு சந்தோஷமாகி சிரிச்சாங்கனா, வீரமா வசனம் பேசுனாங்கனா, ஹீரோ அங்கே வந்துட்டார்னு அர்த்தம். நிச்சயம் கண்ணாடி உடையும். பைக்ல பறந்து வருவார் ஹீரோ!
வில்லன் ஹீரோவைக் கொல்ல வரும்போது இடையில ( நடுவுலப்பா!) ஒரு கேரக்டர் நின்னுட்டிருந்தா, அந்த கேரக்டர்தான் ஹீரோவைக் காப்பாத்தறதுக்காக குறுக்கே புகுந்து செத்துப்போகப்போகுதுனு அர்த்தம். அவங்களுக்கு எல்லாம் தியாகி பென்ஷன் கிடையாதா பாஸ்?
படத்துல ஒரு கேரக்டர் ஏதாவது உண்மையைச் சொல்ல வரும்போது ‘இதுக்கு மேல எதுவும் சொல்ல வேண்டாம்’னு இன்னொரு கேரக்டர் தடுத்துட்டா, அந்த உண்மை க்ளைமாக்ஸ்லதான் நமக்குத் தெரியவரும்னு அர்த்தம். ஆனா அந்த உண்மை படுமொக்கையா இருக்கும்கிறது வேற விஷயம்!
வில்லன்கூடவே இருக்கும் ஒரு கேரக்டர், வில்லனோட செயல்களைப் பார்த்து வருந்துற மாதிரி ரியாக்ஷன் கொடுத்தார்னா, அவர் ஹீரோ பக்கம் சேரப்போறார்னு அர்த்தம். அவர்தான்யா அப்ரூவர்!
படத்துல யாராவது ஒருத்தரோட உடம்பில் தழும்பையோ, காயத்தையோ அடிக்கடி காட்டினா, அதுக்கு தனியா ஒரு ஃப்ளாஷ்பேக் சொல்லப் போறாங்கனு அர்த்தம். காயம் வந்தா பிளாஸ்திரி ஒட்டுங்கய்யா, ஃபிளாஷ்பேக் சொல்லாதீங்க!