கொரியன்  டைம்பாஸ்
சினிமா

பெண்கள் பார்க்க வேண்டிய கொரியன் சினிமாக்கள்! - பார்ட் 1

பெண்களை மையமாக வைத்து கொரிய மொழியில் வெளியாகி உலகம் முழுக்க சூப்பர் ஹிட்டடித்த படங்களின் லிஸ்ட் இது...

கிங் காங்

சினிமாவைப் பொறுத்தவரை ஆண்கள் வைத்ததுதான் சட்டம். அது ஹாலிவுட்டாக இருந்தாலும் சரி, கோலிவுட்டாக இருந்தாலும் சரி. பல தடைகளைத் தாண்டித்தான் பெண்களை முன்னிறுத்தும் சினிமாக்கள் உலகமெங்கிலும் வெளியாகின்றன.

அப்படிப் பெண்களை மையமாக வைத்து கொரிய மொழியில் வெளியாகி உலகம் முழுக்க சூப்பர் ஹிட்டடித்த படங்களின் லிஸ்ட் இது...

Bedevilled :

கொரிய இயக்குநர் கிம் கி டுக்குக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரின் பட்டறையில் இருந்து வெளிவந்த ஜாங் செல் சோ இயக்கிய படம் இது.

பரபரப்பான சியோல் நகரத்தில் மூச்சு முட்டும் சூழலில் வாழ்கிறாள் ஹே ஓன். ஸ்ட்ரெஸ் அதிகமாக, ஓய்வு வேண்டி, தான் சிறுவயதில் வளர்ந்த தீவில் இருக்கும் ஊருக்குச் செல்கிறாள்.

அங்கே அவளின் பால்யகால நண்பியைச் சந்திக்கிறாள். அந்த நண்பிக்கு பின்னால் ஒளிந்திருக்கும் கதையும் அதன் விளைவுகளுமே படம். 2010-ல் வெளியான இந்த த்ரில்லர் படம் கலெக்ஷனில் ரெக்கார்ட்களை எத்தித் தள்ளியது. கூரையைப் பிய்க்கும் அளவுக்கு கலெக்ஷன்.

Mother :

வயதான விதவைத் தாய் ஒருவரால் என்ன செய்ய முடியும்? என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் எனப் பொட்டில் அடித்து உணர்த்தியது இந்தப் படம். அமைதியான சிறு நகரம் ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்படுகிறாள் ஓர் இளம்பெண்.

சாட்சி சூழ்நிலைகளை வைத்து டோ ஜூன் என்ற இளைஞன்தான் கொலைகாரன் என முடிவுக்கு வருகிறார்கள்.

தன் மகனை நிரபராதி என நிரூபிக்க சோலோவாக்ப் போராடுகிறார் டோ ஜூனின் அம்மா! க்ளைமாக்ஸ் என்ன என்பதைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!

The Housemaid :

பிளாக் அண்ட் ஒயிட் காலத்து பிளாக்பஸ்டர். 1960-ல் வெளியான லேண்ட்மார்க் சினிமா. மனைவி, இரு குழந்தைகள் என அழகான குடும்பம் டோங் சிக் கிம்முக்கு. கர்ப்பமாக இருக்கும் மனைவிக்கு உதவி செய்ய ஒரு வேலைக்காரியைப் பணிக்கு அமர்த்துகிறான் டோங்.

அது மொத்தக் குடும்பத்துக்கும் வினையாகிறது. தொடர் உயிர்பலிகள், திருப்பங்கள் என திக்திக் திரைக்கதையை அமைத்திருந்தார் இயக்குநர் கிம் கி யங். ஆல்டைம் சிறந்த கொரியப் படம் இது என சண்டை போடாமல் ஒத்துக்கொள்கிறார்கள் விமர்சகர்கள்.