Anchors  Anchors
சினிமா

Pepsi Uma, Archana - பிசியா இருந்த Anchors இப்ப என்ன செய்றாங்க? - சிறிய இடைவேளைக்குப் பிறகு Epi 25

ஆக மொத்தத்தில் தமிழ்த் தொலைக்காட்சிகளில் இப்போது தொகுப்பாளர்களுக்குப் பஞ்சம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏன் இந்த நிலை? தொகுப்பாளர்கள் வந்தாலும் நிலைத்து நிற்காததர்உக் காரணம் என்ன?

அய்யனார் ராஜன்

பெப்சி உமா, சொர்ணமால்யா, தீபா வெங்கட், அர்ச்சனா, பிரஜின், மகேஸ்வரி, விஜய் சாரதி.. – சேட்டிலைட் சேனல்கள் தமிழில் ஒளிபரப்பைத் தொடங்கிய காலங்களில் தொகுப்பாளர்களாக வலம் வந்தவர்கள். இவர்கள் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளும் ஹிட் ஆகின. இவர்களும் புகழடைந்தார்கள்.

இவர்களில் அர்ச்சனா இப்போது வரை ஃபீல்டில் இருக்கிறார். பிரஜின், மகேஸ்வரி உள்ளிட்ட சிலர் தொகுப்பாளர்களாக இல்லாவிட்டாலும் இன்றும் சீரியல், சினிமா என ஏதோவொரு பிளாட்ஃபார்மில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

சன் டிவி மட்டுமே ஆதிக்கம் செய்து வந்த நிலை மாறி வேறு சேனல்கள் வந்த பிறகான காலத்திலும் சிவகார்த்திகேயன், சந்தானம், டி.டி. ரம்யா, பாவனா, திவ்யா, சன் டிவியில் ஐஸ்வர்யா என ஒரு  தொகுப்பாளர் கூட்டம் பிரபலமாகவே இயங்கி வந்தது.

இவர்களில் சிவகார்த்திகேயன், சந்தானம் ஆகியோர் சினிமாவுக்குச் சென்று விட, டி.டி, ரம்யா, திவ்யா ஆகியோரும் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கி விட்டனர். பாவனாவோ பொழுதுபோக்கு என்கிற தளத்தில்ருந்து முழுவதுமாக விலகி தற்போது ஸ்போர்ட்ஸ் சேனல் பக்கம் சென்று விட்டார்.

இப்போது விஜய் டிவியை எடுத்துக் கொண்டால் பிரியங்கா, மா.கா.பா ஆனந்த், ரக்சன் மூவரும்தான் மாறி மாறித் தொகுத்து வழங்கி வருகிறார்கள். ஜாக்குலின் கூட சினிமாப் பக்கம் வந்து விட்டார். சன் டிவியில் தியா மேனன் இருக்கிறார். புதிய சில தொகுப்பாளர்கள் வந்தாலும் அவர்களால் நிகழ்ச்சியும் நிகழ்ச்சி மூலம் அவர்களும் பிரபலமானது போல் தெரியவில்லை.

ஆக மொத்தத்தில் தமிழ்த் தொலைக்காட்சிகளில் இப்போது தொகுப்பாளர்களுக்குப் பஞ்சம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏன் இந்த நிலை? தொகுப்பாளர்கள் வந்தாலும் நிலைத்து நிற்காததர்உக் காரணம் என்ன?

‘’தூர்தர்ஷன் மட்டுமே இருந்த நிலை மாறி தனியார் சேனல்கள் வந்தப்ப ஆங்கர்ங்கிற இந்த வேலையே புதுசா இருந்தது. எந்தவொரு நிகழ்ச்சிக்கும் ’கேட்’டா இருந்தது ஆங்கர்கள்தான். சில நிகழ்ச்சிகள் மொக்கையா இருந்தாலும் அதுல வர்ற ஆங்கர்களைப் பாக்கறதுக்குன்னே அந்த நிகழ்ச்சியைப் பார்த்தாங்க. அதனால் ஆங்கரா வர்றதுக்கும் நிறையப் பேர் ஆர்வம் காட்டினாங்க.

வர்றவங்களும் அந்த வேலையை ஆர்வமாச் செஞ்சாங்க. இன்னைக்கு யூ டியூப் சேனல் யுகமாகிட்டதால நிகழ்ச்சிகளும் பெருகிட்டதால புதுசா யோசிக்க மாட்டேங்கிறாங்க. அதனால நிகழ்ச்சிகளே புதுசா இல்லைங்கிற போது ஒரு நல்ல ஆங்கர் எப்படி உருவாக முடியும்? அதனால என்னைக் கேட்டா இன்னைக்கு டிவியில வர்ற நிகழ்ச்சிகளை மாத்தி புதுசு புதுசா யோசிச்சாதான் நல்ல ஆங்கர்களும் கிடைப்பாங்க’ என்கிறார் மகேஸ்வரி.

பிரஜினிடம் பேசினோம்.

‘’இன்னைக்கு நான் முழுக்க முழுக்க சினிமாப் பக்கம் வந்துட்டேன். ஆனாலும் உறுதியாச் சொல்வேன் ஆங்கர்ங்கிறது ரொம்பவே பொறுப்பான, திறமையான வேலை. ஒரு நிகழ்ச்சி ஹிட் ஆகறதுல ஐம்பது சதவிகித பொறூப்பு தொகுப்பாளர் கையில இருக்கு. கப்பலுக்கு நங்கூரம் எப்படியோ அப்படியானது ஒரு நிகழ்ச்சிக்கு தொகுப்பாளர் வேலை. அதனாலதான் ஆங்கர்ங்கிற அந்த வார்த்தையே வந்திருக்கும்னு நினைக்கிறேன். என் காலத்துலெல்லாம் எங்களுக்கே ரசிகர்கள் இருந்தாங்களே!

இன்னைக்கு ஆங்கர் பற்றாக் குறைன்னு சொன்னா உண்மையாகவே வருத்தப்பட வேண்டிய விஷயம். கரியர்ல ஒருத்தர் அடுத்தடுத்த கட்டத்துக்குப் போறதுங்கிறதைத் தப்புன்னு சொல்ல முடியாது. ஆங்கரிங் மூலமா ஒருத்தருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தா அவங்க அந்தப்பக்கம் போறதைத் தவிர்க்க முடியாது. அதேநேரம் எந்தவொரு ஃபீல்டுலயும் அடுத்த தலைமுறைகளை உருவாக்கி விடணுமில்லையா? அதை யார் செய்யணுமோ அவங்கதான் செய்யணும்’’ என்கிறார் இவர்.

ஆரம்பத்தில் சன் டிவியில் தொகுப்பாளராக இருந்தவரும் கடந்த சீசனில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வென்றவருமான அசீமிடம் பேசிய போது,

‘’இப்பெல்லாம் பேர் சொல்ற மாதிரி ஆங்கர்கள் உருவாகாததற்குக் காரணமா நான் நினைக்கறது பயிற்சியும் அதுக்கான முயற்சியும் இல்லைங்கிறதுதான். சகஜமாப் பேசறது, ஃபன் பண்றது, கவுண்டர் கொடுக்கிறது எல்லாமே பயிற்சியிலதான் வரும். நாம ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போறோம்னா, அதுக்கு நிச்சயம் ஹோம் ஒர்க் பண்ணிவிட்டுத்தான் போகணும். முன் தயாரிப்பு இல்லாமப் போனா சொதப்பிடும். ஏனோதானோன்னு போறதால்தான் ஒருசிலர் கொஞ்ச நாள்லயே காணாமப் போயிடுறாங்க. பெப்சி உமா, டி.டி.ஆகியோரை இன்னைக்கும் மக்கள் மறக்காம இருக்காங்கன்னா அதுக்கு அவங்க போட்ட எஃபர்ட்தான் காரணம்’ என்கிறார் அசீம்.

சரி, சொர்ணமால்யா, ரம்யா, விஜய் சாரதி.. இவர்களெல்லாம் இப்போது எங்கே என்ன செய்து வருகிறார்கள் என்கிறீர்களா? உங்களூக்காக அந்த தகவலையும் சேகரித்தோம்.

சொர்ணமால்யா திருச்சியில் பிரபலமான ஒரு ஹோட்டல் அதிபரை மறுமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகி விட்டார். ஹோட்டல் நிர்வாகத்தையும் இவரே கவனித்து வருகிறாராம். ரம்யா யூ டியூப் சேனல் தொடங்கி அதில் ஃபிட்னெஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவ்வப்போது சினிமாக்களிலும் நடிக்கிறார்.

விஜய் சாரதி கொஞ்ச காலம் சன் டிவியின் இலங்கை ஒளிபரப்பைக் கவனிப்பதற்காக அங்கிருந்தார். பிறகு சன் லைஃப் சேனலின் பொறுப்பாளராகவும் இருந்தார். இன்னொரு பக்கம் யூ டியூப் சேனலிலும் இயங்கி வருகிறார்.

தீபா வெங்கட் டப்பிங் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார்.

 அடுத்த வாரம் பார்க்கலாம்.