கண்ணின் மணி கண்ணின் மணி..
அம்மி அம்மி அம்மி மிதித்து..
கோலங்கள்,, கோலங்கள்..
சீரியல்கள் வீட்டு வரவேற்பறைக்கே வந்து மக்களின் மனதை ஆக்கிரமிக்கத் தொடங்கிய நாட்களில் தினமும் சாயங்காலமானால், இந்தப் பாட்டுச் சத்தத்தை எங்காவது ஒரு இடத்தில் எல்லாருமே கேட்டிருப்போம்,
சீரியல்கள் தொடங்குவதற்கு முன் ஒளிபரப்பாகும் டைட்டில் சாங்.
’ஆமா, இப்பெல்லாம் எந்த சீரியல்லயும் இப்படியொரு பாட்டைப் பார்க்க முடியறதில்லயே’ என்கிறீர்கள்தானே?
நிஜம்தான். செல்போன் வந்ததும் சிட்டுக்குருவிகள் காணாமல் போனது போலத்தான் சேனல்கள் அதிகமாகி சீரியல்கள் பெருகியதும் டைட்டில் சாங் காணாமல் போய் விட்டது.
ஏன்? என்ன நடந்தது? சீரியல் வட்டாரத்தில் பலரிடம் பேசினோம்.
‘பூவே உனக்காக’ உள்ளிட்ட சில சீரியல்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் சொல்வதைக் கேளுங்கள்..
‘’ஆரம்பத்துல தனியார் தொலைக்காட்சிகளின் எண்ணிக்கையே குறைவு. அதனால சீரியல்களுக்கிடையில் போட்டி இருக்காது. ஒரு சேனல்ல ஒளிபரப்பாகிற சீரியல்களே டி.ஆர்.பி.யில் அடுத்தடுத்த இடங்களைப் பிடிக்கும். சீரியல் ஒளிபரப்பு பிசினஸும் தயாரிப்பாளர் கையில் இருந்தது. சேனலுக்கு பணம் கட்டி ஸ்லாட் வாங்கிடுற தயாரிப்பாளரே மார்க்கெட்டிங் பொறுப்பையும் ஏத்துக்கிடுவார். அதனால டைட்டில் சாங் ரெண்டு நிமிஷமோ மூணு நிமிஷமோ தயாரிப்பாளர் விருப்பப்படி வச்சுக்கலாம். ஆனா இப்ப அப்படியில்லை.
வடக்கே இருந்து வந்த ஃபண்டட் (funded) முறைதான் இன்னைக்கு எல்லா சேனல்கள்லயும் இருக்கு. இந்த முறைப்படி சேனல் ஒரு தொகையைத் தந்து அந்த பட்ஜெட்டுக்குள் சீரியலை எடுத்துக்கோங்கனு சொல்றாங்க. அப்படி எடுக்கற பட்சத்துல கதை வேகமா மூவ் ஆகணும்கிறதைத்தான் சேனல் விரும்புது.
இன்னைக்கு சேனல்கள் பெருகி சீரியல்களும் அதிக எண்ணிக்கையில் ஒளிபரப்பாகறதால் டைட்டில் சாங் ஒளிபரப்பாகிற அந்த ரெண்டு நிமிஷத்துல ஆடியன்ஸ் சேனலை மாத்திடக் கூடாதுன்னு நினைக்கிறாங்க. ’தினமும் அதே பாட்டை மக்கள் ரசிக்கறதில்லை’னும் ஒரு பாயிண்டைச் சொல்வாங்க. இதனாலத்தான் இப்ப சீரியல்களில் டைட்டில் சாங் தினமும் ஒளிபரப்புவதில்லை.
டைட்டில் சாங்னு எடுப்பாங்க தொடர் ஆரம்பிச்ச பத்து நாளைக்கு ஒளிபரப்புவாங்க. பிறகு வராது. இன்னொரு விஷயம் தெரியுமா சார், இப்பெல்லாம் சில சீரியல்கள்ல ஓர்க் பண்ற டெக்னீஷியன்கள் பெயரே முழுசா வர்றதில்லை. டைரக்டர், புரடியூசர் பெயரை மட்டும் போட்டுட்டு சீரியல் தொடங்கிடுது’’ என்கிறார் இவர்.
’நேரம் கருதி டைட்டில் சாங் போடறதில்லை’னு சொல்வதைக் கேக்குறப்பவே வருத்தமா இருக்குங்க’’ எனப் பேசத் தொடங்கினார் நடன இயக்குநர் சாந்தி.
‘’நேரமில்லை’னு சுலபமா சொல்லிட்டுப் போயிடுறாங்க. ஆனா இந்த விஷயத்தை இன்னொரு கோணத்துல பார்க்கணும். இன்னைக்கு சீரியல்கள் நிறைய இருக்கு. ஒரு சீரியலுக்கு ஒரு டைட்டில் சாங்னு எடுத்துக்கிட்டாலும் அது மூலமா நூற்றுக் கணக்கான டான்சர்களுக்கு வேலை கிடைக்கும். இப்பெல்லாம் தமிழ்ப் படங்கள்ல பெரிய படங்களின் படங்கள்னா பக்கத்து மாநிலத்துல போய் செட் போட்டு ஷூட் பண்ணிடுறாங்க, அப்படி நடக்கறப்ப இங்க இருக்கிற தமிழ் டான்சர்களுக்கு வேலை இல்லை. சீரியல்களாச்சும் வேலை தருவாங்கன்னு பார்த்தா, அங்கேயும் இந்த மாதிரி நடந்தா எங்களைப் போன்ற கலைஞர்களுடைய வாழ்க்கை? நிறைய டான்ஸர்கள் இப்ப கஷ்டப்படறது இதனாலத்தான். டைட்டில் சாங்கும் ஒரு பொழுதுபோக்குதான். மக்கள் பார்க்க மாட்டாங்கனு சொல்றதையெல்லாம் நம்ப முடியாது. ’மெட்டி ஒலி’ சாங்கை அந்தப் பாட்டுக்கும் நடனத்துக்காகவுமே பார்த்தவங்க இருக்காங்க. இப்ப ‘அன்பே வா’ சீரியலில் எம்.ஜி.ஆர் படப் பாடலையே டைட்டில் சாங்கா வச்சாங்க. நாந்தான் கோரியோ பண்ணினேண். அதை மக்கள் ரசிச்சாங்களே. அதனால அர்த்தமுள்ள பாட்டு வரிகளை எழுதி கோரியோ பண்ணி எடுத்தா, மக்கள் சேனல் மாத்தாம ரசிப்பாங்க’’ என்கிறார் இவர்.
‘இப்பெல்லாம் சில சீரியல்களில் டைட்டில் கார்டுல இயக்குநர் பெயரே வர்றதில்லை பாஸ்’ எனப் பேசத் தொடங்கினார் ‘லஷ்மி ஸ்டோர்ஸ்’ உள்ளிட்ட சீரியல்களுக்கு திரைக்கதை வசனம் எழுதிய பாலமுருகன்..
‘’என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னனா, மக்களுக்கே சீரியல் டைட்டில் சாங்கை முழுசா பார்க்க, கேட்க பொறுமை இல்லைங்கிறதுதான். அதிகமாகிட்ட சீரியல்களின் எண்ணிக்கைதான் காரணம். ரெண்டு நிமிஷம் சாங் ஓடற நேரத்துல வேற சேனல்ல வேற சீரியல்ல என்ன நடந்திருக்கும்னு பார்க்கக் கிளம்பிடுறாங்க.
மத்தபடி எல்லா சீரியல்களிலும் டைட்டில் சாங்குக்கு முக்கியத்துவம் கொடுத்தா பாடலாசிரியர்களுக்கும் வேலை கிடைக்கும். அவங்களுக்கும் வேலை வைக்கக் கூடாதுன்னு பழைய சினிமாப் பாடல்களை ரீ மிக்ஸ் பண்றாங்கன்னா எங்க போய் என்ன சொல்றது’’ என்கிறா பாலா.
சீரியல்களின் வரலாற்றில் ‘சித்தி’ டைட்டில் சாங்கை யாரும் மறக்கவே மாட்டார்கள். அதைக் கம்போஸ் செய்த தினா என்ன சொல்கிறார்?
‘என் இசைப்பயணமே அந்தப் பாட்டு மூலமாத்தான் தொடங்குச்சு. நான் கம்போஸ் பண்ணின முதல் பாடல் அது. சில வருடங்களூக்கு முன்னாடி ’சித்தி 2’ க்காக ஒரு டைட்டில் சாங் தயார் செய்து சன் டிவியில் கொடுத்தப்ப, ’இந்தப் பாட்டு பழைய பாட்டை பீட் பண்ணாது; அதனால பழைய அதே டைட்டில் சாங்கே இருக்கட்டும்’னு சொன்னாங்க. அந்தளவு அந்த சாங் தாக்கத்தை உண்டாக்குச்சு.
இன்னைக்கும் சினிமாவுல நான் போட்ட மன்மத ராசா பாடலை விடவும் இந்தச் சித்தீ.. பாடல்தான் எனக்கு ரொம்பப் பிடிச்சதுன்னு சொல்வேன். சீரியல்கள் அதிகமாகிட்ட நாட்கள்ல டைட்டில் சாங்குக்கும் முக்கியத்துவம் இருந்தா நல்லா இருக்கும்கிறதுதான் என்னுடைய ஆசை. சேனல்கள் தான் இந்த விஷயத்துல யோசிக்கணும்’’ என்கிறார் தினா.
- அய்யனார் ராஜன்.