GMarimuthu
GMarimuthu Timepassonline
சினிமா

Ajithkumar பற்றி கடைசிவரை பேசிக்கொண்டிருந்த Marimuthu! #RIPMarimuthu

Saran R

மறைந்த நடிகர் மாரிமுத்து பற்றி பலர் சொல்லும் சுவாரஸ்ய தகவல்கள் ஆச்சர்யம் அளிக்கின்றன. 

 அவருக்கு பெரும் புகழைத் தேடி தந்தது 'எதிர்நீச்சல்' சீரியலில் அவர் ஏற்று நடித்த குணசேகரன் பாத்திரம் தான். அண்மையில் அந்த பாத்திரத்தில் நடித்த மாரிமுத்து பேசிய டயலாக் என்ன தெரியுமா..? 

''வலி வந்து அழுத்துது...அப்பப்ப வலிக்குது. உடம்புல வர்ற வலியா...இல்லை மனசுல வர்ற வலியானு தெரியல. ம்ம்ம்ம்.... ஒரே இதா இருக்கு... அப்பப்போ வலி வருது. வந்து ஏதோ எச்சரிக்கை பண்ணுதுன்னு தோணுது...ஏதோ நடக்கப் போகுதுனு தோணுது...அதான் நெஞ்சு வலி வந்து அப்பப்போ எனக்கு மணி அடிச்சு காட்டுது!'' - இப்படி அவர் டயலாக் பேசியதைச் சொல்லிச் சொல்லி கண்ணீர் சிந்துகின்றனர்  'எதிர்நீச்சல்' சீரியல் குழுவினர். 

எஸ்.ஜே.சூர்யாவிடம் 'வாலி' படத்தின்போது இணை இயக்குநராக இருந்தபோது அஜித்குமார் இவரின் மதுரைத் தமிழ் பேச்சுக்கு ரசிகராம். அஜித்குமாருக்கு 'ப்ராம்ப்ட்' டில் டயலாக் சொல்லிக் கொடுக்கும் பணிகளை அந்தப் படத்தில் ஷூட்டிங்கின் போது செய்ததால் ரொம்பவே அஜித்துக்கு இவரைப் பிடித்து விட்டது. ஒரு நாள் படப்பிடிப்பின்போது எஸ்.ஜே.சூர்யாவிடம் தன் மகனை எல்.கே.ஜியில் சேர்க்க ஒரு நாள் விடுப்பு கேட்டிருக்கிறார் மாரிமுத்து. இதைக் கேட்ட அஜித்குமார், 'எங்கே பையனை சேர்க்கப் போறீங்க?' என்று கேட்டிருக்கிறார். வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் புகழ்பெற்ற பள்ளிக் கூடத்தின் பெயரைச் சொல்லி 'அங்கேயா சார் சேர்க்க முடியும்... ஒரு சின்ன ஸ்கூல் தான் சார்!' என்று வேறொரு பள்ளியின் பெயரை சொல்லியிருக்கிறார். 

பணப்பிரச்னைதான் காரணம் என்பதை உணர்ந்த அஜித்குமார். உடனடியாக தன் மேனேஜரை அழைத்து, அந்த புகழ்பெற்ற பள்ளியில் அட்மிஷன் போட்டு பணத்தைக் கட்டச் சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார். இதனால் நெகிழ்ந்து போனார் மாரிமுத்து. அதைவிட இன்ப அதிர்ச்சியான விஷயம் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக் கூடத்துக்கு ஃபீஸ் கட்ட மாரிமுத்து போகும்போது, அஜித்குமாரின் மேனேஜர் ஒரு ஆளை நியமித்து அந்த ஆண்டுக்கான ஃபீஸை ஏற்கனவே கட்டிச் சென்றிருப்பார். இப்படி ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல... அந்த புகழ்பெற்ற பள்ளியில் அவர் மகன் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை அஜித்குமார்தான் தன் மேனேஜர் மூலம் ஃபீஸ் கட்டியிருக்கிறார். 

மாரிமுத்து படங்கள் இயக்க ஆரம்பித்த பிறகும்கூட அஜித்குமார் இந்த உதவியை விடாமல் செய்திருக்கிறார். 'வாலிக்குப் பிறகு அஜித் சார் கடகடனு வளர்ந்து பெரிய ஸ்டார் ஆகிட்டார். அவரோட தொடர்பும் விட்டுப் போச்சு. ஆனாலும், நான் நேரில் சந்திச்சு தொடர்ந்து உதவுங்கள் என்று கேட்காதபோதும் நான் மேலே வரும் வரை அல்லது என் மகனுக்கு விபரம் தெரியும் வரை இந்த உதவியை நிறுத்தாமல் செஞ்சிருக்கார் அஜித் சார். இந்த மனம் யாருக்கு சார் வரும்?' என்று ஊடகங்களில் தொடர்ந்து அஜித்குமார் பற்றி நன்றியோடு பேசி வந்தார். 

வலிமை படப்பிடிப்புத் தளத்தில் அஜித்குமாரை சந்தித்த போது, தன் மகன் படிப்புக்கு செய்த உதவியைப் பற்றி சொல்லி நன்றி சொல்லியிருக்கிறார் மாரிமுத்து. அஜித் சின்ன புன்முறுவலோடு, 'உங்க நடிப்பு நல்லா இருக்கு சார்...நாம சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்!' என்று மட்டும் சொல்லியிருக்கிறார்.

- மோ.நாக அர்ஜுன்