Sun TV timepass
சினிமா

Sun TV vs Vijay TV : யார் நம்பர் ஒன் ? - TRP Rating சொல்வதென்ன? | சிறிய இடைவேளைக்கு பிறகு Epi 18

கால் நூற்றாண்டுக்கும் மேலாக இந்த இடத்தில் வலுவாகக் காலூன்றி இருந்த சன் டிவி ஏற்க மறுத்தாலும் விஜய் டிவி நிகழ்த்தியிருக்கும் இந்தச் சம்பவம் ஒரு சாதனைதான்.

அய்யனார் ராஜன்

விஜய் டிவி தனது பயணத்தில் ஒரு பெரிய சாதனையைச் நிகழ்த்தியிருக்கிறது. இரு தினங்களுக்கு முன் ‘இன்றைய தேதிக்கு தமிழில் நம்பர் ஒன் சேனல் நாங்கள்தான்’ என்ற அந்தச் செய்தியைத் தனது சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிட்டது. சில தகவல்கள், புள்ளி விபரங்களின் அடிப்படையில் அந்தத் தகவல் வெளியான மறு நிமிடத்திலிருந்தே, டிவி வட்டாரத்தை பரபரப்பு பற்றிக் கொண்டது.

‘யார் சொன்னது, நாங்கள்தான் நமப்ர் ஒன்’ என அடுத்த சில மணி நேரங்களில் சன் டிவி தரப்பிலிருந்தும் வேறு சில புள்ளி விபரங்களுடன் சமூக வலைதளங்களை அலற விட்டார்கள். ‘அட, யார்தான் நம்பர் ஒன்’ என்கிறீர்களா? கொஞ்சம் விரிவாகப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.

சீரியல், ரியாலிட்டி ஷோ, டிவியில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள் என எல்லாவற்றையும் சேர்த்து மக்கள் எந்த டிவியில் எந்த நிகழ்ச்சியை அதிகம் பார்க்கிறார்கள் எனக் கணக்கிட்டுத் தரவுகளைச் சேர்த்து வெளியிடப்படுவதுதான் டி.ஆர்.பி எனப்படும் ‘டெலிவிஷன் ரேட்டிங் பாயிண்ட். (எந்த அடிப்படையில் எப்படி யார் கணக்கிடுகிறார்கள் என்பதை இன்னொரு எபிசோடில் விரிவாகப் பார்க்கலாம்)

இந்த டி.ஆர்.பி. விபரங்களை வைத்தே தொலைக்காட்சிகளுக்கு விளம்பரங்கள் கிடைக்கின்றன. ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை இந்த டி,ஆர்.பி, ரேட்டிங் பட்டியல் வெளியாகின்றது. இந்தியா முழுக்க பல்வேறு மொழிகளில் வெளியாகிற டிவி நிகழ்ச்சிகளில் எந்த மொழியில் எந்த நிகழ்ச்சி, எந்தெந்த சேனல்களுக்கு அதிக ரேட்டிங் புள்ளிகள் கிடைத்திருக்கின்றன என்பது அந்தப் பட்டியலில் வெளியாகும்.

தமிழ் தொலைக்காட்சிகளைப் பொறுத்த வரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை டாப் பத்து இடங்கள் சன் டிவி சீரியல்களுக்குத்தான் கிடைத்துக் கொண்டிருந்தன. சேனல்களிலும் சன் டிவிக்குத்தான் முதலிடம்.

ஆனால் சமீபத்திய சில ஆண்டுகளில் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சேனல்களில் வெளியான சில சீரியல்கள் மெல்ல மெல்ல முன்னேறி டாப் 10 இடங்களுக்குள் வரத் தொடங்கின. அதிலும் ஒரேயொரு முறை ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வந்த ‘செம்பருத்தி’ தொடர் சீரியல்களில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்து சன் டிவிக்கு பெரிய அதிர்ச்சியைத் தந்தது. ஜீ தமிழ் வரலாற்றில் இது ஒரு முக்கியமான சாதனை.

‘செம்பருத்தி’ இந்தச் சாதனையை நிகழ்த்தியதும், ‘கூட்டிட்டு வாங்கடா அந்த தங்கங்களை’ என அந்த சீரியலை இயக்கிய இயக்குநரையும், சீரியலில் நடித்த ஹீரோயின் சபானாவையும் சன் டிவி இழுத்தது தனிக்கதை. இப்போது சபானா சன் டிவியின் ‘மிஸ்டர் மனைவி’ சீரியலின் கதாநாயகி. ’செம்பருத்தி’க்குப் பிறகு ஜீ தமிழ் நிகழ்ச்சிகள் கொஞ்சம் பின்னுக்குப் போக, விஜய் டிவி மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்தது.

ஏற்கெனவே நகர்ப்புற ஆடியன்ஸை ஓரளவுக்குத் தங்கள் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் கவர்ந்து விட்ட விஜய் டிவி தரப்பினர் அப்படியே சீரியல்களிலும் கவனம் செலுத்தினார்கள். ‘ராஜா ராணி’, ’பாரதி கண்ணம்மா’, ‘பாக்கியலட்சுமி’, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என விஜய் டிவியின் இந்தப் பிரைம் டைம் சீரியல்களுடன் பகல் நேர சீரியல்களுமே ரசிகர்களை இழுக்கத் தொடங்கின. அப்போதே சீரியல் ஏரியாவிலும் சன் டிவியின் ஆதிக்கம் வலுவிழக்கத் தொடங்கி விட்டதெனச் சொல்லலாம்.

சரி, இப்போதைய ‘நம்பர் ஒன்’ இடப் பிரச்னைக்கு வருவோம். கடந்த வியாழன் வெளியான டி.ஆர்.பி. ரேட்டிங் அடிப்படையில்தான் ‘நாங்கள் நம்பர் ஒன்’ என்கிறது விஜய் டிவி. இந்த இடத்தில் டி,ஆர்.பி. கணக்கிடும் முறை குறித்தும் சின்னதாக ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

டி.ஆர்.பி கணக்கிடும் போது நகர்ப்புறம், கிராமப்புறம் எனத் தனித்தனியாக கணக்கிட்டு புள்ளி விபரங்களை வெளியிடுவார்கள். அதேபோல் எந்த வயதுக்காரர்கள் அதிகம் பார்க்கிறார்கள் என்பது வரை புள்ளி விபரங்கள் கிடைக்கின்றன.

அந்த வகையில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் பதினைந்து வயது கடந்தவர்கள் அதிகம் பார்ப்பது விஜய் டிவி நிகழ்ச்சிகள்தான் என்கிற ஒரு தரவு வெளியாகியுள்ளது. விஜய் டிவி இந்த விபரத்தைச் சுட்டிக்காட்டியே ‘நம்பர் ஒன்’ என்கிறது.

கால் நூற்றாண்டுக்கும் மேலாக இந்த இடத்தில் வலுவாகக் காலூன்றி இருந்த சன் டிவி ஏற்க மறுத்தாலும் விஜய் டிவி நிகழ்த்தியிருக்கும் இந்தச் சம்பவம் ஒரு சாதனைதான். எனவேதான் விஜய் டிவி வட்டாரங்கள் இந்தப் பட்டியல் வெளியான மறு நிமிடத்திலிருந்து இதைக் கொண்டாடி வருகிறார்கள்.

விஜய் டிவி இதை வெளியில் சொல்லத் தொடங்கிய பிறகே சன் டிவியும் தன் பங்குக்கு ‘என்றும் தமிழகத்தின் நம்பர் ஒன்’ என நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்த்து வெளியான பட்டியலை ஆதாரம் காட்டி, விஜய் டிவியால் ஏணி வைத்தாலும் எட்ட முடியாது என்கிறது. இவர்கள் சண்டையில் நல்ல, பொழுதுபோக்கான நிகழ்ச்சிகள் ரசிகர்களுக்குக் கிடைத்தால் மகிழ்ச்சிதான்.

அடுத்த வாரம் பார்க்கலாம்.