உதவி இயக்குனர் டைம்பாஸ்
சினிமா

'நீ கிளாப் அடிக்க நேரம் வந்திருச்சு. புரொடியூசர் ரெடி' - உதவி இயக்குனர்களின் பரிதாபங்கள்

நான்கைந்து நாட்கள் அசிஸ்டென்ட் டைரக்டர் ஆகிவிட்டால், அடுத்த சில நாட்களில் கோ-டைரக்டர் ஆகிவிடலாம். என்ன ஒண்ணு இதுல எதுவுமே நிஜத்துல நடக்காது. எல்லாமே ஆபீஸில் மட்டும்.

கிங் காங்

பிரபல சினிமா இயக்குநரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்து, அவங்ககிட்ட அவஸ்தைகள அனுபவிக்கிறதெல்லாம் பரவாயில்லை. ஆனா, ‘தோ நாளைக்கு ஷூட்டிங்’, ‘அடுத்த வாரம் பூஜை போடுறோம்’ என்று காதில் ஒரு லோடு பூ சுத்தும் சில அகாசுகா இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்து படும் அவஸ்தை இருக்கே...

இயக்குநரின் அலுவலகமே ஒரு மார்க்கமாத்தான் இருக்கும். லெஃப்ட்டில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் சிரித்தால், ரைட்டில் கன்னத்தில் கை வைத்திருப்பார் சத்யஜித் ரே.

நான்கைந்து நாட்கள் அசிஸ்டென்ட் டைரக்டர் ஆகிவிட்டால், அடுத்த சில நாட்களில் கோ-டைரக்டர் ஆகிவிடலாம். என்ன ஒண்ணு இதுல எதுவுமே நிஜத்துல நடக்காது. எல்லாமே ஆபீஸில் மட்டும், அசிஸ்டென்ட் டைரக்டர், கோ-டைரக்டர் என்று கூப்பிட்டுக்கொள்வார்கள்.

இந்த மாதிரி சிச்சுவேஷனில் நீங்கள் மனம் உடைந்து போனால், தன்னோட ஃப்ளாஷ்பேக் கொசு வர்த்தியைப் பற்றவைப்பார் டைரக்டர்.

‘சான்ஸ் கேட்டதும் அசிஸ்டென்ட் டைரக்டர் ஆயிட்டா இப்படித்தான்டா. உன் வயசு இருக்கும்போது, நானெல்லாம் கோடம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன்லேயே படுத்துத் தூங்கி, பல்லு வௌக்குவேன். இப்போதான் எனக்கான வாய்ப்பு கைகூடி வந்திருக்கு. கவலைப்படாதே, அந்த மாதிரியெல்லாம் உன்னை விட்டுட மாட்டேன்டா’ என்று சென்டிமென்டைப் பிழிவார்.

திடீர்னு ஒருநாள், ‘டேய் உடனே கிளம்பி வா. நீ கிளாப் அடிக்கிற நேரம் வந்திருச்சு. புரொடியூசர் ரெடி’னு டைரக்டர்கிட்ட இருந்து போன் வரும்.

அடுத்த சில நிமிஷத்துல அந்த டைரக்டரைப் போய்ப் பார்த்தால், ‘என்னடா இவ்ளோ லேட்டா வர்ற? இப்பத்தான் கௌம்புறார் புரொடியூசர். இனிமேதான்டா நம்ம ஃலைப் ஸ்டார்ட் ஆகுது’ எனக் கொஞ்சம் ஆனந்தக் கண்ணீரோடு பஞ்ச் பேசும்போது, ‘காலம் பூராவும் உன் படத்துக்கு நான்தான் அசிஸ்டென்ட்’னு கால்ல விழுந்துடலாமோனுகூடத் தோணும்.

ஆனா அந்தப் புது புரொடியூஸரை அதுக்கப்புறம் பார்த்திருக்க மாட்டோம். இன்னொரு நாள் ‘புது புரொடியூசர் ரெடி... ஆனா ஒரு குறும்படம் எடுத்துக் கொடுக்கணும்’ என புதுசாக ஒரு கதையைக் கிளப்புவார் டைரக்டர். ‘ஆஹா... முதல்முறையா ஷூட்டிங் போறாமே?’னு ஆசையாதான் இருக்கும்.

அதே சமயம் திரைப்பட புரமோஷனுக்குக் காட்டுகிற வீடியோக்கள்ல டைரக்டர் என்னென்ன பண்றார்னு பார்த்து பிராக்டிஸ் பண்ணிக்கிட்டு இருப்பார் இவர்.

ஒரே பொசிஷனில் நின்றுகொண்டு, ஒரே பொருளைக் கண் சிமிட்டாமல் பார்க்கிறார் என்றால் அதுதான், ‘உள்வாங்குதல்’. ஆனா, எதை உள்வாங்குறார்னு வெளியே இருக்கிற அசிஸ்டென்ட்களுக்கு சத்தியமா தெரியாது. என்ன நடக்குதுன்னே புரியாம, அரை மயக்கத்துல இருக்கிற உதவி இயக்குநர்களும் ‘சூப்பர்ணே...’ என ஏ.சியைத் திருப்புவோம்.

இவ்வளவு அலும்புகளும் அடங்கிய மறுநாள், ‘நான் சொன்ன பட்ஜெட் செட் ஆகாதுனு சொன்னான். இடத்தைக் காலி பண்ணுனு அந்த புரொடியூசரை விரட்டிட்டேன்டா’ என கூலாகச் சொல்வார் டைரக்டர்!