Tamil timepass
சினிமா

Tamil Cinema : அக்குள்ல வெங்காயம், சின்ன வயசு ஜட்டி, கிழிஞ்ச நோட்டு-Cringe காதல் காட்சிகள் லிஸ்ட் !

ABCD படத்துல ஹீரோ ஷாம் அம்மா, சின்ன வயசுல ஷாம் ஜட்டிய துவைச்சு, காயப்போட்டு, அயரன் பண்ணி போட்டோ பிரேம் செஞ்சு மருமகளுக்கு கிஃப்டு கொடுக்க வெச்சிருக்காங்க. ஏம்பா இதெல்லாமா கொடுப்பிங்கனு கேட்க கூடாது.

டைம்பாஸ் அட்மின்

’அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சு’ங்கிற மாதிரி எல்லாத்துக்குமே ஒரு எல்லை இருக்கு. அது மீறினா கதை கந்தல்தான். அதுவும் நம்ம தமிழ் சினிமாவுல சொல்லவே வேணாம். காதலுக்கு மெனக்கெடுற அளவுக்கு வேலைக்கு ’டிரைப்’ பண்ணியிருந்தா நிறைய இளைஞர்கள் லைஃப்புல செட்டிலாயிருக்கலாம். காதல் சீன் யோசிக்கும்போது மட்டும் டைரக்டர்களுக்கு பெட்ரோல் ஊத்துன வைகோல் மாதிரி ’திக்’ குன்னு பத்திக்கும். அந்த அளவுக்கு லவ் சீன்ஸா எழுதிக் குவிச்சிருவாங்க. அப்படி மல்லாக்காப்படுத்து யோசிச்ச சில ’ரொமான்ஸ்’ காட்சிகளை கொஞ்சம் அலசிப் பார்ப்போம்.

1. சின்ன வெங்காயத்தை நசுக்கி அக்குள்ல வெச்சா, அஞ்சு நிமிஷத்துல காய்ச்சல் வரும்னு சித்த வைத்திய சிகாமணி மாதிரி அப்பவே சிந்தனைய பாயவிட்டு சீன் பிடிச்சிருக்காங்க. ’அலைகள் ஓய்வதில்லை’னு கார்த்திக் – ராதா அறிமுகமான படம். ரெண்டு பேருக்கும் லவ்வு கடலைவிட பெருசா பரவுது. அந்த நேரம் பார்த்து காலேஜ்ல சீட்டு கெடைச்சி ராதா வெளியூருக்குப் படிக்கப்போகுற விஷயம் தெரிஞ்ச கார்த்திக், மாடி ஏறிக்குதிச்சி ராவோடு ராவா ராதாவ பார்க்க வர்றார்.

வந்து காதல் சில்மிஷம் பண்ணுவார்னு பார்த்தா, சின்ன வெங்காயம் நசுக்கி ராதா அக்குள்ல வெச்சி.. ’இதை வெச்சா காய்ச்சல் வரும் உன்னை காலேஜுக்கு அனுப்ப மாட்டாங்க’னு சொல்லிட்டு, மிச்சம் இருக்கிற வெங்காயப் பீஸை தன் அக்குள்லயும் வெச்சிக்குவாரு. ’காய்ச்சல் எனக்கு வந்தா போதாதா நீ எதுக்கு வெச்சிக்கிறே..?’னு ராதா கேட்க, கார்த்திக் கண் கலங்கினபடி ’நீ வேற நான் வேறயா..?’னு சொல்றப்போ, ஒரு நாட்டுப் பசுமாடு நம்ம நெஞ்சை நக்கிக்கொடுத்த மாதிரியே இருக்கும்.

2 . ’மனசுக்குள் மத்தாப்பு’ னு ஒரு படம். பிரபு ஹீரோ. சரண்யா ஹீரோயின். மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில இருக்கிறார் பிரபு. ஆனா, இந்த காதல் சீன் பிரபுவுக்கும் – சரண்யாவுக்கும் இல்ல. சரண்யாவுக்கு முன்னாடி பிரபு காதலிச்ச, இறந்துபோன லியா பற்றியது. லியாங்கிற பொண்ணை பிரபு ரொம்ப நேசிக்கிறாரு. அந்தப்பொண்ணு விலகி விலகி ஓடுது. ஒருநாள் ’என் காதலை ஏத்துக்கலன்னா என் காரை எம்மேல, நானே ஏத்திக்கிட்டு செத்துப்போயிடுவேன்’ றார் பிரபு.

அது எப்படிங்க அவர் மேல, அவரே காரை ஏத்த முடியும்..?னு கண் இமைகளை மேல ஏத்திவிட்டுக்கிட்டுப் படத்தைப் பார்த்தா, உயரமான இடத்துல காரை நிறுத்திட்டு… அது இறங்க.. இறங்க.. குறுக்கால படுத்து பயங்காட்டுறார். அடுத்து ஒரு சீன்ல லியாவுக்கு பிறந்தநாள் வருது அந்த பொண்ணு ஆர்டர் பண்ண கேக்குல இவர் ’அனிதா ஐ லவ் யூ’ னு எழுதி வெச்சிருவாரு..

கடுப்பான லியா அந்த கேக்கை தூக்கிப்போட்டுட்டு வேற கேக்கு வாங்க பேக்கரிக்குப் போய் பார்த்தா, இருக்குற மொத்தக் கேக்குலயும் ’அனிதா ஐ லவ் யூ’ னு எழுதி வெச்சிருப்பாரு. இப்படி கிறுக்குத்தனம் நடந்தாலும் ’அதெப்படிங்க அடுத்தவன் பேக்கரில நுழைஞ்சி எழுத முடியும்..?’ னு இந்த ஜென்ட்ரேஷனா இருந்தா கேள்வி கேட்கும். ஆனா, அப்போ படம் பார்த்தவங்க இந்த சீனுக்கும் கைத்தட்டி விசிலடிச்சிட்டுதான வந்தாங்க.

3 . பல வருஷங்களுக்கு முன்னாடியே காதல் சீன்கள் பண்றதுல நம்ம தமிழ் சினிமா இயக்குனர்கள் கொடிகட்டி வாழ்ந்தாங்கன்னே சொல்லலாம். உதாரணத்துக்கு.. வீட்டுக்கு விளக்கேத்த வர்ற மருமகளுக்கு மாமியார் புடவை, நகை, ஸ்கூட்டின்னு எதாச்சும் கிஃப்டு கொடுக்கிறது வழக்கம். ஆனா, ’ஏபிசிடி’ படத்துல ஹீரோ ஷாம் அம்மா, சின்ன வயசுல ஷாம் ஜட்டியக் கழட்டி, துவைச்சு, காயப்போட்டு, அயரன் பண்ணி போட்டோ பிரேம் செஞ்சு மருமகளுக்கு கிஃப்டு கொடுக்க வெச்சிருக்காங்க. ’ஏம்பா இதெல்லாமா கொடுப்பிங்க..?’னு யாரும் கேள்வி கேட்க முடியாது. ஏன்னா டைரக்டர் பீஃல் பண்ணிட்டாரு.

அந்த போட்டோ பிரேமை யாருக்கும் தெரியாம மறைச்சிக் கூட வைக்கலங்க’. ’என்னைப் பாரு என் அழகைப் பாரு’ ன்ற மாதிரி வீட்டு ஹால்ல மாட்டி வெச்சிருப்பாங்க. ஷாம் அதை தலையணைக்குள்ள மறைச்சு வைக்க, அதை ஹீரோயின் சினேகா எடுத்து ’என்ன இது..?’ னு கேட்க, ஷாம் விஷயத்தை சொல்ல, சினேகா முகத்துல ஒரு வெட்கம் படரும் பாருங்க. பார்த்துக்கிட்டே இருக்கலாம்.

4. அப்போல்லாம் இப்போ மாதிரி இந்து கடவுள்களை இழிவு பண்ணிட்டாங்கன்னோ, சாமியோட வாகனங்களை சிறுமைப்படுத்திட்டாங்கன்னோ யாரும் கோஷம் போட்டு கொடி பிடிக்கிறதில்லை. அதனாலதான் தமிழ் சினிமாவுல தன் இஷ்டத்துக்கு பாம்பு, பசுமாடு, குரங்கு, மயில், பூரான், பல்லி, கரப்பான்பூச்சிய வெச்செல்லாம் படம் எடுத்தாங்க.

அப்படி முருகனோட வாகனமான மயிலை மையமா வெச்சி ’தாயில்லாமல் நானில்லை’னு ஒரு படம் எடுத்தாங்க. கமல் ஹீரோ, ஸ்ரீதேவி ஹீரோயின். அந்தப் படத்துல இவங்க ரெண்டு பேருக்கும் காதல் தூதுவனே இந்த வடிவேலன்கிற ஆண் மயில்தான். ஹீரோ, ஹீரோயினுக்கு பல விதத்துல ஹெல்ப் பண்ணுது. அதுமட்டுமில்லை கமல் அறைக்கு திருட்டுத்தனமா வந்த ஜமீன்தார் பொண்ணான ஸ்ரீதேவி, மயில்கிட்ட ’யாராச்சும் இந்தப் பக்கம் வந்தா குரல்கொடு’ன்னு வாசல்ல காவகாக்க நிறுத்திட்டு, கதவையும் ’லாக்’ பண்ணிட்டு ’வடிவேலன் மனசு வெச்சான் மலர வெச்சான். மணக்குது ரோசா செடி’ ன்னு டூயட் பாடி ரொமான்ஸெல்லாம் பண்றாங்க.

அப்போ அதைப் பார்த்த ஒரு சிலர் மட்டும்தான் ‘என்னடா இது செந்தில்முருகன் வைக்கிளுக்கு வந்த சோதனை..?’னு கவலைப்பட்டாங்க. இப்போ அந்த மாதிரி லவ்வுக்கு லைஃப் கொடுக்க, காட் பிராபர்ட்டிய யூஸ் பண்ண முடியுமா..? தெருவுக்கு நாலு பேரு கண்டன ஆர்ப்பாட்டம் பண்ண ஆரம்பிச்சிருவாங்க.

5. நம்ம கைல அம்பது ரூபா இருந்தா இன்றைய காலகட்டத்துக்கு 4 டீ குடிக்கலாம், 3 சமோசா வாங்கலாம்., 2 கடலைபர்பி பாக்கெட் வாங்கலாம். ஆனா, இயக்குனர் ஒருத்தர் 50 ரூபாய மையாமா வெச்சி ஒரு திரைப்படத்தையே எடுத்து ஓடவிட்டிருக்கார். படம் பெயர் ’ரோஜா கூட்டம்’. ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் பூமிகா.

பூமிகா அழகைப் பார்த்து ஸ்ரீகாந்த் மயங்கி.. மயங்கி.. விழறாரு. ஒரு தடவை அந்தப் பொண்ணு தெரியாத்தனமா கொடுத்த அம்பது ரூபா நோட்டு உசுருல கலந்து, கம்மாய்க்கரை ஓரம் வெட்டுன கிணறு மாதிரி காதல் கண்ட இடத்துல கசியுது. அந்த கசியிற விஷயத்தை ஹீரோயின்கிட்ட சொல்லலாம்னு நெனைக்கிறப்போ.. பூமிகா ’நான் ஏற்கனவே ஒருத்தரை காதலிக்கிறேன்’ னு சொல்ல, அந்த காதலன் ஸ்ரீகாந்த் பிரெண்டாகவும் இருக்க, ஸ்ரீகாந்த் மனசுல முளைச்சி வந்த லவ் பயிர் நாசமாபோயிடுது.

அதனால, ஆசையா வெச்சிருந்த அம்பது ரூபா நோட்டை அஞ்சா கிழிச்சி குப்பைல போடுறாரு. ஹீரோ அம்மா ராதிகா, குழம்பு வெச்ச கையோட குப்பைக் கூடையை கிளறி, கிழிஞ்ச நோட்டை செல்லோ டேப்புல ஒட்டவெச்சி மகன் முன்னாடி நீட்டுறாங்க. அதுக்கப்புறம் அந்த நோட்டு படம் முழுக்க அங்க இங்கன்னு டிராவல்லயே இருக்கு. கடைசியா அந்த நோட்டுதான் கிளைமேக்ஸையே முடிச்சு வெக்குதுன்னா பார்த்துக்கங்க.

- எம்.ஜி.கன்னியப்பன்.