அடியாட்கள் டைம்பாஸ்
சினிமா

தமிழ் சினிமா அடியாட்கள்: நமக்கு தெரிந்ததும், தெரியாததும்

அடியாள் வயிற்றில் ஹீரோ ஓங்கி ஒரு பஞ்ச் விடுவார். அந்த அடியாள் அந்தரத்தில் பறந்து ஃப்ரீஸ் ஆகி விடுவார். அதாவது புவியீர்ப்பு விசைக்கு எதிரா செயல்பட்டிருப்பார்.

Zulfihar Ali

ஹீரோக்கள் சண்டைக் காட்சிகளில் கண்ணாடி பாட்டிலை இவங்க தலையில உடைச்சுப் பாப்பாங்க. ஒவ்வொரு வெப்பன்ஸும் எப்படி வேலை செய்யிதுனு இவங்க பாடியிலதான் டெஸ்ட் பண்ணிப் பார்ப்பாங்க. சக அடியாள் ஒருத்தன் அடி வாங்கிட்டு இருக்கும்போது கீழே அமைதியா படுத்துக் கிடக்கணும்.

அவன் அடி வாங்கி முடிச்சம் எழுந்து போய் அடி வாங்கணும். எப்போதும் மெயின் வில்லனுக்கு பின்னாலதான் வரணும். சுயமா எந்த முடிவும் எடுக்க முடியாது. இப்படி இவங்க நிறைய தியாகங்கள் பண்றாங்க

குடோன் மாதிரி லொகேஷன்களில் நடக்கும் சண்டைக்காட்சிகளில் நான்கு அடியாட்கள் ஒரே நேரத்தில் ஹீரோவை துரத்தி வர முதலில் ஒரு அடியாள் வயிற்றில் ஓங்கி ஒரு பஞ்ச் விடுவார் ஹீரோ.

அந்த அடியாள் அந்தரத்தில் பறந்து ஃப்ரீஸ் ஆகி நிக்கும்போது மீதமிருக்கும் அணைத்து ரவுடிகளையும் ஹீரோ அடித்து முடிப்பார். அதுக்கு அப்பறம்தான் அந்த முதல் அடியாள் கீழே விழுவார். அதாவது புவியீர்ப்பு விசைக்கு எதிரா செயல்பட்டிருப்பார் அவர்.

ரயில் சண்டைக் காட்சிகளில் ஹீரோ ரயிலின் கூரை மீது நின்று கொண்டிருப்பார். அப்போ சொல்லி வெச்ச மாதிரி ஏழு, எட்டு அடியாட்கள் சரியான இடைவெளியில் ஒவ்வொரு கம்பார்ட்மென்ட்டாக அணிவகுத்து அடிவாங்க வருவாங்க.

ஹீரோ அவங்களை எப்படியும் ட்ரெயினில் இருந்து தூக்கி வீசி பறக்கவிடுவார்னு தெரியும். அப்படித் தெரிஞ்சிருந்தும் இந்தச் சண்டையில் கலந்துக்கும் தியாகிகள் இவர்கள்.

அப்படி அவங்க கீழே விழும்போது எதுல விழுறாங்கனு கவனிச்சுப் பார்த்தா மேக்சிமம் தண்ணியிலதான் விழுவாங்க. சேஃப்டி முக்கியம் இல்லையா..

ஐந்தாவது மாடியில் சண்டை நடக்கும்போது அடியாட்கள் சட்டை முதல் தலைமுடி வரை எல்லாத்துலேயும் பவுடர் பூசி வருவாங்க. ஏன்னா ஆக்‌ஷன் ஹீரோ ஆக்ரோஷமா அடிக்கும்போது அந்த பவுடர் பறந்து ஹீரோவுக்கு ஒரு மாஸ் பில்டப் கொடுக்க இதையெல்லாம் அவங்க பண்றாங்க.

அது மட்டுமா சண்டை முடியும்போது சுவற்றில் இருக்கும் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு ‘ஏ ஏ ஏ ஏய்ய்ய்’னு கத்திக்கிட்டே ஐந்தாவது மாடியில் இருந்து குதிப்பதும் இதில் அடங்கும்!

காட்டில் ரகசியமாய் வாழும் தீவிரவாதியின் அடியாள்னு வைங்க. ரிஸ்க் கொஞ்சம் ஜாஸ்தி. ஏகே 47 துப்பாக்கியோடு கண்காணிப்பு கோபுரத்தில் ராத்திரி பகலா லைட் அடிச்சு டூட்டி பார்க்கணும். ஹீரோ அந்த இடத்துக்குள் நுழைந்தவுடன் முதலில் அவனைத்தான் போட்டுத்தள்ளுவார்.

அவர் கையில் கொண்டுவந்திருக்கும் பாமை கொக்கியைக் கடிச்சு அந்த கோபுரத்தில் வீச அங்கிருந்து தலைகீழா குதிச்சு செத்துப்போவார் அந்த அப்பாவி அடியாள்! சேஸிங் காட்சியில் பத்து பைக், இருபது ஜீப் பின்னால் துரத்த ஹீரோ முன்னே காரில் போய்க்கொண்டிருப்பார்.

அப்போ ஒரு அடியாள் தன்னுடைய பைக்கை வைத்து ஹீரோ காரில் இடிக்க, பதிலுக்கு ஹீரோ அந்த பைக்கை இடிக்க அது பறந்து ரோட்டோரத்தில் வைக்கப்பட்டுள்ள கட் அவுட்டுக்குள் புகுந்து மறுபக்கம் வெளியே வந்து விழும். அடியாள்னா இந்த அடியெல்லாம் தாங்கித்தானே ஆகணும்!

கடற்கரையோர மணலில் நடக்கும் சண்டைக் காட்சிகளில் ஹீரோஸ், அடியாட்களைத் தலைகீழாகத் தூக்கி அடிப்பார்கள். அப்போ தலை மண்ணுக்குள்ளும் உடல் மட்டும் வெளியே தெரிய வேண்டும்.

ஷாட் ஓகே ஆகும் வரை மூச்சடக்கி மண்ணுக்குள்ளேயே இருக்கணும். அது மட்டுமா, கன்டினியூட்டி மிஸ் ஆகக் கூடாதுனு அந்த ரத்தக்கறை காஸ்ட்யூமோடுதான் தினமும் ஸ்பாட்டுக்கு வர வேண்டும்.

‘நான் கடவுள்’ ராஜேந்திரன் மாதிரி நல்ல நிலைமைக்கு இவங்க வர்ற வரைக்கும் நல்ல சட்டையெல்லாம் போட முடியாது பாஸ்!