Rachitha Rachu timepass
சினிமா

Serials : கணவர் மீது ரச்சிதா புகார் - டைம்பாஸ் கட்டுரை காரணமா? - சிறிய இடைவேளைக்குப் பிறகு|Epi 19

ரச்சிதாவின் புகார் மீதான விசாரனைக்கு ஆஜரான தினேஷ், சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அன்றுதான் மனைவியைப் பக்கத்தில் பார்த்தாராம்.

அய்யனார் ராஜன்

கணவர் தினேஷ் மீது ரச்சிதா கொடுத்த புகாரின் பின்னணி என்ன தெரியுமா? ஜி.ஜி.யை கோபமூட்டியதா டைம்பாஸ் கட்டுரை?

'டப்பிங் ஆர்ட்டிஸ்ட் Gee Gee குடும்பத்தில் வீசும் புயல்' என  இரண்டு வாரங்களுக்கு முன் இங்கு விவாதித்த ஒரு விஷயம், சின்னத்திரை ஏரியாவில் ஒரு பெரிய சலசலப்பைக் கிளப்பி விட்டிருக்கிறது.

சீரியல் நடிகைகள் பலருக்குக் குரல் கொடுத்து வரும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட், ஜி.ஜி. என அழைக்கப்படும் ஜெசிந்தா பெர்னாடி. சரவணன் மீனாட்சி’ தொடரில் முதலில் ஸ்ரீஜாவுக்கும், பிறகு ரச்சிதாவுக்கும் குரல் கொடுத்தார் இவர். தற்போது சன் டிவியின் பிரைம் டைம் ஹிட் சீரியலான கயல்’ சீரியலில் ஹீரோயின் சைத்ராவுக்கு டப்பிங் பேசி வருகிறார்.

'இவரும் இவரது கணவர் லாரன்ஸ் அமல்ராஜும் பிரச்னை காரணமாக சமீபமாக பிரிந்து வாழ்கிறார்கள்'என்பதை அந்தக் கட்டுரையில்  குறிப்பிட்டிருந்தோம். மேலும், ஜி.ஜி. ரச்சிதாவுக்கு நெருக்கமான தோழியாகவும் இருந்தார் என்பதால், 'ரச்சிதா-தினேஷ்' இடையிலான பிரிவிலும் ஜிஜியின் பங்கு இருக்கலாமென சிலர் குறிப்பிட்டிருந்ததைத் தொடர்ந்து, தினேஷிடமும் நாம் பேசியிருந்தோம்.

அதற்கு தினேஷ், ‘’ஜி.ஜி. ரச்சிதாவுடைய நெருக்கமான ஃப்ரண்டா இருந்தாங்க. ரச்சிதா இவங்ககிட்ட நிறைய விஷயங்களை ஷேர் செய்திருக்காங்க. அப்பெல்லாம் இவங்க ரச்சிதாவுக்கு என்ன மாதிரி அட்வைஸ் பண்ணினாங்க, ரச்சிதா அதை எப்படி எடுத்துக்கிட்டாங்கன்னெல்லாம் பழைய விஷயத்தைப் பேசறதுல எனக்கு விருப்பமில்லை.

பொதுவா கணவன் மனைவி பிரச்னைன்னா, அதுல நண்பர்கள்ங்கிற போர்வையில் தேர்டு பார்ட்டி இன்ஃபுளுயன்ஸ் இருந்தா பிரச்னை பெரிசாத்தான் ஆகும். எங்க பிரச்னையிலும் அப்படித்தான் நடந்திருக்குமோன்னுதான் எனக்கு நினைக்கத் தோணுது. ஒருவேளை எங்க குடும்பப் பிரச்னையிலும் இவங்களுடைய தேவையில்லாத தலையீடு இருக்குனு உறுதியாத் தெரியவந்தா அவங்களை வீடுதேடிப் போய் நாலுவார்த்தையாச்சும் கேக்காம நானுமே விடப் போறதில்லை'' எனச் சொல்லியிருந்தார்.

தினேஷின் இந்த வார்த்தைகளைச் சுட்டிக்காட்டியே, கட்டுரை வெளியான அடுத்த நாளே சென்னை கோடம்பாக்கம் காவல்நிலையத்தில் தினேஷ் மீது எழுத்துபூர்வமான புகார் ஒன்றைத் தந்தார் ஜி.ஜி.

புகார் தொடர்பான விசாரணைக்காகச் சென்ற தினேஷ், 'நான் யாரையும் மிரட்டவில்லை; ஜி.ஜி. எனக்குத் தெரிஞ்சவங்க, நேரில் சந்திச்சுப் பேசணும்னு மெசேஜ் பண்ணினேன். எங்க குடும்பப் பிரச்னையில் அவங்க தலையீடு இருக்குங்கிறதுக்கு சரியான ஆதாரம் கிடைச்சா அவங்களைப் போய் கேள்வி கேட்பேன்'னு சொன்னேன்' என விளக்கம் தந்ததாகத் தெரிகிறது.

அதைத் தொடர்ந்து அந்த விவகாரம் அப்படியே முடிவுக்கு வந்து விட்டதாக நினைத்த வேளையில்தான் யாரும் எதிர்பாராதவிதமாக சென்னை மாங்காடு காவல்நிலையத்தில் தினேஷ் மீது புகார் தந்தார் அவரது மனைவி ரச்சிதா.

தினேஷ் ரச்சிதா இடையே கடந்த சில வருடங்களாகவே பிரச்னை போய்க் கொண்டிருந்தாலும், தினேஷ் குறித்து பொதுவெளியில் கூட எதுவும் பேசாத ரச்சிதா, ஜி.ஜி. தினேஷ் மீது புகார் தந்த மறு நாளே தானும் ஒரு புகாரைத் தந்தது யாருமே எதிர்பாராத ட்விஸ்ட் என்றுதான் சொல்ல வேண்டும்.

ரச்சிதாவின் புகார் மீதான விசாரனைக்கு ஆஜரான தினேஷ், சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அன்றுதான் மனைவியைப் பக்கத்தில் பார்த்தாராம்.

விசாரனையின்போது, 'தினேஷ் ரச்சிதா இருவரையும் எதிரெதிரே அமரவைத்துப் பேசியிருக்கின்றனர் காவலர்கள். ரச்சிதா தினேஷ் மீது சில குற்றச் சாட்டுகளைச் சொல்லி, 'தொடர்ந்து இவருடன் வசிக்க முடியாது' என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறார். 'அப்படியென்றால் நீதிமன்றம் போய் விவாகரத்து வாங்கிக் கொள்ளுங்கள்' என அறிவுறுத்தி இருக்கிறார்கள் போலீசார். தினேஷோ, 'அவங்க விவாகரத்துக்கு மூவ் செய்தால், நான் தந்து விடுகிறேன்' எனச் சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டாராம்.

'சுமார் எட்டு ஆண்டுகளுக்கு மேல் சேர்ந்து வாழ்ந்த இந்த ஜோடி பிரச்னைகளைச் சரிசெய்து மீண்டும் சேராதா' என்பதே டிவி ஏரியாவில் பலரது எதிர்பார்ப்புமாக இருந்த நிலையில், 'இப்படி ஆகிவிட்டதே' என வருத்தப்படும் ரச்சிதாவின் ரசிகர்கள், ' ரச்சிதா போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து புகார் கொடுத்ததுல ஜி.ஜி.க்குப் பங்கிருக்கு' என அவரைத்தான் திட்டி வருகின்றனர். 

இதற்கிடையில், இந்தச் சம்பவங்கள் நடந்து முடிந்த ஓரிரு தினங்களில் 'நான் என் பழைய நாட்களைத் தொலைத்து விட்டேன்' எனப் பொருள்படும்படி குறிப்பிட்டு, சோகமான இருப்பது போன்ற சில புகைப்படங்களையும் வெளியிட்டார் ரச்சிதா.

ரச்சிதா தினேஷ் இருவரையுமே நன்கு அறிந்த சிலரிடம் நாம் பேசினோம். ''கணவன் மனைவின்னா சண்டை சச்சரவு இல்லாம எப்படி இருக்கும்? ஆனா நிலைமை பெரிசாப் போகாமப் பார்த்துக்கிடறதுலதான் நம்ம சாமர்த்தியம் இருக்கு. தினேஷ் ரச்சிதா ஜோடிக்கிடையில் பிரச்னை ஏன் உண்டாச்சுன்னு அவங்களுக்குதான் தெரியும். அதேநேரம். குடும்பப் பிரச்னை நம்ம மீது அக்கறை இல்லாத மூணாவது நபர்கிட்ட போகிறப்பதான் அது தீர்க்க முடியாத சிக்கலா மாறிடுது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில ரச்சிதா கலந்துகிட்டப்பக் கூட கணவர் தினேஷுடன் பிரச்னை போயிட்டுதான் இருக்கு. ஆனா அந்த நிகழ்ச்சியில் தினேஷின் அம்மா அதாவது தன்னுடைய மாமியார் பத்தி அவ்வளவு பெருமையாதான் பேசியிருந்தாங்க. ஷூட்டிங் இல்லாத நாட்கள்ல தன்னுடைய சொந்த ஊருக்குப் போய் அப்பா அம்மா கூட சில நாட்கள் இருந்தா இந்தப் பக்கம் மாமியார் ஊரான ஶ்ரீவில்லிபுத்தூருக்குப் போய் அவங்க வீட்டுலயும் சில நாட்களைக் கழிப்பவர் ரச்சிதா.

அந்தப் பக்கம் தினேஷின் வீட்டுலயுமே ரச்சிதாவை அப்படிக் கவனிச்சிக்கிட்டாங்க.  இப்படியெல்லாம் இருக்கிறப்ப, வீட்டுப் பெரியவங்களுமே இந்த விவகாரத்தை எப்படி வளர விட்டுட்டாங்கனுதான் தெரியலை' என்கிறார்கள் இவர்கள்.

இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. திருமணமான சில மாதங்களிலேயே அந்த வாழ்க்கை பிடிக்கவில்லை எனப் பிரிந்து யூ டியூப் சேனல்களில் ஒருவருக்கொருவர் சேற்றை அள்ளி வீசுவது போல் குற்றச்சாட்டுகளைக் கூறியதையெல்லாம் பார்த்து விட்டது டிவி உலகம். தினேஷ் தன் மனைவி குறித்து இதுவரை புகார் எதையும் சொல்லவில்லை.

ரச்சிதாவுமே ஒரு தடவை பேசி இரண்டு நாள் பரபரப்புக்கு காரணமாகி விட்டார். நடந்து முடிந்து போன அந்தச் சம்பவங்களை இருவருமே மறந்து விட்டு, மேற்கொண்டு பேசாமல், தீர யோசித்து முடிவெடுத்தால் மட்டுமே அது இருவருக்கு நல்லதாய் அமையும்.

அடுத்த வாரம் பார்க்கலாம்.