ஹெச். வினோத்- இந்தப் பெயரைத்தான் தற்போது இளம் சினிமா ரசிகர்கள் அதிகம் உச்சரிக்கிறார்கள். 'துணிவு' படத்தின் அளப்பரிய வெற்றிக்கு முன்னரே அவர் வரிசைகட்டி யூ-ட்யூப் சேனல்களுக்குக் கொடுத்த பேட்டிகளின்மூலம் பலரை ஈர்த்திருக்கிறார். 'சினிமாவை இவ்ளோ சீரியஸா எடுத்துக்காதீங்க. அதை பொழுதுபோக்கா மட்டும் பாருங்க...உங்க டைமை வேல்யூ பண்ணவே முடியாது!' என தீவிர ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்திருந்ததை ரொம்பவே ரசித்தார்கள்.
'என்ன மனுஷன்யா..! சினிமா மட்டுமல்ல வாழ்க்கை குறித்த அவர் பார்வையே வேறயால்ல இருக்கு!' என்று வியக்கின்றனர். வலிமையைக் கலாய்த்த விஜய் ரசிகர்கள்கூட, 'இவர் இன்னும் உச்சங்கள் தொடுவார். வினோத்தும் விஜய்யும் சேர்ந்து ஒரு படம் கொடுத்தால்... மாஸோ மாஸா இருக்கும்!' என்று சொல்கிறார்கள்.
இப்படி எல்லோருக்கும் பிடித்த மனிதராய் மாறியிருக்கும் வினோத்தை இன்னொரு காரணத்துக்காக அவர் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். '5 படங்கள்...அதிலும் 3 படங்கள் அஜீத்தோடு...முதல் இரண்டு படங்கள் தமிழ் சினிமா இருக்கும்வரை நின்று பேசும். அப்படி கமர்ஷியலாய் கவனிக்கப்பட்ட இயக்குநர், இத்தனை சிம்பிளாய் இருக்கிறாரே?' என்று வியக்கின்றனர். காரணம் அவரது தோற்றம்.
அதிகம் பொதுவெளியில் இயங்காத வினோத்தைப் பற்றி இப்போது வெளிவரும் தகவல்கள் அவருக்கும் லோகேஷ் கனகராஜ் அளவுக்கு பெரிய ரசிகர்களை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. 'உடன்பிறப்பே' படத்தின் இயக்குநர் இரா.சரவணனோடு நட்பு பாராட்டும் அவர் சமீபத்தில் சேனல் ஒன்றில் துணிவு படத்தின் புரொமோஷனுக்காக இரா.சரவணனையும் அழைத்து பேசவைத்திருக்கிறார்கள். அதில் பல சுவார்ஸ்யமான தகவல்களை இரா.சரவணன் பகிர்ந்திருக்கிறார்.
''வெற்றியைத் தலையில் ஏற்றிக்கொள்ளாதவர் வினோத். தீரன் படம் ரிலீஸ் அன்று சென்னை மெரினாவில் அவரோடு பேசிக் கொண்டிருந்தேன். அன்று முழுவதும் வெவ்வேறு இடங்களுக்கு அவருடன் பயணித்தேன். முழுநாளில் தீரன் படத்தைப் பற்றி எதுவும் என்னிடம் பேசவே இல்லை. அவரும் யாருடனும் பேசவும் இல்லை. ஆனால், அவருடன் நான் இருந்தபோது எனக்கு மட்டும் 50 கால்கள் தீரன் பற்றி பாசிட்டிவாக அழைப்பு வந்தவண்ணம் இருந்தது. நான் அதுபற்றிப் பேசினால்கூட, 'அட, வாங்க சாப்பிடப்போவோம்!' என வேற டாபிக் மாற்றிவிடுவார்.
அதன்பிறகு அடிக்கடி தஞ்சாவூரில் இருக்கும் என் கிராமம் புனல்வாசலுக்கு வருவார். 'உங்கள் தோட்டத்து கயிற்றுக்கட்டிலில் படுத்துத் தூங்குவது பிடிக்கும் நண்பா!' என்பார். அந்த சிறு தோட்டத்தில் சாப்பிட்டு உறங்கி, மனம்விட்டு பல கதைகள் பேசுவோம். சினிமாவைத் தவிர்த்து விவசாயம், அரசியல் என பல விஷயங்களில் அவர் ஆர்வமாய் பேசுவார். நம்மாழ்வார், நெல்.ஜெயராமன் போன்ற ஆளுமைகளைப் பற்றி ஆர்வத்தோடு கேட்டுத் தெரிந்து கொள்வார். தனிமை விரும்பியாக இருந்தாலும் ஆடம்பரம் அவருக்குப் பிடிக்காது.
திருவண்ணாமலையில் ஒரு சிறு குடிலில் தங்கித்தான் தனியாக ஸ்கிரிப்ட் எழுதுவார். தீரன் சமயத்தில் லொக்கேஷன் பார்க்க பேருந்து பயணத்தில் தான் தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்தார். அதேபோல நடந்தும் பயணம் செய்வார். ஆன்மீகப் பயணமாகவும் எங்கு கிளம்பினாலும் சிம்பிளாய் கிளம்பிச் செல்வார். 6 முறை சபரிமலைக்கு சென்று வந்திருக்கிறார். துணிவு பட ரிலீஸன்று சபரிமலைக்கு அப்படித்தான் கிளம்பி வந்தார். அறம் சார்ந்த படங்கள் இயக்கணும் என்பது மட்டும்தான் அவர் கனவு!'' என்று சொல்கிறார் இரா.சரவணன்.