'ஐம்பதில் வளையாதது ஐந்தில் மட்டும் எப்படி வளைந்திருக்கும்?' என்ற கிரேக்கப் பழமொழியை மையமாக (அல்லது மய்யமாக) வைத்து, ஒவ்வொரு பிரபலங்களின் பள்ளிக் காலமும் எப்படி இருக்கும் என்று கற்பனைக்குதிரையைக் கண்டபடி தெறிக்க ஓட விடுவதுதான் 'அது ஒரு டவுசர் காலம்' தொடர்.
இந்த வாரம், இயக்குனர் எச்.வினோத்தின் பள்ளிக்காலம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.
பக்கத்து வீட்டுப் பையன்கள் பூனைக்குட்டி, நாய்க்குட்டிகளை வளர்த்தால், இவர் மட்டும் ஈமு கோழி, மண்ணுளிப் பாம்பு, லில்லி புட் போன்றவற்றை வீட்டில் வளர்த்து பெற்றோரைப் பதற வைத்திருப்பார்.
'பெரிய பையன் ஆனவுடன் ரைஸ் புல்லிங், எம்.எல்.எம், இரிடியம் கோபுர கலச விற்பனை செய்வேன்' என கட்டுரை எழுதியிருப்பார்.
'சச்சின் எஸ்ஸே அத்தியாயம் ஒன்று', 'ஓ காட் ப்யூட்டிபுல் அத்தியாயம் இரண்டு' என தலைப்புகள் வைத்தே விடைகள் எழுதியிருப்பார்.
பக்கத்தில் உட்காந்திருக்கும் மாணவர்களில் சிலேட் குச்சிகளைத் திருடி, மாட்டிக்கொண்டால், "நான் யாரையும் ஏமாத்தலை, ஏமாறத் தயாரா இருந்தவங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்தேன்" என விளக்கமளித்திருப்பார். அதோடு விடாமல், "உன்னை ஒருத்தன் ஏமாத்தினா, அவனை எதிரியா நினைக்காத... ஏன்னா, ஒரு வகையில அவன் உனக்கு குரு மாதிரி" என அந்த மாணவரிடமே ஆறுதல் கூறியிருப்பார்.
பள்ளிக்கு லேட்டாக வந்தால், 'அம்மா சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு சார்' என பி.டி. சாரிடம் உருக்கமாக பேசி தப்பித்திருப்பார்.
'தம்பி சென்டிமென்ட், அண்ணன் சென்டிமென்ட், அத்தாச்சி சென்டிமென்ட், அப்புத்தா சென்டிமென்ட்' என தாமதமாக வருவதற்கு வாரம் ஒரு சென்டிமென்ட்டில் பேசியிருப்பார்.
'துணிவு, வலிமை, நேர்கொண்ட பார்வை. இவை எல்லாவற்றையும் எனக்கு அருள்வாய் இறைவா' என தினமும் காலையில் எழுந்து வேண்டியிருப்பார்.