கவிதை கோபால்  டைம்பாஸ்
சினிமா

கடல் நீரும் உப்புதான்.. கண்ணீரும் உப்புதான் - கவிதை கோபால் பேட்டி

நான் அந்தக் கவிதையைச் சொன்னதும் விஜய் சாரே அசந்துட்டார். அப்பறம் என்னை கட்டிப்பிடிச்சிட்டாரு உடனே நான் அடுத்த கவிதையை சொன்னேன்.

Zulfihar Ali

"கடல் நீரும் உப்புதான் கண்ணீரும் உப்புதான்"னு ஒரே ஒரு கவிதையால ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவையே கதறவிடும் கவிதை கோபாலுடன் ஒரு ஜாலியான சந்திப்பு.

திருநெல்வேலி மாவட்டத்துல வெள்ளப்பனேரிங்கிற ஒரு சின்ன கிராமம்தான் என்னோட சொந்த ஊர். 2017ல இருந்து நான் கவிதை எழுதிட்டு இருக்கேன். "கடல் நீரும் உப்புதான் கண்ணீரும் உப்புதான்"ங்கிற என்னோட கவிதை வீடியோ ரொம்பவே வைரலாகிடுச்சு. இப்போ ஓரளவு நான் பேமஸாகிட்டேன். ஆனா, வெறும் பப்ளிசிட்டிய வெச்சு என்ன பண்றது பாக்கெட்ல பத்து பைசாகூட இல்லை. சினிமால சேரணும்னு வீட்டை விட்டு ஓடி வந்து இப்போ கஷ்டப்படுறேன்.

என்கிட்ட ஒழுங்கான சட்டை கூட கிடையாது. கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் பிளாட்பார்ம்லதான் படுத்திருந்தேன். சமீபத்துல யோ யோனு ஒரு நண்பன் கிடைச்சான். இப்போ அவன் ரூம்லதான் தங்கி சினிமா சான்ஸ் தேடிட்டு இருக்கேன். கவிதை மட்டும் இல்ல நடிக்கிறதுலயும் எனக்கு ஆர்வம் இருக்கு 'மாஸ்டர்', 'நட்பே துணை', இப்போ 'துணிவு', வாரிசு படத்துலயும் கூட்டத்துல ஒரு ஆளா நடிச்சிருக்கேன்.

மாஸ்டர் படத்துல நடிக்கும்போது ஷூட்டிங் ஸ்பாட்ல காவியானு ஒரு மேடம்கிட்ட என்னோட கவிதையைச் சொன்னேன். அவங்க என்னை லோகேஷ் கனகராஜ்சார்கிட்ட கூட்டிட்டு போனாங்க. லோகேஷ் சார்கிட்டயும் அந்த கவிதையை சொன்னேன். அன்னைக்கு சாயந்தரமே லோகேஷ் சார் என்னை கூப்பிட்டார். உள்ளே போனா விஜய் சார் அங்கே இருந்தார். காலையில என்கிட்ட சொன்ன கவிதையை இப்போ விஜய் சார்கிட்ட சொல்லுனு சொல்ல எனக்கு பயமாகிடுச்சு. அப்பறம் விஜய் சாரே பயப்படாம  சும்மா சொல்லுனு தைரியம் கொடுத்தார். உடனே நான் கவிதையை சொல்ல ஆரம்பிச்சேன்.

அது என்ன கவிதைனா, "என்னை காதலித்துவிட்டு நீ இன்னொருவனை திருமணம் செய்தால் நான் இறந்தாலும் இறந்துவிடுவேன். நான் இறந்த பின்பு நீ என் கல்லறை முன்பு வந்து அழுதாலும் நான் எழுந்தாலும் எழுந்துவிடுவேன். உன் கண்ணீரை துடைப்பதற்கு அல்ல காதலி உன்னை செருப்பை கழட்டி அடிப்பதற்குதான்"னு நான் சொன்னதும் விஜய் சாரே அசந்துட்டார். அப்பறம் என்னை கட்டிப்பிடிச்சிட்டாரு உடனே நான் அடுத்த கவிதையை சொன்னேன்.

"நோய் வந்தால் வைத்தியம் காதல் வந்தால் பைத்தியம்"னு நான் முடிக்கிறதுக்கு முன்னாலேயே இதோட போதும்னு விஜய் சார் நிறுத்திட்டார்.

இந்த மாதிரி கவிதை எல்லாம் நீங்க எங்க உக்காந்து யோசிக்கிறீங்க ?

நாம தனியா இருக்கிற இடம் எது? பாத்ரூம் காலை கடன் செலுத்துற இடத்துலதான் எனக்கு அதிகமா கவிதை ஐடியா தோணும். அதையெல்லாம் மைன்ட்லேயே வெச்சிருந்து பாத்ரூம்ல இருந்து வெளியே வந்ததும் ஒரு பேப்பர்ல குறிச்சு வெச்சிக்குவேன். இப்படி 400 கவிதைக்கு மேல எழுதி வெச்சிருக்கேன்.

சில பேர் என் கவிதையை மொக்கைனு கிண்டல் பண்ணுவாங்க. அதைப் பத்தியெல்லாம் நான் கவலைப்பட்டதே கிடையாது. ஏன்னா நல்ல கவிதை எழுதுனா யாருங்க கவனிக்கிறா இப்படி மொக்கையா எழுதுனாத்தானே நாலு பேரு திரும்பிப் பாக்குறாங்க எல்லாத்துக்கும் மேல கவிதை கோபால்னுதான் இப்போ மக்கள் என்னை கூப்பிடுறாங்க. அந்த அளவுக்கு வளந்திருக்கேன்.    

எல்லா கவிஞனுக்கு பின்னாலயும் ஒரு காதல் இருக்கும். எனக்கு அப்படி ஒரு காதல் இருந்துச்சு. நான் கவிதானு ஒரு பொண்ண காதலிச்சேன். ஆனால் அவங்க என்னை காதலிக்கல கடைசில அது ஒன் சைடு லவ்வாவே முடிஞ்சிருச்சு. அந்த காதல் தோல்விதான் என்னை கவிஞனா மாத்துச்சு. கவிதாவை நினைச்சு நிறைய கவிதை எழுதிருக்கேன். அதுல சில சாம்பிள் கவிதைகளை இப்போ உங்களுக்காக சொல்லிக் காட்டுறேன்.  

காட்டில் இருப்பது பருத்தி
வீட்டில் இருப்பது செம்பருத்தி
என் மனதில் இருப்பது
பெண்ணே நீ ஒருத்தி ஒருத்தி ஒருத்தி

கடலுக்கு அலை உண்டு
இடிக்கு மழை உண்டு
நம் இருவருக்கும் காதலுண்டு காதலுண்டு காதலுண்டு

மரங்களே மரங்களே கிளைகளை ஆட்டிவிடாதே
பூக்களே பூக்களே நீ உதிர்ந்து விடாதே
ஏனென்றால் கீழே என் காதலி இருக்கின்றாள்
அவளுக்கு காயமாகிவிடும் காயமாகிவிடும் காயமாகிவிடும்

தூண்டில் சிக்கிய மீனும் உன் நட்பில் சிக்கிய நானும்
துடிப்பது நிஜம்தான். மீன் துடிப்பது விடுதலைக்காக
நான் துடிப்பது உன்னுடைய காதலுக்காக அன்புக்காக பாசத்துக்காக
 

என்னோட கவிதைகளை படிச்சிட்டு இதுவரை மூணு பொண்ணுங்க எனக்கு லவ் ப்ரொபோஸ் பண்ணிருக்காங்க. எனக்குத்தான் அவங்க யாரையும் பிடிக்கல. ஏன்னா கவிதா இன்னும் என் ஆழ்மனசுல இருக்கா. அவள தவிர இன்னொருத்தியை என்னால நினைச்சிக்கூட பார்க்க முடியாது" என 'பூவே உனக்காக'  விஜய் போல சென்டிமெண்டாக பேசுகிறார் கவிதை கோபால்.