TV Serial
TV Serial timepass
சினிமா

TV Serial : மனைவியின் மரணத்தை மறைக்க நினைத்தாரா O.N.Ratnam - சிறிய இடைவேளைக்குப் பிறகு Epi 14

அய்யனார் ராஜன்

சீரியல் இயக்குநர் மனைவியின் திடீர் மரணம்! காவல்துறையிடம் மறைக்க நினைத்தாரா இயக்குநர்?

கணவர் முன்னணித் தொலைக்காட்சியில் பல ஹிட் சீரியல்களை இயக்கிய, தற்போதும் பிசியாகவே இருக்கிற சீரியல் இயக்குநர். ஆனால் அவரது மனைவியோ தன்னிடமிருக்கும் நகைகளை விற்றோ அல்லது அடகு வைத்தோ பிசினஸ் செய்ய ஆசைப்படுகிறார். கணவருக்கு மனைவியின் இந்த ஐடியா பிடிக்காததால் இது தொடர்பாக வீட்டில் இருவருக்குமிடையில் பிரச்னை உண்டாகிறது. பிரச்னை முற்ற, கணவன் வீட்டிலில்லாத ஒரு பொழுதில் மனைவி திடீரென மரணமடைகிறார்.. 'தற்கொலை' என்கிறது போலீஸ்.

'என்னய்யா இது.. தமிழ் சீரியல்களின் கதை மாதிரி இருக்கே' என்கிறீர்களா? கதையல்ல.. தமிழ் சீரியல் உலகில் கடந்த வாரம் நடந்த நிஜ சம்பவம் இது.

ஒ.நாகரத்தினம் எனப்படும் ஒ.என்.ரத்தினம் தமிழ்த் தொலைக்காட்சியில் பல மெகாத் தொடர்களை இயக்கியவர். 'வாணி ராணி', 'அழகு', 'பாண்டவர் இல்லம்', 'செவ்வந்தி' என இவர் இயக்கிய எல்லா சீரியல்களுமே மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றவையே. இவருக்குச் சொந்த ஊர் பொள்ளாச்சி. இவரது மனைவி பத்மாவதி என்கிற பிரியா. இவரும் பொள்ளாச்சியைச் சேர்ந்தவரே. இருவரும் காதலித்துத் திருமணம் செய்திருக்கிறார்கள். இவர்களுக்கு இரண்டு மகன்கள்.

பத்மாவதிதான் இரண்டு தினங்களுக்கு முன் திடீரென மரணமடைந்தார்.

இயக்குநர்கள் சங்கம், ரத்தினம் இயக்கிய சீரியல்களில் நடித்த நடிகர் நடிகைகள் என பலதரப்பில் நாம் பேசினோம். மகன்கள் இருவரும் கோடை விடுமுறையையொட்டி தாத்தா பாட்டி ஊருக்கு அதாவது பொள்ளாச்சிக்குப் போய் விட்டதால் வீட்டில் ரத்தினமும் அவரது மனைவியும் மட்டுமே இருந்திருக்காங்க. முதல்நாள் இரவு ரெண்டு பேருக்குமிடையில் ஏதோ பிரச்னை நடந்திருக்கு. மறுநாள் காலையில் சம்பவம்.

'பையன்களைக் கூட்டி வரப் பேருந்து நிலையம் போயிட்ட நேரம் பார்த்துத் தூக்கு மாட்டிக்கிட்டாங்க' என ரத்தினம் தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால் முதன் முதலாக தகவலைச் சொன்னது ரத்தினம் இல்லை என்கிறார்கள்.

"ரத்தினமும் அவரது மூத்த மகனும் ரத்தினத்தின் நண்பர் ஒருவருமாகச் சேர்ந்து பத்மாவை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றிருக்கிறார்கள். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டார் என சொல்ல, அங்கிருந்தே ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான பொள்ளாச்சிக்குக் கொண்டு செல்ல முயன்றாராம் ரத்தினம்.

மருத்துவமனை நிர்வாகம்தான், 'என்னங்க சீரியல் இயக்குநர்னு சொல்றீங்க. ஃபார்மாலிடிஸ் என்னன்னு தெரியாதா என்ன? போலீஸுக்குத் தகவல் சொல்லணும்' என அவர்களே காவல்துறைக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

காவல்துறை விசாரணையிலும் அப்பா ஒன்றைச் சொல்வதும், அவரது பதினைந்து வயது மூத்த மகன் ஒன்றைச் சொல்வதுமாக சில முரண்பாடுகள் நிகழ்ந்ததாகத் தெரிகிறது'' என்றார்கள் சிலர்.

காவல்துறைத் தரப்பிலும் பேசினோம்.

'டைரக்டரு வீட்டம்மா தனியா பிசினஸ் பண்ணப் போறதாச் சொல்லியிருக்கு. இவருக்கு அதுல உடன்பாடில்லை. இது தொடர்பா புருஷன் பொண்டாட்டி இடையே கொஞ்ச நாளாகவே பிரச்னை போயிருந்திருக்கு. அதோட தொடர்ச்சியாத்தான் அந்தம்மா தற்கொலை செய்திருக்கலாமோனு தோணுது. விசாரணை போயிட்டிருக்கறதால விரிவா வேற எதையும் இந்தச் சூழல்ல பேச முடியாது' என்றார்கள்.

'இதுக்கெல்லாமா தற்கொலை செய்துப்பாங்க' எனக் கேள்வி எழுப்பும் சிலரோ, என்ன ஆனாலும் ஒரு திடீர் மரணம் நிகழ்ந்திருக்கு. போலீஸ் விசாரணையில் தற்கொலை எனத் தெரிய வந்தால் அதற்குத் தூண்டியவர் மீது நடவடிக்கை எடுத்தாகணும். இந்த இயக்குநர் குறித்து டிவி ஏரியாவுல சில பேச்சுக்கள் உலா வந்திருக்கு.

ஷூட்டிங் ஸ்பாட்டுல நடிகைகளிடம் பழகுவது குறித்து சங்கம் வரை இவர் மீது புகார் வந்த வரலாறெல்லாம் இருக்கு' என்கிறார்கள்.

மரணமடைந்த அந்தப் பெண் நடிகையோ அல்லது பிரபலமானவரோ அல்ல. எனினும் முக்கியமான இயக்குநரின் மனைவி என்கிற வகையில் அவரது மரணம் தொலைக்காட்சி ஏரியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

ரத்தினத்தின் குடும்பத்துடன் நெருங்கிப் பழகிய சில ஆர்ட்டிஸ்டுகளுமே, 'தெளிவாப் பேசறவங்க, சிந்திக்கிறவங்க அவங்க. பொருளாதார ரீதியிலும் நல்லாத்தான் இருந்தாங்க. இப்படியொரு முடிவை எடுத்தாங்களானு நம்பவே முடியலை' என்கின்றனர்.

'லாஜிக் ஓட்டைகளெல்லாம் சீரியல்களில் இருக்கட்டும்' என காவல்துறை விசாரணையைச் சீராகக் கொண்டு போனால், ஒரு உயிர் பறிபோன விஷயத்தில் தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள். செய்யுமா காவல்துறை?

அடுத்த வாரம் பார்க்கலாம்