Marimuthu டைம்பாஸ்
சினிமா

RIP Marimuthu : இந்த வடிவேலு காமெடிகள் எல்லாம் மாரிமுத்து எழுதுனதா ? | Vadivelu

Zulfihar Ali

இயக்குநராக இருந்து நடிகராக மாறி "ஏம்மா ஏய்" என்ற வசனம் மூலம் பிரபலமான நடிகர் மாரிமுத்து இன்று உயிரிழந்திருக்கிறார். முன்பு அவர் டைம்பாஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் இருந்து,

‘‘என் சொந்த ஊர் தேனி மாவட்டத்துல இருக்கிற வருசநாடு. நான் இன்ஜினீயரிங் படிச்சிட்டு இருக்கும்போது ‘முதல் மரியாதை’ படம் வந்துச்சு. வைரமுத்து, இளையராஜா, பாரதிராஜானு எல்லாரும் எங்க ஏரியாக்காரங்க அவங்களை பார்த்து எனக்கும் சினிமா ஆசை வர எப்படியாவது ஜெயிக்கலாம்னு சென்னைக்கு வண்டி ஏறி வந்துட்டேன். ஆரம்பத்துல பாரதிராஜா சார்கிட்ட அசிஸ்டென்ட்டா சேர முயற்சி பண்ணேன் அது முடியலை.

அப்பறம் ராஜ்கிரண் சார்கிட்ட அசிஸ்டென்ட்டா சேர்ந்துட்டேன். ‘அரண்மனைக் கிளி’, ‘எல்லாமே என் ராசாதான்’னு ரெண்டு படம் அவர்கூட வேலை செஞ்சேன். அந்த டைம்லதான் எனக்கு கல்யாணமும் ஆச்சு. சரி இனி கிராமத்துப் படங்கள் வேணாம், லேட்டஸ்ட் சினிமா கத்துக்கலாம்னு ஆசைப்பட்டு ‘பம்பாய்’,
‘வாலி’, ‘குஷி’ படங்கள்ல அசிஸ்டென்ட்டா வேலை பார்த்தேன். அப்புறம் பிரபுதேவாவை ஹீராவா வெச்சு ‘யாரடா நீ மன்மதா’னு
ஒரு படம் இயக்கினேன். பத்து நாட்கள் ஷூட்டிங் நடந்துச்சு. அதோட நின்னுடுச்சு.

அடுத்து பிரசன்னாவை வெச்சு ‘கண்ணும் கண்ணும்’னு ஒரு படம் எடுத்தேன். படம் ஃப்ளாப். ஆனா அதுல வந்த காமெடி எல்லாம் சூப்பர் ஹிட்டாச்சு. குறிப்பா ‘கிணத்தைக் காணோம்’ காமெடி, ‘அடிச்சுக் கேட்பாங்க, அப்பவும் சொல்லாதீங்க’ காமெடி இதெல்லாம் எனக்கு நல்ல பேரு வாங்கி கொடுத்துச்சு.

வடிவேலுவோட ஆரம்ப கால படங்கள்ல வந்த சூப்பர் ஹிட் காமெடிகள்ல எனக்கும் பங்கு இருக்கு. ‘பாஞ்சாலங்குறிச்சி’ படத்துல வடிவேலு பாய் விரிக்கிற காமெடிக்கு பின்னால ஒரு கதை இருக்கு. எங்க ஊர்ல பொன்னையானு ஒருத்தர் இருந்தாரு. அவர்தான் ஒருமுறை இப்படி பாயை விரிக்க முயற்சி பண்ணி மூக்கை உடைச்சிக்கிட்டார். அதை சீமான்கிட்ட சொன்னேன். "அருமையா இருக்கு மாரிமுத்து இதையே சீனா வெச்சிடலாம்"னு சொல்லிட்டார்.

அதே மாதிரி வடிவேல் பூமார்க் பீடி வாங்குவார்ல அதுவும் எங்க ஊர்ல நடந்த ஒரு நிஜ சம்பவம்தான். அடிச்சு கேட்பாங்க அப்பாவும் சொல்லாதீங்க காமெடி, கிணத்தை காணோம் காமெடி இதெல்லாம் நான் உருவாக்கினதுதான். ஆனா வடிவேல் அதை இன்னும் சிறப்பா நடிச்சு ஹிட்டாக்கினார்.

இப்போ மேட்டருக்கு வரேன்... ‘கண்ணும் கண்ணும்’ தோல்விக்குப் அப்பறம் மறுபடியும் ஒரு படம் இயக்க வாய்ப்பு வந்துச்சு. மலையாள ரீமேக்கான அந்தப் படத்தை நிறைய மாற்றம் செஞ்சு ‘புலிவால்’னு எடுத்தேன். அதுவும் தோல்வியாகிடுச்சு சரி இனி டைரக்ஷனே வேணாம்னு முடிவு பண்ணின நேரம் அது.

அப்போதான் டைரக்டர் மிஷ்கின் சார் என்னை கூப்பிட்டு ‘ஒரு போலீஸ் கேரக்டர் இருக்கு நீங்கதான் நடிக்கணும்’னு சொன்னார். சரி இதையும் பண்ணித்தான் பார்ப்போமேனு களத்தில் இறங்கினேன். ‘யுத்தம் செய்’ படத்துல அந்த கெட்டப் பார்த்துட்டு நிஜ போலீஸ் மாதிரியே இருக்கீங்க மாரிமுத்துனு மிஷ்கின் பாராட்டினார்.

அடுத்து ‘கொம்பன்’, ‘புகழ்’னு தொடர்ந்து நடிக்க ஆரம்பிச்சுட்டேன். இனி படம் இயக்குறதா ஐடியாவே இல்லை.
நடிகரானதுக்குப் பின்னாடிதான் இப்போ என்னை நாலு பேருக்குத் தெரியுது. இயக்குநரா இருக்கிறதை விட நடிகனா இருக்கறதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு.