கதாநாயகன் என்றால் எப்படி இருக்க வேண்டும்? ஏழை மக்களுக்கு உதவ வேண்டும்; மக்களைச் சுரண்டும் பண்ணையார்களை, முதலாளிகளை, அரசியல்வாதிகளை, ஊழல் அதிகாரிகளை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும். வில்லனால் ஹீரோயினோ வேறு ஏதாவது அபலைப் பெண்ணோ பாலியல் சீண்டலுக்கு உள்ளாகும்போது ஆலமர விழுதைப் பிடித்து தொங்கியோ, கண்ணாடி ஜன்னலை உடைத்தோ வந்து வில்லனை அடித்து உதைத்து, அந்தப் பெண்ணின் கற்பைக் காப்பாற்ற வேண்டும். அந்தப் பெண் நன்றி சொல்லும்போது 'என் கடமையைத்தானே செஞ்சேன்' என்று தன்னடக்கம் காட்ட வேண்டும். மொத்தத்தில் ஹீரோ என்றால் நல்லவன், வில்லன் என்றால் கெட்டவன்.
ஆனால் 2010லிருந்தே இந்த மரபைத் தமிழ் சினிமா உடைக்கத் தொடங்கிவிட்டது. கடத்தல்காரர்களிடமிருந்து ஹீரோக்கள் போராடி மீட்ட தமிழ் சினிமாவில் 'சூதுகவ்வும்' ஹீரோவே ஒரு கடத்தல்காரன்தான். 'பீட்சா' படத்தின் ஹீரோ பொய்யாகப் பேய்க்கதை சொல்லி முதலாளியை ஏமாற்றுபவன். இப்படி 'ஹீரோ என்றால் நல்லவன்' என்ற இலக்கணத்தை அடுத்தடுத்து வந்த படங்கள் உடைத்தன.
ஆனால் இந்தப் படங்களில் நடிக்கும்போது விஜய் சேதுபதி ஒரு மாஸ் ஹீரோ கிடையாது, வித்தியாசமான படங்களில் நடிக்கும், வளர்ந்து வரும் ஒரு கலைஞன் மட்டுமே. 'சூது கவ்வும்', 'பீட்சா' படங்களைத் தொடர்ந்து நெகட்டிவ் ஷேட் உடைய ஏராளமான படங்கள் வரத் தொடங்கின. ஆனால் ஒரு உச்ச நட்சத்திரமே ஹீரோவுக்கான எந்த இலக்கணமும் இல்லாமல் முற்றிலும் நெகட்டிவ் ஷேட்டில் நடித்து வெற்றி பெறவும் முடியும் என்று பழைய பர்னிச்சர்களை உடைத்து நிரூபித்துக் காட்டியவர் அஜித்.
கோடிக்கணக்கில் பணத்தைக் கொள்ளையடிப்பது மட்டும்தான் விநாயகத்தின் ஒரே நோக்கம். அதற்காக எந்தக் களவாணியுடனும் கூட்டு சேரவும் தயார்; அதே களவாணிகள் தனக்கு எப்போது வேண்டுமானாலும் நம்பிக்கைத் துரோகம் இழைப்பார்கள் என்று அவர்களைக் காலி செய்யவும் தயார். காதலாவது கத்திரிக்காயாவது, பணத்துக்காகக் காதலிப்பது போல் நடித்து ஏமாற்றுவதும் ஓகேதான். அஜித் இப்படி முழுக்க முழுக்க நெகட்டிவ் முகம் காட்டிய 'மங்காத்தா' பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. தொடர்ந்து 'பில்லா', 'பில்லா -2' என்று நெகட்டிவ் படங்களாகவே நடித்தார் அஜித்.
இடையில் வீரம், வேதாளம், விசுவாசம், நேர்கொண்ட பார்வை, வலிமை என்று வேறு ரூட் பிடித்த அஜித், 'மங்காத்தா'வுக்குப் பிறகு முழுக்க நெகட்டிவ் ஷேடில் நடித்த படம் 'துணிவு'. வங்கிகள் பல பெயர்களைச் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று ஒரு சின்ன மெசேஜ் இருந்தாலும் கொள்ளையடிப்பதற்கும் கொலைகள் செய்வதற்கும் கொஞ்சமும் அஞ்சாத பாத்திரம்தான் அஜித்துக்கு. இன்னும் சொல்லப்போனால் அவரது பெயரே 'டார்க் டெவில்'தான். 'துணிவு'ம் இப்போது ஹிட்.
முழுக்க முழுக்க ஹீரோவுக்கான எந்த நல்ல குணங்களும் இல்லாத 'மங்காத்தா', 'துணிவு' படங்களைப் போலவே மலையாளத்திலும் ஒரு படம் வெளியாகியிருக்கிறது. வினித் சீனிவாசன் நடித்த 'முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்'.
எப்படியாவது, என்ன செய்தாவது வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட வழக்கறிஞர் முகுந்தன் உன்னி. ஆனால் முன்னேறுவதற்கு அவனுக்கு சரியான சந்தர்ப்பம் அமையாத சூழலில்தான் 'விபத்துக் காப்பீட்டு வழக்குகள் மூலம் லட்சக்கணக்கில் பணம் சுருட்ட முடியும்' என்பது தெரிய வருகிறது. பிறகு முகுந்தன் உன்னி துணிவுடன் ஆடுவது எல்லாம் மானாவாரி மங்காத்தாதான்.
கொலை செய்ய, காதலியைக் கழற்றிவிட, பிணங்களையும் ரத்தத்தையும் மூலதனமாக்கிப் பணம் சம்பாதிக்க....எதற்குமே முகுந்தன் உன்னி தயங்குவதில்லை. ஒருகட்டத்தில் தோற்கும் நிலை வரும்போது சாக முடிவெடுக்கிறான். அப்போதும் 'செத்தால் தான் மட்டும் சாகக்கூடாது. தன்னைச் சுற்றியிருப்பவர்களையும் சேர்த்தே சாகடிக்க வேண்டும்' என்று முடிவெடுக்கிறான். ஒருவழியாக அந்தச் சிக்கலில் இருந்து மீண்டவன், மீண்டும் கூசாமல் குற்றங்கள் செய்து தான் நினைத்த உச்சத்தை அடைகிறான்.
'அறமே வெல்லும்' என்று மக்களுக்குக் கற்பித்த சினிமாக்கள் இப்போது தலைகீழாக மாறியிருப்பது சரியா என்பது விவாதத்துக்குரியதுதான். ஆனால் வழக்கமான ஹீரோயிசம், வழக்கமான ஃபார்முலாக்களை சினிமாக்கள் தாண்டத் தொடங்கிவிட்டன என்பது மட்டும் தெரிகிறது.