Bala Krishna
Bala Krishna timepass
சினிமா

Veera Simha Reddy: 'பாசத்தலைவன்' எனும் Bala Krishna

Saran R

பாலகிருஷ்ணா... செல்லமாக பாலய்யா! ஆந்திராவே அலறும் ஆக்‌ஷன் அதகளத்துக்குச் சொந்தக்காரர். எல்லை தாண்டிய ஹீரோயிசத்தில் பாகிஸ்தான் வரை பாய்ந்து சென்று தீவிரவாதிகளை வேட்டையாடிய சிவப்பு விஜயகாந்த்.

2014-ம் ஆண்டிலிருந்து ஆந்திரப்பிரதேசம் இந்துபூர் தொகுதி தெலுங்கு தேசக் கட்சி எம்.எல்.ஏ., தெலுங்கானா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் பாச மருமகன் மற்றும் சம்பந்தி. ஆம், பாலய்யாவின் சகோதரி நர புவனேஸ்வரியைத்தான் சந்திரபாபு நாயுடு திருமணம் செய்திருக்கிறார். சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷுக்குத்தான் தன் மகள் நர பிராமிணியை திருமணம் செய்துகொடுத்திருக்கிறார்.

சும்மாவே சலங்கை கட்டி ஆடுவார். இது போதாதா..? எப்படியெல்லாம்  எம்.எல்.ஏ-வாக அலறவிடுகிறார் என்பதைச் சொன்னால் ‘அம்புலி மாமா’ கதைபோலவே இருக்கும்.

ஒருமுறை பாலகிருஷ்ணாவைச் சந்திக்க அவரது எம்.எல்.ஏ அலுவலகத்துக்கு வயதான ஒரு மூதாட்டி வந்தார். அந்த நேரம் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணா, ஹைதராபாத் ஷூட்டிங்கில் பிஸி. பாலைய்யாவின் பி.ஏ., ஏதோ ஒரு போன் காலில் பிஸி. மூதாட்டி எதையோ சொல்ல முற்பட்டிருக்கிறார். பாலைய்யாவின் உதவியாளரோ, மூதாட்டி தன்னிடம் பிச்சைக் கேட்பதாக நினைத்துக்கொண்டு, ‘போ... இதே வேலையாப்போச்சு உங்களை மாதிரி ஆளுங்களுக்கு!’ என விரட்டிவிட்டு,  போன் பேச்சைத் தொடர்ந்திருக்கிறார்.

ஒரு மணி நேரம் கழித்து பாலைய்யாவின் வேறொரு போன் நம்பரிலிருந்து கால் வர, பேச்சைத் துண்டித்துவிட்டு பவ்யமாகப் பேசியிருக்கிறார் உதவியாளர். முதலில் கெட்டவார்த்தையில் வெளுத்துவாங்கிய பாலகிருஷ்ணா, அடுத்து பேசியதுதான் ஹைலைட்!

``அந்த அம்மா என் அப்பாவோடு பல படங்களில் துணை நடிகையாக நடித்தவர். அவர் என்னிடம் உதவி கேட்டு நேற்று வந்திருந்தார். நான் தான் அலுவலகத்துக்கு இன்று வரச் சொல்லியிருந்தேன். இப்போது உன்னால் எனக்குக் கெட்டபெயர். அவர் மகன் இப்போது அவரை அழைத்துக்கொண்டு திருப்பதிக்குப் போய்விட்டான். ஒழுங்காக அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து  உன் அக்கவுன்ட்டில் இருக்கும் மொத்தப் பணத்தையும் எடுத்துக் கொடுத்துவிட்டு எனக்கு வாட்ஸ்அப்பில் போட்டோ அனுப்பி வை. இதைச் செய்யாமல் நாளை நான் தொகுதிக்கு வரும்போது நீ என் கண்ணில் பட்டால், முதலில் உன்னை உதைத்துவிட்டுத்தான் மறுவேலையே பார்ப்பேன்!’’ என்று சொல்லியிருக்கிறார். அந்த நேரம் வீடு கட்டுவதற்காக வங்கியிடம் பெற்ற கடன் தொகை 30 லட்சம் ரூபாய் அவர் அக்கவுன்டில் இருந்தது.

இதற்கு முன்பு பலமுறை உதை வாங்கியவர் என்பதால், `இதுக்கு மேலே தாங்க முடியாது குருநாதா!’ என்று மனதுக்குள் அலறியடித்துக்கொண்டு ஒரு டீமோடு திருப்பதியில் சல்லடை போட்டுத் தேடியிருக்கிறார் பி.ஏ. அந்த மூதாட்டி கிடைக்காததால், அப்படியே  தலைமறைவாகிவிட்டார்.

அதன் பிறகு அந்த பி.ஏ-வின் மனைவி அழுதுகொண்டே தன் கணவரைக் கண்டுபிடித்துத் தரச் சொல்லி பாலகிருஷ்ணாவிடம் மன்றாட, மூன்று ஸ்பெஷல் டீம் அமைத்தார் பாலய்யா. சரியாக ஐந்து நாட்கள் கழித்து, இருவரையும் வெவ்வேறு ஊர்களில் கண்டுபிடித்து, பாலய்யா முன் நிறுத்தினார்கள் அவர்கள்.