விழுப்புரம் விழுப்புரம்
Lifestyle

விழுப்புரம் : ஒரு எலுமிச்சை பழம் ரூ.31,500 - திருவிழாவில் நடந்த ஏலம்!

திருவிழாவில் மொத்தம் 9 எலுமிச்சை பழங்கள் ரூ.69 ஆயிரத்து 800-க்கு ஏலம் போனது.

டைம்பாஸ் அட்மின்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் புகழ்பெற்ற ரத்தினவேல் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவானது 11 நாட்கள் நடைபெறும். இதில் முதல் 9 நாள் நடைபெறும் திருவிழாவின்போது இரட்டைக்குன்று முருகன் அருகில் அமைந்துள்ள வேல் மீது ஒவ்வொரு நாளும் ஒரு எலுமிச்சை பழம் வைக்கப்படும்.

பின்னர் இந்த எலுமிச்சை பழங்களை பத்திரமாக எடுத்து வைத்து 11 நாள் திருவிழா முடிந்ததும் நள்ளிரவில் ஏலம் விடுவார்கள். இந்த பழத்தை ஏலம் எடுப்பவர்கள் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிட்டும், தொழில் விருத்தியடையும், நினைத்தது நடைபெறும் என்பது பக்தர்களிடையே நம்பிக்கை ஆகும்.

இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர விழா கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவின்போது வேல் மீது வைத்திருந்த 9 எலுமிச்சை பழங்களும் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஏலம் விடப்பட்டது.

இதனை மரசெருப்பின் மீது ஏறி நின்று நாட்டாமை புருஷோத்தமன் ஏலம் விட்டார். இதனை ஏலம் எடுப்பதற்காக சென்னை, பெங்களூரு, புதுச்சேரி, திருச்சி போன்ற பகுதிகளில் இருந்தும், சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் போட்டிப்போட்டு ஏலம் கேட்டனர்.

9 எலுமிச்சை பழங்கள் ரூ.69,800 அதன்படி முதல் நாள் எலுமிச்சை பழத்தை குழந்தை இல்லாத புதுச்சேரியை சேர்ந்த ஒரு தம்பதியினர் ரூ.31 ஆயிரத்து 500-க்கு ஏலம் எடுத்தனர். இரண்டாம் நாள் ரூ.6 ஆயிரத்து 300-க்கும், மூன்றாம் நாள் பழம் ரூ.10 ஆயிரத்து 100-க்கும், நான்காம் நாள் பழம் ரூ.5 ஆயிரத்துக்கும், ஐந்தாம் நாள் பழம் ரூ.6 ஆயிரத்துக்கும், ஆறாம் நாள் பழம் ஆயிரம் ரூபாய்க்கும், ஏழாம் நாள் பழம் ரூ.6 ஆயிரத்துக்கும், எட்டாம் நாள் பழம் ரூ.1600-க்கும், ஒன்பதாம் நாள் பழம் ரூ.2 ஆயிரத்து 300-க்கும் ஏலம் போனது. 9 எலுமிச்சை பழங்கள் மொத்தம் ரூ.69 ஆயிரத்து 800-க்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.