சூப்பர் ஸ்டார் என்று தன்னை நிலை நாட்டிக் கொண்டவர் நடிகர் ஜாக்கி சான். ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி, ஹாங்காங் நாட்டின், விக்டோரியா பிக் நகரில் சார்லஸ் - லீ லீ சான் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவரின் இயற் பெயர் சான் காங் சான் என்பதாகும். இவர் பிறந்தபோது 5400 கிராம் எடை கொண்டிருந்ததால், 'பாவ் பாவ்' என்று அழைக்கப்பட்டார். அதன் பொருள் "பீரங்கி குண்டு" என்பதாகும்.
பிறப்பின் போது அழைக்கப்பட்டது போலவே, உண்மையில் அவர் பின்னாளில் ஒரு பீரங்கி போலவே உருமாறினார். சண்டைக் கலைஞர், தயாரிப்பாளர், நடிகர், இயக்குநர், பாடகர் என பன்முகத் திறமையாளராக ஜாக்கி சான் விளங்கினார்.
உலகில் வெற்றி பெற்ற பல ஜாம்பவான்களின் சுய சரிதங்களை ஆராய்ந்தால், கல்வித் துறையில் அவர்கள் பெரியளவில் வெற்றி பெற்றதில்லை. அந்தப் பட்டியலில் ஜாக்கி சானையும் இணைத்துக் கொள்ளலாம். அவர் கல்வியில் போதிய நாட்டம் செலுத்தவில்லை. அதன் பொருட்டு மாணவர் பருவத்தில் அவர் ஆசிரியர்களிடம் நிறைய அடி வாங்கியுள்ளார். குடும்ப வறுமையின் காரணமாக, ஜாக்கியின் தந்தை சார்லஸ் சமையல் தொழில் செய்யும் பொருட்டு, ஆஸ்திரேலியாவில் உள்ள, அமெரிக்க தூதரகத்திற்குச் சென்று விட்டார்.
ஜாக்கி, தனது பெற்றோருக்கு தொல்லை தரக் கூடாது என்ற நோக்கத்தின் பேரில், தங்கும் விடுதிகளில் சில காலம் பணி புரிந்தார். ஜாக்கியின் திரைப் பயணம் இந்திய திரைப்பட நடிகர் கமல்ஹாசனைப் போன்று சிறு வயதிலேயே தொடங்கியது. 1964ஆம் ஆண்டு தனது 9 வது வயதில், 'லிட்டில் ஃபார்ச்சூன்ஸ்' என்றப் படத்தில் அவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து 1966 வரையில், அடுத்தடுத்த 4 திரைப் படங்களில் ஜாக்கி சிறுவனாக நடித்தார்.
தனது 17 வது வயதில் பிரபல சாகசக் கலைஞர் புரூஸ்-லீயின் 'ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி' மற்றும் 'எண்டர் தி டிராகன்' ஆகியப் படங்களுக்கு சண்டைக் கலைஞராகப் பணியாற்றினார். புரூஸ் லீயின் வீர தீர சாகசக் கலைகளால் ஈர்க்கப்பட்ட ஜாக்கி, தானும் ஒரு நடிகராக வேண்டுமென்று விரும்பினார்.
1971-ம் ஆண்டு ஜாக்கியின் எண்ணம் போலவே அவருக்கு அத்தகைய ஒரு வாய்ப்புக் கிட்டியது. 'லிட்டில் டைகர் ஆஃப் காண்டூன்' என்ற திரைப்படத்தில் அவர் நடித்தார். ஆனால் இத்திரைப்படம் துரதிர்ஷ்டவசமாக, 1973 ஆம் ஆண்டு ஹாங்காங் நகரில், குறைவானத் திரையரங்குகளில் மட்டுமே திரையிடப்பட்டது. அதன் பிறகு ஒரு சிலப் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றி நடித்ததோடு, சண்டைக் கலைஞராகவும் பணியாற்றினார்.
1976 ஆம் ஆண்டு அவருக்கு வந்த ஒரு கடிதத்திற்குப் பிறகு தான், அவரது வாழ்வில் ஒளி வீசத் தொடங்கியது. ஹாங்காங் படத் தயாரிப்பாளர் வில்லி சானிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. கடிதத்தின் சாரத்தில் 'லோ வேய்' என்றப் பிரபல இயக்குநர் இயக்கும் ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இயக்குனர் லோ வேய், புரூஸ் லீயைப் போன்று ஒரு வீரனாக ஜாக்கி இருப்பார் என்று எண்ணியிருந்தார். ஆனால் ஜாக்கிக்கு புருஸ் லீயைப் போன்ற மின்னல் வீர தற்காப்புக் கலை வரவில்லை. இருப்பினும் அதனாலேயே அந்த திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது.
1978 ஆம் ஆண்டு வில்லி சானின் தயாரிப்பில் வெளிவந்த, 'ஸ்னேக் இன் தி ஈகிள்ஸ் ஷாடோ' என்ற திரைப்படம் ஜேக்கியின் வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியப் படமாக அமைந்தது. அது ஜாக்கியின் திரைப் பயணத்தின் வெற்றி இலக்கான ஒரு நிலைக்குக் கொண்டு சென்றது. இந்தத் திரைப்படத்தின் இயக்குனர் யுயென் வூ-பிங், ஜாக்கியை சாகசக் கலைஞனாக, நகைச்சுவைப் பாணியில் நடிக்க வைத்தார். ஜாக்கியின் குங்பூ சண்டைக் காட்சிகள் நகைச்சுவை பாணியில் அமைந்திருந்ததை ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர்.
இதற்குப் பின்னர் ஏகோபித்த ரசிகர்களின் அபிமானக் கலைஞராக உருமாறிய ஜாக்கி சானுக்கு, வில்லி சான் மேலாளர் ஆனார். தொடர்ந்து ஜாக்கி 1980 ஆம் ஆண்டு, உலகமே வியந்து பார்த்துக் கொண்டிருந்த ஹாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். 'தி பிக் ப்ராவ்ல்' என்ற தனது முதல் ஹாலிவூட் திரைப்படத்தின் மூலம் ஜாக்கி புகழின் உச்சிக்குச் சென்றார். அதனையடுத்து, 1981ஆம் ஆண்டு 'தி கேனன் பால் ரன்' திரைப் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். இருந்த போதிலும் அந்தப் படம் நல்ல வெற்றியைக் கொடுத்தது. ஆனால் 1986ஆம் ஆண்டு வெளியான 'தி ப்ரொடெக்டர்' என்ற திரைப் படம் வணிக ரீதியாக தோல்வி அடைந்தது. அதனால் மீண்டும் ஹாங்காங் படங்களில் ஜாக்கி கவனம் செலுத்தத் தொடங்கினார்.
1995 ஆம் ஆண்டு அவர் மீண்டும் ஹாலிவுட் பக்கம் திரும்பினார். 'ரம்பிள் இன் தி ப்ரான்க்ஸ்' என்ற திரைப் படம், ஜேக்கியை அமெரிக்க ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஸ்டாராக பிரதிபலித்துக் காட்டியது. அதன் பின் வெளியான 'போலீஸ் ஸ்டோரி 3', 'ரஷ் ஹவர்' ஆகியப் படங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றன. ஜாக்கி சான் ஸ்டண்ட் மாஸ்டர் ஜெஃப் யேங்குடன் இணைந்து, 'ஐயம் ஜாக்கி சான்' என்றப் புத்தகத்தை எழுதி, 1999 ஆம் ஆண்டு வெளியிட்டார். ஜாக்கியின் இத்தனை வெற்றிக்கும் காரணம் தனதுப் படங்களில் அவரே சண்டைக் காட்சிகளை அமைப்பதும், ஆக்கிரோஷமான சண்டைக் காட்சிகளில் தானே நடித்ததும் தான். வீரதீர சண்டைக் காட்சிகளில் நேரடியாக நடித்ததால், ஜாக்கியின் உடலில் காயங்கள் இல்லாத இடமே இல்லை என்ற பாராட்டு அவருக்கு சூட்டப்பட்டது.
ஜாக்கிக்கு இந்திய சினிமாவின் மீது எப்பொழுதும் ஒரு ஈர்ப்பு இருந்தது. அவர் இந்திய சினிமாவில் நுழைந்து ஒரு காதல் படத்தில் நடிக்க வேண்டும் என்று பெரிதும் விரும்பினார். அந்த வகையில் அவர் இந்தியில் 'குங்பூ யோகா' என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் எதிர்ப்பாராத தோல்விப் படமாக அமைந்தது. கமல்ஹாசன் பத்து வேடங்களில் நடித்த 'தசாவதாரம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ஜாக்கி சான் முக்கியப் பிரமுகராகப் பங்கேற்றார்.
ஆஸ்கார் விருது பெற வேண்டுமென்பது ஜாக்கிக்குக் கனவாக இருந்தது. 25 ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை ஆங்கில நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலோன் வீட்டிற்குச் சென்ற ஜாக்கிக்கு, அங்கு பார்த்த ஆஸ்கர் விருதை, தானும் வெல்ல வேண்டுமென்ற எண்ணம் துளிர் விட்டது. அவரது அந்த அளப்பரிய ஆசை கடைசியில், 44 வருட சினிமா வாழ்விற்கும் 200 படங்கள் வரை நடித்த கலைச் சேவைக்கும், 2016 ஆண்டு 'வாழ்நாள் சாதனையாளர்' விருதாக அவரது கரங்களில் தவழ்ந்தது.
ஜாக்கி சிறந்த நடிகர் மட்டுமல்ல நல்லப் பண்பாளரும் கூட. இவர் பல தொண்டு நிறுவனங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 1988 ஆம் ஆண்டே, சாரிட்டபில் ஃபவுண்டேஷனையும் 2005 ஆம் ஆண்டு டிராகன் ஆர்ட் பவுண்டேஷனையும் ஜாக்கிசான் நிறுவினார்.
- கரிகாலன்.