World cup timepassonline
Lifestyle

World cup 2023 : ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு பின்னால் இருக்கும் Ajay Jadeja - யார் இந்த அஜய் ஜடேஜா?

ஒரு வீரர் எவ்வாறு பீல்டிங் செய்யவேண்டும் என்பதிற்கான எடுத்துக்காட்டு இவரே. இந்திய அணி இக்கட்டான சூழ்நிலையில் தடுமாறும் போது அணியின் கேப்டன் மற்றும் சக வீரர்கள், இவரின் ஆட்டத்தையே பெரிதும் நம்புவர்கள்.

டைம்பாஸ் அட்மின்

தற்போது இந்தியாவில் நடந்து வரும் கிரிக்கெட் உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளை தோற்கடித்து வரலாற்று சாதனை படைத்துவருகிறது ஆப்கானிஸ்தான் அணி. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால்‌, ஆப்கானிஸ்தான் அணி உலகக்கோப்பைக்கு வருவதற்க்கு முன் அந்த அணியின் தலைமை வழிகாட்டியாக பொறுப்பேற்றுள்ளார் இந்திய அணியின் முன்னால் நட்சத்திர வீரரும், சிரிப்பின் மன்னன் என்று அழைக்கப்படும் அஜய் ஜடேஜா.

தற்போது அந்த அணியின் சிறந்த வழிகாட்டலுக்கும், தொடர் வெற்றிக்கும் உறுதுணையாக இருக்கும்... யார் இந்த அஜய் ஜடேஜா?

அஜய் ஜடேஜா குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் தௌலட்சின்ஜி ஜடேஜா மற்றும் கியான்பா ஜடேஜா தம்பதிகளுக்கு மகனாக பிப்ரவரி 1, 1971 ஆம் ஆண்டு பிறந்தார். அஜய் ஜடேஜா பிறந்தது குஜராத் என்றாலும், அவரின் ஆரம்பகால வாழ்க்கையை டெல்லியிலேயே கழித்தார். இவர் பிறக்கும் போதே கிரிக்கெட் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதாலேயே என்னவோ இவரின் வாழ்க்கையும் கிரிக்கெட்டில் தொடர்ந்தார். 

இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களான துலீப் டிராபி மற்றும் ரஞ்சி டிராபி, இரண்டுக்கும் ஜடேஜாவிற்கும் தொடர்பு உண்டு. ஜடேஜாவின் தாத்தாவின் தம்பி தான் துலீப்சின்ஜி இவரின் பெயரில் தால் துலீப் டிராபி நடத்தப்படுகிறது. மேலும் துலீப் துலீப்சின்ஜியின் உறவினர் தான் ரஞ்சித்சின்ஜி இவரின் பெயரில் தான் ரஞ்சி டிராபி நடத்தப்படுகிறது.

1992 ஆம் ஆண்டு முதல் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கி 2000 ஆம் ஆண்டு வரை சுமார் 8 ஆண்டுகள் இந்திய அணியின் தவிக்க முடியாத முன்னணி வீரராக வலம் வந்தார் ஜடேஜா. ஜூன் 3, 2000 ஆம் ஆண்டு மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக அவர் மீது  கூறப்படும் குற்றச்சாட்டினால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அவருக்கு கிரிக்கெட்டில் இருந்து சுமார் 5 ஆண்டுகள் தடை விதித்தது.

பின்னர் ஜனவரி 27, 2003 அன்று டெல்லி நீதிமன்றம் அவரது தடையை நீக்கியது. இருப்பினும் அவரால் இந்திய கிரிக்கெட் அணிக்காக மீண்டும் விளையாட முடியவில்லை. எனவே 2003 ஆம் ஆண்டு அவரின் ஓய்வை அறிவித்தார். அவர், இதுவரை 15 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 196 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். 

வலது கை பேட்ஸ்மேன் மற்றும் பவுலர் ஆனா ஜடேஜா, அவர் விளையாடிய காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வீரர்களில் ஒருவராகவும் கருதப்பட்டார். மேலும் ஒரு வீரர் எவ்வாறு பீல்டிங் செய்யவேண்டும் என்பதிற்கான எடுத்துக்காட்டு இவரே. இந்திய அணி இக்கட்டான சூழ்நிலையில் தடுமாறும் போது அணியின் கேப்டன் மற்றும் சக வீரர்கள், இவரின் ஆட்டத்தையே பெரிதும் நம்புவர்கள். 90களில் இருந்த ரசிகர்கள் இறுதி ஓவர்களில் அதிக ரன்கள் அடித்தவர் யார் என்றால், அஜய் ஜடேஜாவையே பெரும்பாலும் அவர்கள் நினைவுகூறுவர்கள்.

1996 கிரிக்கெட் உலகக் கோப்பை காலிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தானின் வக்கார் யூனிஸ் 8 ஓவர்கள் வீசி வெறும் 27 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். பின்ன்ர் அவர் வீசிய கடைசி 2 ஓவர்களில் அனில் கும்ளே மற்றும் அஜய் ஜடேஜா சேர்ந்து 40 ரன்கள் விளாசியிருப்பார்கள். அந்த போட்டியில் அஜய் ஜடேஜா மட்டுமே 25 பந்துகளில் 45 ரன்களை விளாசுவார்.

மேலும் முகமது அசாருதீனுடன் இணைந்து அஜய் ஜடேஜா முறையே ஜிம்பாப்வே மற்றும் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற போட்டிகளில் 4வது மற்றும் 5வது விக்கெட்டுக்கான அதிகபட்ச ஒரு நாள் பார்ட்னர்ஷிப் சாதனையையும் படைத்துள்ளார். அஜய் ஜடேஜா 13 ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாகவும் இருந்தார்.

மேலும் ஜடேஜா கடைசியாக 2000 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி பெப்சி ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக  விளையாடிய ஒரு நாள் போட்டியில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடித்து அவரின் அதிக ஸ்கோரை பதிவு செய்தார். இருப்பினும், அஜய் ஜடேஜாவின் கிரிக்கெட் சாதனைகள் படைத்திருந்தாலும், பின்னர் மேட்ச் பிக்சிங் காரணமாக அவருக்கு 5 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்தார்.

ஜடேஜா ஓய்வுக்கு பின்னர் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராகவும், கிரிக்கெட் வர்ணனையாளராகவும் உள்ளார். மேலும் தற்போது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை வழிகாட்டியாகவும் உள்ளார்.

அஜய் ஜடேஜாவை பொறுத்தவரை 100 ரன்கள் அடித்தாலும் சரி, டக் அவுட் ஆகி வெளியேறினாலும் சரி இவரின் முத்தில் உள்ள சிரிப்பு எப்போதும் மாறாமல் இருப்பார். இதனாலேயே ரசிகர்கள் இவரை 90இன் சிரிப்பு மன்னன் என்றும் அழைப்பார்கள். மேலும் போட்டியின் இடையில் இவர் செய்யும் சில குறும்புகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. தற்போதுள்ள விராட் கோலி போலவே, 90களில் பெண்களை கவர்ந்த, பெண்களுக்கு பிடித்தமான கிரிக்கெட் வீரராக அஜய் ஜடேஜா இருந்தார். 

அஜய் ஜடேஜா கிரிக்கெட்டை தாண்டி திரைப்படங்களிலும் நடித்துள்ளார், 2003 ஆம் ஆண்டு சன்னி தியோல் மற்றும் சுனில் ஷெட்டியுடன் இணைந்து நடித்த 'கேல்' திரைப்படத்திலும், 2009 ஆம் ஆண்டு வி கிருஷ்ண குமார் இயக்கிய 'பால் பால் தில் கே சாத்' படத்திலும் நடித்தார். இருப்பினும் இவருக்கு கிரிக்கெட்டை போல சினிமா வாழ்க்கை நன்றாக அமையவில்லை. இவர் நடித்த 2 திரைப்படங்களும் தோல்வியிலேயே முடிந்தது.

மேலும், ஜடேஜா பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாகீர் அப்பாஸுடன் இணைந்து ஜீ நியூஸில் கிரிக்கெட் தொகுப்பாளராகவும் பணியாற்றினார். அவர்கள் இருவரும் 2003 ஆம் ஆண்டு ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையின் போது அறிவிப்பாளர்களாகவும் பணியாற்றினார்கள். 

- மு.குபேரன்.