Guinness
Guinness  timepass
Lifestyle

Guinness : நீருக்கடியில் 38 வித Magic show - உலக சாதனை படைத்த 13 வயது அமெரிக்க சிறுமி !

டைம்பாஸ் அட்மின்

ஸ்கூபா டைவிங் என்பது ஆழ்கடலில் மூழ்கி, கடலில் உள்ள அதிசயங்களைக் காண்பதாகும். மேஜிக் என்பது மேடையிலேயே நம் கண் முன்னே அதிசயங்களை செய்து காட்டுவதாகும். இவை இரண்டையும் ஒரே நேரத்தில், ஒரே செயலாகச் செய்து 13 வயது அமெரிக்க சிறுமி உலக சாதனை படைத்ததுதான் தற்போதைய வைரல் நியூஸாக உள்ளது.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவைச் சேர்ந்த 13 வயதான ஏவரி எமர்சன் ஃபிஷர். இவர், நீருக்கடியில் ஸ்கூபா டைவிங் செய்தபடியே, 3 நிமிடத்தில் 38 மேஜிக் வித்தைகளைச் செய்து காட்டிய வீடியோவை கின்னஸ் உலக சாதனையாளர்கள் அமைப்பு தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

கின்னஸ் அமைப்பானது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த இந்த வீடியோ, பகிரப்பட்ட 14 மணி நேரத்தில் 1.3 லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு, 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களால் லைக் செய்யப்பட்டுள்ளது. நீருக்கடியில், ஸ்கூபா டைவிங் உடையில் அந்த சிறுமி செய்த ஆச்சரியப்படத்தக்க மேஜிக் வீடியோ மக்களை மிகவும் கவர்ந்து வைரலாகி விட்டது.  

இதுகுறித்து, கின்னஸ் உலக சாதனைகள் அமைப்பு (GWR) தங்களது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், "அமெரிக்காவைச் சேர்ந்த 13 வயது ஸ்கூபா டைவரான ஏவரி எமர்சன் ஃபிஷருக்கு வாழ்த்துக்கள். அவர் நீருக்கடியில் பிரமிக்கத்தக்க மேஜிக் வித்தைகளை செய்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளது.

மேலும், “ஏவரி நீருக்கடியில் இருந்தபோது, அவர் தனது வீட்டில் இருப்பதை போல கேசுவலாக செயல்பட்டார். மேலும், அவர் அந்த நீரின் கடும்  குளிரைக் கூட பொருட்படுத்தாமல் மேஜிக் செய்யும்போது, தன்னைச் சுற்றி நீந்திய மீன்களுக்கு பெயரிட்டு மகிழ்ந்தார். அதிலும் குறிப்பாக அவருடன் மிக நெருக்கமாக, சுற்றி சுற்றி வந்த மீனுக்கு அவர் “ஜீட்டோ” எனப் பெயரிட்டார்." என்று கூறப்பட்டுள்ளது.

இந்த கின்னஸ் உலக சாதனை அமைப்பு வெளியிட்டுள்ள இந்த வீடியோவைப் பார்த்த பொதுமக்கள் தங்களின் பலதரப்பட்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அதில் பெரும்பாலானவை ஏவரியை பாராட்டும், உற்சாகப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தது.

தனது 10 வயதில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த போது, பொழுதுபோக்கிற்காக, மேஜிக் செய்யத் தொடங்கியுள்ளார் ஏவரி. ஏற்கெனவே ஸ்கூபா டைவிங் ரசிகையான அவர், அதில் நிபுணத்துவத்துடன் சான்றிதழ்களையும் பெற்றிருந்தார்.

இந்நிலையில் அவர், தனது ஆர்வமான ஸ்கூபா டைவிங் மற்றும் தனது புதிய காதலான மேஜிக் ஆகிய இரண்டையும் இணைத்து, நீருக்கடியில் 3 நிமிடத்தில், அனைவரும் பிரமிக்கும் வகையில் 38 மேஜிக் செயல்களைச் செய்து உலக சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- மு. ராஜதிவ்யா.