சம்ந்தப்பட்ட ரெண்டு நாடுகள் மட்டுமில்லாம எல்லா நாடுகளாலும் பார்த்துக் கொண்டாடப்படுற ஒரு சில தொடர்கள்ல ஆஷஸ் முக்கியமானது.
முதல் நாள்லயே டிக்ளேர் பண்ணி பரபரப்பை உண்டாக்குன இங்கிலாந்து, அஞ்சு நாளுமே பேட்டிங் பண்ணியிருந்த உஸ்மான் கவாஜா, இறுதி நாள்ல எட்டிப் பார்த்து போட்டியோட சுவாரஸ்யத்த இரட்டிப்பாக்குன மழைனு முதல் போட்டி நடந்து முடிஞ்சுருக்க நிலையில கடந்த கால ஆஷஸ்ல நடந்த சுவையான சில சம்பவங்கள திரும்பிப் பார்ப்போமா?
`Body Line Test', வார்னேயோட `Ball of the century' எல்லாமே ஆஷஸ்னு சொன்னாலே நமக்கு ஞாபகம் வந்துடும். அதே போல இந்தத் தொடர் நினைவுக்குக் கொண்டு வர்ற இன்னொரு முக்கியமான நிகழ்வு, கிரிக்கெட்டோட டான், பிராட்மேன் கலந்துக்கிட்ட வரலாற்று சிறப்புமிக்க போட்டி. 1948-ல நடந்த ஆஷஸ் போட்டிதான் பிராட்மேனோட கடைசிப் போட்டியும்கூட. 100-ன்ற டெஸ்ட் ஆவரேஜை எட்ட அவருக்கு நான்கு ரன்கள்தான் தேவைப்பட்டுச்சு.
எப்படியும் அத அடிச்சு அந்த பெருமையை எட்டி விடைபெறுவார்னு எல்லாரும் எதிர்பார்க்க எல்லோருக்கும் ஏமாற்றத்தக் கொடுக்குற மாதிரி டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தாரு. 100-ன்ற சராசரிய எட்டலனாலும் பிராட்மேன் டான் தான். இருந்தாலும் அது ஒரு சின்ன மனக்குறையா ரசிகர்கள் மனசுல பதிஞ்சு, ஒவ்வொரு ஆஷஸ் அப்போவும் நினைவுகூறப்படுது.
யார் யாரோ அசாத்தியமான ரெக்கார்ட்லாம் படைக்க 1989-ல ஆஸ்திரேலியாவோட டேவிட் பூன் ஒரு வித்தியாசமான சாதனைய படைச்சாரு. சிட்னில இருந்து லண்டன் போற ஃபிளைட்ல இடைவிடாம பீரைக் குடிச்சுட்டே வந்தாரு. பத்து இல்ல, இருபது இல்ல 52 கேன்கள் பீரை அசால்ட்டா குடிச்சுருந்தாரு. அந்த தொடர்ல 55 ஆவரேஜோட அவர் ரன்களக் குவிச்சுருந்தாலும் இந்த 52 தான் பெருசாக பேசப்பட்ட எண்ணாக மாறுச்சு.
களத்துக்குள்ல மட்டுமில்ல சமயத்துல வெளியேயும் ஆஷஸ் புகை மண்டலம் படர்ந்து தீப்பொறிய உண்டாக்கும். அதுவும் காலங்கள் தாண்டியும் தொடரும். 2011-ல இயான் செப்பல் மற்றும் இயான் போத்தம் தங்களோட 50 வயதைத் தாண்டுன பிறகும் அடிச்சுக்கிட்டது அப்படிதான் சொல்ல வச்சது.
ரெண்டு பேருமே கமெண்டேட்டர்களாக அந்த ஆஷஸ்ல பங்கேற்றாங்க. போட்டி முடிச்சு கார் பார்க்கிங்ல ரெண்டு பேரும் அக்னி நட்சத்திரம் பிரபு - கார்த்திக் மாதிரி எதிரெதிரா சந்திக்க நேர்ந்துச்சு. தீப்பிழம்பு பெருசா கொழுந்து விட்டு எரியாத குறைதான். செப்பல் ஏதோ கமெண்ட் அடிக்க பதிலுக்கு போத்தமும் கடுப்பாக கிட்டத்தட்ட கைகலப்பு உண்டாக வேண்டிய நிலை. கூட இருந்தவங்க வந்து பிரிச்சு விடாட்டி ரத்தக் களறியாகி இருக்கும்.
சில சர்ச்சைகள சுயசரிதைகள் எப்போவும் கிளப்பும். மொயின் அலியோடதும் அதுக்கு விதிவிலக்கல்ல. 2015-ல நடந்த ஆஷஸ்ல ஒரு ஆஸ்திரேலிய வீரர் தன்னை `ஓசாமா'னு கேலி செஞ்சதா மொயின் அலி எழுதியிருந்தாரு. அதனால உண்டான கோபமோ என்னவோ அந்தப் போட்டியில முதல் இன்னிங்சில 77 ரன்களை எடுத்தது மட்டுமில்லாம 5 விக்கெட்டுகளையும் மொயின் வீழ்த்தியிருந்தாரு. இங்கிலாந்து சுலபமா அந்தப் போட்டிய ஜெயிச்சுது.
தசமங்களா நீடிக்குற இவங்களுக்கிடையேயான ஜென்ம பகைக்கு இதுலாம் சாம்பிள்கள்தான். முழு நீளத் திரைப்படமே ஓட்டுற அளவு கண்டென்டை ஒவ்வொரு ஆஷஸும் கொடுத்துட்டே இருக்கு, நடப்பு ஆஷஸும் கொடுக்கும்.