Bangalore
Bangalore timepass
Lifestyle

Bangalore : “தோசையம்மா தோசை, எம்மாம் பெரிய தோசை” - 123 அடியில் Guinness Record தோசை!

டைம்பாஸ் அட்மின்

MTR Foods நிறுவனம் தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் பெங்களூருவில் உள்ள அந்நிறுவனத்தின் உணவுத் தொழிற்சாலையில் 123 அடி நீள தோசையைத் தயாரித்து உலக சாதனை படைத்துள்ளது அந்நிறுவனம்.

1924ஆம் ஆண்டு பெங்களூரில் தொடங்கப்பட்டது MTR Foods நிறுவனம். இந்நிறுவனம் சிற்றுண்டிகள், மசாலா, பானங்கள், உடனடி உணவுக் கலவை, காலை உணவுக் கலவை என ஏராளமான உணவுப் பொருள்களைத் தயாரித்து, விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில், இந்நிறுவனம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆனதையொட்டி, லார்மன் கிச்சன் எக்யூப்மென்ட்ஸ் (Lorman Kitchen Equipments) நிறுவனத்துடன் இணைந்து, 123 அடி நீள தோசையை MTR மிக்ஸ்களைப் பயன்படுத்தி கடந்த தயாரித்துள்ளது. இது தற்போது உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் 2014-இல் 54 அடி நீளத்தில் உருவாக்கப்பட்ட தோசையே உலக சாதனையாக இருந்தது.

இந்த உலக சாதனையானது 75-க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்களின் கூட்டு முயற்சியாகும். "இந்த உலக சாதனையான 123 அடி தோசையை தயாரிப்பதற்கு முன் நாங்கள் 100க்கும் மேற்பட்ட முறை ஒத்திகை பார்த்துள்ளோம்" என MTR-இன், consultant chef- Centre of Excellence ரெஜி மேத்யூ என்பவர் தெரிவித்துள்ளார்.

இது சாதாரண தோசை சுடுவதில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. தொடக்கத்தில், 123 அடிக்கு தயார் செய்யப்பட்ட தவா (தோசைக் கல்) ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் அமைக்கப்பட்டது. இதன் வெப்பநிலை ஒரே சீராக உள்ளதா எனப் பரிசோதிக்க அகச்சிவப்பு வெப்பமானிகள் பயன்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டுள்ளது. தோசை மாவை, தவாவில் ஊற்ற dosa batter என்ற batter hopper பயன்படுத்தப்பட்டது. இது ஒரே சீராக தவா முழுவதும் மாவைப் பரப்பியது. இவ்வாறு, மனித சக்தி மற்றும் இயந்திர சக்தியின் உதவியுடன் நீண்ட, இடைவெளியில்லாத 123 அடி நீளத்தில் மிருதுவான தோசை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் அனுபவம் வாய்ந்த சமையல் கலைஞர்களைத் தவிர, ராமையா பல்கலைக்கழகத்தில் சமையல் கலை பயன்று வரும் மாணவர்களும் பங்கேற்றுள்ளனர்.

இதுகுறித்து, பல்கலைக்கழகத்தின் பேராசிரியை நீனா ஜோஷி தெரிவிக்கையில், இந்த உலக சாதனை நிகழ்வுக்காக கடந்த 6 மாதங்களாக எங்களது மாணவர்கள் செய்த பணிகள், அவர்களது எதிர்கால தொழில் துறை பணிக்கு அவர்களைத் தயார்படுத்திக் கொண்டதுபோல, பேருதவியாக இருந்தது என்றார்.

இறுதியில், தயாரிக்கப்பட்ட 123 அடி நீள உலக சாதனை தோசை, ஹெப்பகோடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- மு. ராஜதிவ்யா.