கேப்டன் கூல், உணர்ச்சிகளக் காட்டவே மாட்டாரு, அவசர முடிவுகள எடுக்காத அளவு நிதானமானவரு, சின்ன பயமோ பதற்றமோ கூட கடுகளவும் அவர்கிட்ட இருக்காதுன்றது தான் தல தோனியோட டிராக் ரெக்கார்ட். ஆனா ஆனானப்பட்ட அவரையே பொறுமை இழக்க வைக்குற சந்தர்ப்பங்களும் ஐபிஎல்ல உண்டாகியிருக்கு. அதுல ஒரு சம்பவத்த ரீவைண்ட் பண்ணி வேகமா ஓட விடுவோமா ?
2019-ல ஜெய்ப்பூர்ல ராஜஸ்தானுக்கு எதிரான போட்டில சிஎஸ்கே ஆடிட்டு இருந்துச்சு. ராஜஸ்தான் தான் முதல்ல பேட்டிங் பண்ணி இலக்க நிர்ணயிச்சாங்க. 152-ன்ற சுலபமான டார்கெட் தான். அத சிஎஸ்கேவும் சேஸ் பண்ணிட்டு இருந்துச்சு.
போட்டி ரெண்டு பக்கமும் Neck to Neck ஆக நீயா நானா நடத்திட்டு இருந்துச்சு. இறுதி ஓவர்ல மூன்றாவது பந்துல தல தோனி ஆன் ஸ்ட்ரைக்ல இருந்தாரு. பென் ஸ்டோக்ஸ் ஒரு ஸ்லோ யார்க்கரால தோனிய வெளியேத்திட்டாரு. மிச்சம் மூணு பந்துகள்ல எட்டு ரன்கள் எடுக்க வேண்டிய இக்கட்டான நிலைமை.
ஸ்ட்ரைக் சாண்டர்கிட்ட வந்துச்சு. நான்காவது பந்த பென் ஸ்டோக்ஸ் வீச வந்தாரு. ஒரு ஸ்லோ பாலை அவர் வீச அது உயரத்துக்கான நோ பால்னு ஒரு அம்பயர் சொல்லி சிக்னல் தர, லெக் சைட் அம்பயர் அது நோ பால் இல்லைனு முடிவை மாத்தி விட்டுட்டாரு. நிலைமை சிஎஸ்கே எதிரா மைக்ரோ விநாடிகள்ல மாறி சிஎஸ்கே கூடாரத்த உலுக்கி சப்த நாடியையும் ஒடுக்கிடுச்சு. ஆனா எப்போதும் அமைதியா இருக்க தல தோனி அதுக்கு நேர் எதிர் மனநிலைக்குப் போயிட்டாரு.
கோபமானது மட்டுமில்லாம ஃபீல்டுக்குள்ள நேராக நுழைந்து அம்பயர்கள்கிட்ட வாக்குவாதம் பண்ண ஆரம்பிச்சுட்டார். சந்தேகம் இருந்தா தேர்ட் அம்பயர்கள்கிட்ட கேட்டு சொல்லுங்கனு அவர் சொன்னதையும் ஃபீல்ட் அம்பயர்கள் ஒத்துக்கல. இந்த விவாதம் ரொம்ப நேரம் நீண்டும் அது நோ பாலாக மாற்றப்படல. பிறகும் சமாதானம் ஆகாமலேதான் தோனி வெளியே வந்தாரு.
நான்காவது மற்றும் அஞ்சாவது பந்துகள்ல தலா இரு ரன்கள சாண்ட்னர் எடுத்துத் தந்துட்டாரு. இறுதிப் பந்துல நான்கு ரன்கள் வேணும்ன்ற நிலை. சிஎஸ்கேவுக்கு சீக்ரட் சப்போர்டரா ஸ்டோக்ஸ் ஒரு வொய்ட வீச அதுக்கடுத்து கிடைச்ச துணை பந்துல சாண்ட்னர் சிக்ஸரடிச்சு போட்டிய சிஎஸ்கே பக்கம் திருப்பிட்டாரு. அந்த சிக்ஸர் தல தோனிக்கான டெடிகேஷன் மாதிரியே இருந்தது. சிஎஸ்கேவுக்கான சாண்டகிளாஷாக மாறிட்டாரு சாண்டனர்.
கேப்டனாக தோனியோட 100-வது ஐபிஎல் வெற்றி அது. அதுவும் கடைசி பந்துல கிடைச்ச த்ரில் வெற்றி. தோனிக்கு இந்தப் போட்டியில மேன் ஆஃப் தி மேட்ச் விருதும் கூட கிடைச்சது. ஆனா இது எதுவுமே சிஎஸ்கே ரசிகர்கள் மனசுலயோ அடுத்த நாள் பத்திரிக்கைகள்லயோ பெருசா சொல்லப்படல. அதைவிட தோனியோட எண்ட்ரி பத்திதான் பெரிய பேச்சா ஓடுச்சு. ஏன்னா முன்னாடி சொன்னதெல்லாம் எப்போவும் நடக்கறதுதான். தோனி அவரோட பொறுமைய இழந்தது தான எட்டாவது அதிசயம்.
தல தோனிக்கு 50 சதவிகிதம் சம்பளம் பிடிப்பு ஃபேர் ப்ளே புள்ளிகள்ல கைவைக்கிறதுன்னு நிறைய விஷயங்கள் அதன் விளைவாக நடந்தேறியது.