தாய் பசுவை கண்டுபிடித்து தரக்கோரி, கன்று குட்டியின் கழுத்தில் பதாகை அணிவித்து வினோதமான முறையில் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பசுவின் உரிமையாளர் மனு அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூர் அருகே உள்ள கொட்டியாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன். அவருக்கு சொந்தமாக உலகலாம்பூண்டி கிராமத்திலுள்ள நிலம் உள்ளது.
அங்கு, அமைக்கப்பட்டுள்ள மாட்டுக் கொட்டகையில், தனது பசுமாடு மற்றும் கன்றுக்குட்டியை வழக்கமாக கட்டி வந்துள்ளார். இந்நிலையில், வழக்கம் போல 18.01.2023 அன்று கன்று ஈன்ற பசுவை கட்டி வைத்துவிட்டு வீட்டிற்கு சென்ற அவர், மறுநாள் அதிகாலை 4.00 மணியளவில் சென்று பார்த்தபோது மாட்டுக் கொட்டகையில் இருந்த பசு காணாமல் போயிருந்தததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
எனவே, பசுவை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறித்து கஞ்சனூர் காவல் நிலையத்தில் கோவிந்தன் புகார் அளித்துள்ளார். அப்புகாரை பெற்றுக்கொண்ட போலீஸார், பசுவைத் திருடிச் சென்றவர்கள் குறித்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும், பசுவை கண்டுபிடித்து தர மாவட்ட ஆட்சியரான தாங்கள் ஆவணம் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவிந்தன் மனு அளிக்க வந்தார்.
அப்போது, "என் அம்மாவை கண்டுபிடிச்சு கொடுங்க அய்யா" என தாயை இழந்து தவிக்கும் கன்றுக்குட்டி கோரிக்கை வைப்பதாக கன்றுக்குட்டியின் கழுத்தில் பதாகை அணிவித்து வினோதமான முறையில் உடன் அழைத்து வந்திருந்தார். அவரிடம், விரைவில் தாய் பசுவை கண்டுபிடித்து தருகிறோம் என அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து கோவிந்தன் தனது கன்று குட்டியை அழைத்துச் சென்றார்.
- அ.கண்ணதாசன்.