PayTM
PayTM timepass
Lifestyle

கோவை : பேருந்துகளில் இனி PayTM கரோ !

டைம்பாஸ் அட்மின்

தமிழ்நாட்டில் முதன்முறையாக கோவையில் இயங்கி வரும் தனியார் பேருந்துகளில் கியூஆர் கோடு மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

UPI டிஜிட்டல் பேமண்ட் சேவையானது இன்று பெரிய வணிக நிறுவனங்கள் முதல் சாலையோர கடைகள் வரை பட்டி தொட்டியெங்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது,தமிழ்நாட்டிலே முதன்முறையாக கோவையில் இயங்கி வரும் தனியார் பேருந்துகளில் கியூஆர் கோடு மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய முயற்சி பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஈரோட்டைச் சேர்ந்த தனியார் பேருந்து நிறுவனமான ஜெய்சக்தி பஸ் சர்வீசஸ் கோயம்புத்தூரில் வடவள்ளி - ஒண்டிப்புதூர், சாய்பாபா காலனி, மதுக்கரை மார்க்கெட் - ஒண்டிப்புதூர், கீரநத்தம் - செல்வபுரம் ஆகிய வழித்தடங்களில் ஐந்து பேருந்துகளை இயக்கி வருகிறது.

சில்லறைத் தட்டுப்பாட்டைக் குறைக்கும் நோக்கில் இந்நிறுவனத்திற்கு சொந்தமான ஐந்து பேருந்துகளிலும் கியூஆர் கோடு மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தினால்,வாத்தியார் பட வடிவேலு போன்று மீதி சில்லறைக் கேட்டுப் பறிதவிக்கும் நிலை பயணி இல்லை. மேலும், ஐந்து ரூபாய் டிக்கெட்க்கு 500 ரூபாய் நீட்டும் பயணியைப் பார்த்து நடத்துநர் டென்ஷன் ஆகும் நிலையும் இனி இல்லை.

இந்தத் திட்டம் குறித்து தனியார் பேருந்தில் பணியிலிருந்த நடத்துநர் கணேஷிடம் பேசினோம்.

"சில்லறை தட்டுப்பாட்டைக் குறைக்க இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த சேவை எங்களுக்கும் பொது மக்களுக்கும் மிகுந்த பயன்தரக் கூடிய வகையில் உள்ளது. பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்து விடுவோம். அவர்கள் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் செலுத்து விடுவார்கள். கல்லூரி பயிலும் மாணவர்கள் இந்த சேவையை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். அனைத்துப் பேருந்துகளிலும் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டால் பயன்தரக் கூடிய வகையில் இருக்கும்" என்றார்.

பேருந்தில் பயணித்த பயணிகளிடம் பேசும் போது, "அனைவரின் மத்தியிலும் இந்த ஐடியா இருந்தது. தனியார் பேருந்து இம்முயற்சியை செயல்படுத்திய முறை பாராட்டுக்குரியது. சில்லறைப் பிரச்னை இனி நடத்துநருக்கும் இல்லை. பயணிக்கும் இல்லை. அரசு பேருந்துகளிலும் இம்முறை நடைமுறைப் படுத்தப்பட்டால் நன்றாக இருக்கும்." என்றனர்.

- ர. பிரேம்குமார்.

படங்கள் -வெ.தேனரசன்.