"கள்ளக்காதலை சேர்த்து வைக்க கட்டணம் பத்தாயிரம்"னு பேஸ்புக்ல ஒரு விளம்பரம் பார்த்தேன். யாருப்பா இவரு புதுசா இருக்காரேன்னு சம்பந்தப்பட்டவரை தேடிப்பிடித்தேன்.
"என் பெயர் இடிமுரசு இஸ்மாயில். ஊர் திருச்சி. கடந்த 40 வருசமா அரசியல் கடலில் நீந்திக்கிட்டு இருக்கேன். ஒருமுறை தி.மு.க பொதுக்கூட்ட மேடைல பயங்கரமா ஒரு உரையாற்றுனேன். அதைப் பார்த்த கலைஞர் ஐயா "இடிமுரசு போல பேசிய தம்பி இஸ்மாயிலே"ன்னு சொன்னாங்க. அப்பறம் அந்தப்பட்டமே நிலைச்சிடுச்சு. இது தவிர 'ஏழைகளின் இளவல்'. 'மக்கள் தொண்டன்' இப்படியும் மக்கள் என்னை கூப்பிடுவாங்க."
"எனக்கு இந்த பச்சைத் துண்டு, தொப்பிதான் அடையாளம். இதெல்லாம் போட்டு ஒரு பில்டப்பா இருந்தாதான் நாலு பஞ்சாயத்து வருது. பெரிய மனுஷன்னு ஊருக்குள்ளே ஒரு பேர் கிடைக்குது" என்றவரை ஆசுவாசப்படுத்தி பேட்டியை ஆரம்பித்தேன்."
அதெல்லாம் இருக்கட்டும் நீங்க கள்ளக்காதலை எல்லாம் சேர்த்து வைக்கிறீங்களாமே ?
"நியூஸ் பேப்பரைத் திறந்தாலே தினமும் காதல் தகராறில் கொலை, காதல் தகராறில் வெட்டு குத்து, இப்படியான செய்திகள்தான் வருது. மக்கள் என்கிட்ட வந்து "தொடர்ந்து இப்படியே நடக்குதே இதை நீங்க ஒரு முடிவுக்கு கொண்டுவரக்கூடாதா பாய்"னு முறையிட்டாங்க.
நான் உடனடியா இந்தப் பிரச்னையை கையில எடுத்தேன். நான் செஞ்ச ஆராய்ச்சில இதெல்லாம் வெறும் காதல் கொலைகள் கிடையாது எல்லாமே கள்ளக்காதல் கொலைகள்னு கண்டுபிடிச்சேன். 2001ல இருந்து 2017 வரை இந்தியாவில் மொத்தம் 4,412 கள்ளக்காதல் கொலைகள் நடந்திருக்கு."
"அதில் தமிழ்நாட்டில் மட்டும் மாசத்துக்கு 150 கொலைகள் நடந்திட்டு இருக்கு. இந்தக் கொலைகளை எல்லாம் தடுக்கவும். கள்ளக்காதலை நல்ல காதலாக மாற்றி ஜோடிகளை சேர்த்து வைக்கவும் முடிவு பண்ணி கட்டணமா பத்தாயிரம் நிர்ணயிச்சு ஃபேஸ்புக்ல அறிவிச்சேன்."
"கடகடன்னு கள்ளகாதலர்கள் என் வீடு தேடி வர ஆரம்பிச்சிட்டாங்க. கள்ளக்காதல் ஜோடி ஏழைகளா இருந்தா அவங்களுக்கு கட்டணத்தில் சலுகையும் உண்டு. ரொம்ப ஏழைகளா இருந்தா இலவசமாகவும் இந்த சேவையை வழங்குறேன். என் பார்வையில் காதல் என்றால் அன்பு, கள்ளக்காதலிலும் அன்பு இருக்கிறது.
திருமணமான மனைவியோ, கணவனோ வேறு ஒருவரின் கணவன் மீதோ, மனைவி மீதோ ஆசைப்படுவதும் ஒரு அன்புதானே. சுப்ரீம் கோர்ட்டே "ஒரு ஆணும் பெண்ணும் மனம் ஒப்பி இணைவது குற்றமல்ல"னு சொல்லும்போது நான் இவங்களை ஆதரிக்கிறதுல என்ன தப்புங்கிறேன்"
கள்ளக்காதலை சேர்ந்து வைக்கிற இந்த ஐடியா உங்களுக்கு எப்படி வந்துச்சு ?
"ஒருநாள் எனக்கு ஒரு கனவு வந்துச்சு. அந்தக் கனவுல ஒரு ஜோடி உசுருக்கு பயந்து ரோட்ல ஓடிக்கிட்டு இருந்தாங்க. நான் அவங்கள கூப்பிட்டு என்ன பிரச்னைன்னு கேட்டேன். நாங்க ரெண்டுபேரும் கள்ளக்காதல் ஜோடி எங்களை கொலை செய்ய ஆட்கள் துரத்துறாங்கனு சொன்னாங்க. உடனே நான் துரத்துறவங்ககிட்ட பேசி அந்தப் பிரச்சனையை சுமூகமா தீர்த்து வெச்சேன். உடனே முழிப்பு வந்திடுச்சு.
இதையே நாம நிஜத்துல பண்ணினா நிறைய உயிர்களைக் காப்பாத்தலாமேனு ஒரு ஐடியா கிடைக்க உடனே களத்துல இறங்கிட்டேன். ஒரு கள்ளக்காதல் பிரச்சனையை கையில எடுக்குறதுக்கு முன்னால அந்த ஜோடிக்கு ஒரு கண்டிஷன் போடுவேன்.
நான் சொல்றதை மட்டும் கேட்டு நடந்தா உங்க கள்ளக்காதல் சக்ஸஸ் ஆகும். இல்லேன்னா ஃபெயில் ஆகிடும். இதை மட்டும் தெளிவா புரிஞ்சுக்கோங்கனு சொல்லிடுவேன்"
நீங்க கள்ளக்காதல் பண்ணியிருக்கீங்களா ?
"நான் சின்ன வயசுல கள்ளக்காதல் பண்ணிருக்கேன். அவங்க வேற ஒருத்தருடைய மனைவி. என்மேல ஆசைப்பட்டு வந்தாங்க. கொஞ்சநாள் அவங்க கூட வாழ்ந்தேன்.
அப்பறம் அவங்க என்னை விட்டு பிரிஞ்சு போய்ட்டாங்க. அதுக்கப்பறம் யார்கூடவும் எனக்கு கள்ளக்காதல் வரல. காதல் மாதிரியே கள்ளக்காதலும் புனிதமானது அதுவும் வாழ்க்கையில ஒருமுறைதான் வரும்" என்று ஃபீல் ஆகிறார் இடிமுரசு இஸ்மாயில்.