America America
Lifestyle

America : காருக்குள் ஏற்றிச் செல்லப்பட்ட காளை - எப்படி சாத்தியம் ?

டைம்பாஸ் அட்மின்

அமெரிக்காவில் ஒரு நபர் தனது சிறிய காரில் ராட்சத வாட்சுய் ரக காளை ஒன்றை ஏற்றிச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வாகன ஓட்டிகள் மற்றும் உள்ளூர் மக்களின் புகாரின் அடிப்படையில் அந்த நபரை போலீசார் விரட்டி பிடித்தனர்.

கடந்த புதன்கிழமை காலை 10 மணியளவில் நோர்போக் பிரிவு காவல்துறை (Norfolk Police Division) அதிகாரிகளுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் நெடுஞ்சாலை 275 இல் காளையுடன் ஒரு நபர் ஓட்டிச் சென்றதாகப் புகாரளிக்கப்பட்டது. என்ன காருக்குள் காளையா? எனக் குழம்பித் தான் போயிருந்தனர். பின் ஏதாவது சிறிய கன்றாக இருக்கும் என்று நினைத்துச் சென்றவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

ஏனெனில் அந்த காருக்குள் இருந்தது வாட்சுய் (Watsui) வகையைச் சேர்ந்த மிகப்பெரிய காளை. திமிலைப் பிடித்து அடக்கவே நாம் பாடுபடும் பட்சத்தில், அவர் அதை எப்படி காருக்குள் அடக்கினார் என்ற சந்தேகம் வந்தது. இதற்காகவே சிறப்பாகக் காரை மாற்றி அமைத்திருக்கிறார் அந்த நபர். ஒரு புறம் உள்ள இருக்கைகள் மற்றும் மேற்கூரையைக் கழட்டி விட்டு காளை இருக்கும் வண்ணம் மாற்றம் செய்துள்ளார்.

அந்த காளையாரைப் பற்றித் தேடும் போது, அவர் பெயர் ஹௌடி டூடி (Howdy doody) எனத் தெரிய வந்தது. இந்த வாட்சுய் காளைகள் நீண்ட கொம்புகள் கொண்ட, நவீன அமெரிக்க நாட்டு மாடுகளின் இனமாகும். இது கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவின் 'சங்கா' வகை கால்நடைகளிலிருந்து உருவானதாகக் கூறப்படுகிறது.

அந்த வாகனத்தின் உரிமையாளரிடம் காளையை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறும், நகரத்தை விட்டு வெளியேறுமாறும் போலீசார் கேட்டுக் கொண்டனர்.

- மு. இசக்கிமுத்து.