West Indies  West Indies
Lifestyle

IND vs WI : West Indies Cricket -ன் இந்த பரிதாப நிலைக்கு காரணம் இதுதானா?

'இந்தியா போன்ற வாரியங்கள் அள்ளித் தந்தா தங்களோட வாரியம் கிள்ளிதான் தருது'ன்ற மனக்குறையோட இருக்கவுங்களுக்கு ஸ்பான்சர்ஷிப் தொகைதான் ஓரளவு வருமானத்தைப் பத்தி கவலைப்படாம பார்த்துட்டு இருந்தது.

Ayyappan

இந்த ஆண்டு இந்தியாவுல நடக்க போற ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில இருந்து வெளியேறிடுச்சு மேற்கு இந்தியத்தீவுகள் அணி. குழறுபடிளாலும் சர்ச்சைகளாலும் பின்னப்பட்ட வலைல பல வருஷங்களா மேற்கிந்தியத்தீவுகள் அணி சிக்கித் தவிச்சுட்டு வருது. இதோட ஆரம்பப்புள்ளி உலகத்தோட பார்வைக்கு வந்தது 2014-ல, அவங்க இந்தியாவுக்கு வந்து ஆடினப்போ.

மூன்று ஃபார்மட்கள்லயும் ஆடற மாதிரி திட்டமிடப்பட்ட தொடர்ல மேற்கிந்தியத்தீவுகள் இந்தியால வந்து ஆடினாங்க. அதுல ஒருநாள் தொடர்தான் முதல்ல நடைபெற்றது. முதல் மற்றும் மூன்றாம் போட்டிகள்ல இந்தியா வெற்றி பெற, இரண்டாவது போட்டி மழையால் கைவிடப்பட, நான்காவது போட்டி தர்மசாலாவிலே நடந்துச்சு.

அப்போதுதான் எஞ்சிய போட்டிகள்ல ஆடப் போறதில்லைன்ற அதிர்ச்சிகரமான தகவலை பிராவோ வெளியிட்டார். அந்தப் போட்டியில மேற்கிந்தியத்தீவுகள் வெற்றி பெற்று தொடர் 2/1 என்ற நிலையை எட்டினாலும் அனைவரோட கவனமும் அதை விடுத்து இந்த சர்ச்சையின் பக்கம் திரும்பிடுச்சு.

மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அசோசியேசனுக்கும் வீரர்களுக்கும் நடுவுல ஏற்கனவே பனிப்போர் மூண்டு இருந்தது. தேசிய அணிக்காக ஆடுற வீரர்கள் அத்தனை பேரும் தங்களுக்கு வரக்கூடிய ஸ்பான்சர்ஷிப் நிதி மொத்தத்தையும் அசோசியேஷனுக்கு கொடுத்துடனும். அப்படி வசூலிக்கப்படற தொகை அப்படியே ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டோட முன்னேற்றத்துக்காக பயன்படுத்தப்படும் அப்படின்ற புதிய கட்டுப்பாட்டை வாரியம் கொண்டு வந்தது.

இந்த நடவடிக்கை மீது எந்த ஒரு மேற்கிந்தியத்தீவுகளோட கிரிக்கெட் வீரருக்கும் உடன்பாடு இல்லை. ஏற்கனவே இந்தியா போன்ற வாரியங்கள் அள்ளித் தந்தா தங்களோட வாரியம் கிள்ளிதான் தருதுன்ற மனக்குறையோட வலம் வந்தவங்களுக்கு ஸ்பான்சர்ஷிப் மூலமா கிடைக்கிற தொகைதான் ஓரளவு அவங்கள வருமானத்தைப் பத்தி கவலைப்படாம பார்த்துட்டு இருந்தது.

அப்படியிருக்க அசோசியேஷனோட இந்தச் செயல் மிகப்பெரிய மனத்தாங்கலைக் கொண்டு வந்தது. இது எல்லாத்துக்கும் ஒருபடி மேலே போய் வீரர்கள் எல்லோரும் அதற்கான ஒப்பந்தத்துல உடனடியாக கையெழுத்துப் போடணும் அப்படின்னும் நெருக்கடி தரப்பட்டுச்சு. இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு வீரர்கள் தள்ளப்பட்டாங்க.

பேக்ரவுண்டல பலகட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்று எல்லாமே தோல்வியைத் தழுவ தொடர்ந்து வீரர்களோட கழுத்துல சுறுக்குக் கயிறைப் போட்டு இறுக்கியது அவங்களோட வாரியம். "பொறுத்தது போதும் பொங்கி எழு"ன்ற நிலைக்கு கேப்டன் பிராவோவும் அவருக்குக் கீழே இருந்த வீரர்களும் தள்ளப்பட்டாங்க.

இதை எல்லாரோட கவனத்துக்கும் கொண்டு வந்தால் மட்டுமே சரியான நியாயம் கிடைக்கும்ன்ற முடிவுக்கு வந்தாங்க. அதைச் செய்ய அவங்க தேர்ந்தெடுத்த வழிதான் யாருமே எதிர்பாராதது. தர்மசாலாவிலே வைத்தே எஞ்சிய ஒருநாள் போட்டியிலும், டி20 மற்றும் டெஸ்ட்லையும் ஆடப்போறது இல்லைனு அறிவிச்சாங்க. கிரிக்கெட்டோட ஹாட் நியூஸா அது வாரக் கணக்குல நீடிச்சது.

கல்யாண வீட்ல செய்யப்படற அவசர உப்புமா மாதிரி இந்தியா அவசர அவசரமாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தோட பேசி ஒருநாள் தொடரை ப்ளான் பண்ணி அந்த இடைவெளிய நிரப்பிடுச்சு. ஆனா இதுல பாதிக்கப்பட்டது மேற்கிந்தியத்தீவுகள் வாரியம்தான்.

தங்கள் வீரர்களோட செயலால அவமானம் ஒருபுறம், இந்தியாவுக்கு ஏற்பட்ட இழப்ப எப்படி ஈடுகட்றது அப்படின்ற யோசனை மறுபுறம். வெளிப்படையாகவே பிசிசிஐ-க்கு மன்னிப்புக் கடிதம் எழுதுனாங்க. இருந்தாலும் இது முழுக்க மேற்கிந்தியத்தீவுகள் வாரியத்தோட தவறுதான்.

தங்களோட வீரர்களோட பேசி விஷயத்த சுமூகமாக முடிக்காமல் நெற்றிப்பொட்டுல துப்பாக்கியை வச்சு மிரட்டாத குறையாக செயல்பட்டு பிரச்சினைய இந்த அளவு கொண்டு போய் நிறுத்திட்டாங்க. இன்றைக்கும் அவர்களோட பொறுப்பற்றதன்மை தொடர்ந்து கொண்டேதான் இருக்கு.

மேற்கிந்தியத்தீவுகளோட கிரிக்கெட் அதள பாதாளத்துல பாய்ஞ்சதுல இந்த சம்பவம் ஒரு முக்கிய இடத்தைப் பிடிச்சிருக்கு.