Women's Day டைம்பாஸ்
Lifestyle

Women's Day: மாமியார், மருமகள் ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டால் உணவு இலவசம் - ஈரோட்டில் சுவாரஸ்யம்!

"உணவை மிச்சம் வைக்கக்கூடாது என்பது முக்கிய நிபந்தனையாகும். இப்படி இருவரும் சாப்பிடும் உணவுக்கு பில் இல்லை" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைம்பாஸ் அட்மின்

மகளிர் தின கொண்டாட்டமாக மாமியார் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் பாஸ்பரம் உணவை ஊட்டிக்கொள்ள வேண்டால், சாப்பிடும் உணவுக்கு பில் கிடையாது என்று ஈரோட்டில் ஒரு நூதன அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஒரு உணவகம்.

உலக மகளிர் தினம் மார்ச் 8ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் பல்வேறு இடங்களில் பல்வேறு வகையில் கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதே போல் ஈரோட்டில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் மகளிர் தினத்தை முன்னிட்டு வித்தியாசமான ஒரு போட்டியை அறிவித்துள்ளது.

இதன்படி, "6ம் தேதி முதல் வரும் 18ம் தேதி வரையிலான நாட்களில், தங்கள் ஓட்டலில் மாமியார் மருமகள் இருவரும் ஒன்றாக சாப்பிட வர வேண்டும். இருவரும் பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் உணவை ஊட்டி விட வேண்டும். உணவை மிச்சம் வைக்கக்கூடாது என்பது முக்கிய நிபந்தனையாகும். இப்படி இருவரும் சாப்பிடும் உணவுக்கு பில் இல்லை" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, பல மாமியார்கள் தங்கள் மருமகள்களுடனும், மருமகள்கள் தங்கள் மாமியாருடனும் வந்து சாப்பிட்டனர்.

இந்தப் போட்டியில், மாமியார் தனது மருமகளுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்து தனது கைகளால் ஊட்டி விட வேண்டும், இதே போல் மருமகள் தனது மாமியாருக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்து தனது கைகளால் பாஸ்பரம் உணவு ஊட்டி விட வேண்டும்.

இதனையடுத்து உணவகத்திற்கு வந்த மாமியார் - மருமகள்கள் அசைவ உணவை வகைகளான மட்டன் பிரியாணி, சிக்கன் லாலிபாப், நான், சிக்கன் கிரேவி போன்றவற்றை ஆர்டர் செய்து போட்டியின் விதிகளின் படி தனது கைகளால் ஊட்டி, மிச்சம் வைக்காமல் சாப்பிட்டனர். ஓட்டல் நிர்வாகத்தினரும் சாப்பிட்டதற்கு உண்டான தொகையை வாங்கவில்லை.

வீடுகளில் அன்பை பகிர்ந்து கொள்வது குறைந்து வருவதால், சிறு விஷயங்கள் கூட சர்ச்சையை ஏற்படுத்தி, குடும்பத்தில் அமைதியை குலைப்பதால் இதுபோன்ற போட்டிகளில் கலந்து கொள்ளும் மாமியார், மருமகள்கள் தங்கள் குடும்பப் பிரச்னையை பேசி நீர்க்கும் மனநிலையை பெறுவார்கள் என நம்புவதால் இந்த போட்டியை அறிவித்தாக ஓட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்தினர்.

- இளையபதி.

படங்கள்: ரமேஷ் கந்தசாமி.