அடிச்சு சுருட்டுற அக்னி வெயிலும் ஐபிஎல்லும் ஒரே நேரத்துல முடிஞ்சுட்டாலும், அது ரெண்டும் உண்டாக்குன அனல் இன்னும் அடங்கல. ஒருமுழு சீசன்ல உண்டான அதே அளவு வெப்பத்த ஒரே இன்னிங்க்ஸ்ல ஒருத்தரு உருவாக்குனாரு. பந்துகள் தீப்பிடிச்சு மைதானத்தோட எல்லாப் பக்கமும் பறக்க, எரிமலைக் குழம்புக்குள்ள நடுவே ஓடிவந்து பந்து வீசுற அதே ஃபீலை பௌலர்கள் எல்லாத்துக்கும் அவர் கொடுத்தார்.
`Hail Storm' கேள்விப்பட்ருப்போம் ஆனால் 'Gayle Storm' மொத்தக் களத்தையும் அன்னைக்கு சூறையாடுச்சு. ஆர்சிபிக்காக கிறிஸ் கெய்ல் ஆடுன அந்த வெறியாட்டத்தைப் பத்திதான் பார்க்கப் போறோம்.
கரீபியன் கிரிக்கெட்டர்கள் எல்லாருமே அதிரடிக்குப் பேர் போனவங்கதான் அப்படினாலும், கெய்ல்தான் அந்தப் படைக்குத் தளபதி. டி20ல சதங்கள அடிக்குது தான் அவரோட ஹாபி. அதுவும் சூடுவச்ச ஆட்டோ மீட்டர் கணக்குல ஸ்ட்ரைக் ரேட் எகிறும். ஆர்சிபிக்கு எதிராக அவர் ஆடுன ஒரு இன்னிங்ஸும் அப்படிப்பட்டதுதான்.
175 - இது டீம் ஸ்கோர் இல்ல, கெய்ல் ஒருத்தரே பீஸ்ட் மோட்ல மாறி அடிச்ச ஸ்கோர். அதுவும் வெறும் 66 பந்துகள்ல வெறிபிடிச்ச மாதிரி அவரு பேயாட்டம் போய்ட்ருந்தாரு. சின்னச்சாமி ஸ்டேடியத்தோட அடித்தளம் வரை அத்தனையும் அன்னைக்கு அதிர்ந்துச்சு.
2013 ஏப்ரல் 23-ல புனே வாரியர்ஸுக்கு எதிராக ஆர்சிபி ஆடிய போட்டி அது. சந்திச்ச முதல் பந்துல இருந்தே அவரோட அக்ரஷன் அடக்க முடியாததாக இருந்துச்சு. இவருக்கு எப்படி பந்து வீசுறதுன்னு பௌலர்கள் குழம்பிப் போக காத்துலயே பறந்துட்டு இருந்த பந்துகளப் பார்த்து ஃபீல்டர்கள் ஸ்தம்பிச்சு நின்னுட்டாங்க.
வெறும் 30 பந்துகள்ல மூன்றிலக்க எண்ணான 100-ஐ எட்டிட்டாரு. சிக்ஸர்களும் பவுண்டரிகளும் எண்ணுறதுக்கே டயர்ட் ஆகிடுச்சு. அந்த 100 ரன்கள அவரு எட்டுனப்போ அதுல 98 ரன்கள் பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள்ல தான் வந்திருச்சு. யோசிக்கவாச்சும் முடியுதா?
ஓடிலாம் ரன் எடுக்குறது அவரு ஸ்டைலே இல்ல, பவுண்டரி கயிறுக்கும் பந்துக்குமான பந்தத்த உறுதி ஆக்குறதுதானே அவரோட ஸ்டைல். 100 ரன்கள எட்டின பிறகும் 150-ஐ அடைய அதுக்கப்புறம் அவருக்கு 23 பந்துகள்தான் ஆச்சு.
ஸ்டேடியம் மொத்தமும் கொண்டாடித் தீர்த்துடுச்சு. 265.2 ன்ற ஸ்ட்ரைக்ரேட்லாம் என்ன ஒரு வெறித்தனம்!!!! கடைசி வரை அவரை ஆட்டமிழக்க வைக்கவே முடியல.
கெய்லுக்கு அடுத்தபடியான தனிப்பட்ட ஹை ஸ்கோரே தில்ஷன் அடிச்ச 33 தான். கோலி உள்ளிட்ட வேற பேட்ஸ்மேன்கள் யாருமே எதைப் பத்தியுமே கவலைப்படாம நான் ஸ்ட்ரைக்கர் எண்ட்ல இருந்து கைகளைத் தட்டாத குறையா விசில் அடிக்காத குறையாகதான் அவரோட இன்னிங்ஸ ரசிச்சுட்டுதான் இருந்தாங்க.
இதனால ஆர்சிபியோட ஸ்கோர் 263/5னு முடிஞ்சது. தொடர்ந்து ஆடுன புனே 133 ரன்களை மட்டுமே அடிக்க 130 ரன்கள் வித்தியாசத்தில ஜெயிச்சது. ஒரு அணியோட லோ ஸ்கோருக்கான ரெக்கார்டால அவமானத்த சந்திச்ச அனுபவமுள்ள ஆர்சிபிக்கு ஐபிஎல்லோட ஹை ஸ்கோர் ரெக்கார்டை கெய்ல்தான் படைக்க வச்சாரு. தனியொரு பேட்ஸ்மேன் ஒருத்தரோட அதிகபட்ச ஸ்கோரும் இதுதான்.
பத்து வருஷம் ஆனாலும் இந்த சாதனைகள வேறு எந்த அணியாலும் நெருங்க முடியுதுன்னாலும் சமன்படுத்தவோ தாண்டவோ முடியல, கெய்ல் ஆடுன ருத்ர தாண்டவம் அப்படிப்பட்டது.